Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

சுக்ரீவன் வாலியை சண்டைக்கு அழைத்தல்!...

இராமர், கற்புடைய பெண்கள் கணவர் இறந்தபின் தான் அணிகலன்களை கழற்றி எறிவார்கள். நான் உயிருடன் இருக்கும்போதே சீதை இந்த அணிகலன்களை கழற்றி எறிந்துவிட்டாள்.

இதனால் நான் இறந்ததிற்கு சமமாகிவிட்டேன் என்று புலம்பி வருந்தினார். சுக்ரீவா! நான் ராஜ குலத்தில் பிறந்தும் என் மனைவியை காப்பாற்ற முடியாமல் இவ்வளவு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மக்கள் அனைவரும் என்னை பழி தூற்றுவார்களே. நான் என்ன செய்வேன் என புலம்பி அழுதார். சுக்ரீவன், தங்களின் தேவி எங்கு இருந்தாலும் தங்களிடம் சேர்ப்பேன். தாங்கள் மனம் தளர வேண்டாம் என்றான்.

அனுமன் இராமரிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். நாம் வாலியை வென்று விட்டால் கிஷ்கிந்தையில் உள்ள மற்ற வானரங்களும் நம் வசம் ஆகிவிடுவர். பிறகு நாம் விரைவில் இராவணனை கொன்று சீதையை மீட்டு விடலாம் என்றான்.

சுக்ரீவன், அனுமனின் சொற்களை கேட்டு இராமர் சமாதானம் ஆனார். ஆதலால், வாலியிடம் சண்டையை நாம் நாளை வைத்துக் கொள்ளலாம் என்றான் அனுமன். இராமரும் அனுமனின் யோசனையை ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அச்சோலையில் ஓய்வெடுத்தனர். பிறகு அனைவரும் கிஷ்கிந்தை நோக்கி பயணம் செய்தனர். அங்கு அவர்கள் ஒரு சோலையில் தங்கினார்கள்.

இராமர் சுக்ரீவனை அழைத்து, சுக்ரீவா! நீ வாலியை சண்டைக்கு அழைக்கவும். பிறகு நான் வாலியை வதைப்பேன் என்றார். சுக்ரீவனுக்கு வாலியிடம் போர் செய்ய தைரியம் இல்லை என்றாலும் இராமனின் கட்டளையை ஏற்றுக் கொண்டான். பிறகு சுக்ரீவன், வாலி! எங்கே இருக்கிறாய். தைரியம் இருந்தால் என்னுடன் வந்து போரிடு. உன்னை இன்று நான் கொல்வேன் என்று கூக்குரலிட்டு அழைத்தான். அப்போது வாலி அரண்மனையில் பஞ்சணையில் படுத்து இருந்தான். சுக்ரீவனின் குரலைக் கேட்டு சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டு எழுந்தான். பிறகு தான் தெரிந்தது அக்குரல் சுக்ரீவனின் குரல் என்று.

தனக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருந்த சுக்ரீவன், இன்று தன்னை சண்டைக்கு அழைப்பதை நினைத்து ஏளனமாக சிரித்தான் வாலி. பின் அவன் கோபத்தில் அரக்கன் போல் படுக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கையில் இருந்து எழுந்த வேகத்தில் மரங்கள், மலைகள் எல்லாம் ஆடின. பிறகு, வருகிறேன்! வருகிறேன்! எனக் கூறிக் கொண்டு வெளியே வந்தான். அப்போது வாலியின் மனைவி தாரை போக வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினாள். வாலி மனைவியிடம், ஒரு செயலில் வெற்றி பெற போகும்போது மனைவி தடுத்தால் அச்செயல் நிறைவேறாது என்பது காலங்காலமாய் பின்பற்றி வரும் நம்பிக்கை என்பதை தெரிந்தும், எதற்காக என்னை தடுக்கிறாய் எனக் கேட்டான். என்னைத் தடுக்காதே! நான் உடனே சென்று சுக்ரீவனை கொன்று வருகிறேன் என்றான் வாலி.

தாரை வாலியிடம், மன்னரே! தங்களைப் பார்த்து ஓடி ஒளிந்த சுக்ரீவன், இன்று தங்களை எதிர்த்து நிற்கிறான் என்றால், அவனுக்கு புதுமையாக வந்த வலிமை அல்ல அவனுக்கு துணையாக யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்றாள். வாலி, பெண்ணே! அனைத்து உலகங்களும் ஒன்று திரண்டு வந்தாலும், யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அது மட்டுமின்றி என்னை யார் எதிர்த்தாலும் அவர்களிடம் உள்ள பாதி வலிமையும், வரமும் என்னிடம் சேரும்படி வரத்தினை பெற்றுள்ளேன். ஆகையால் என்னை எதிர்க்க எவராலும் முடியாது. அதனால் நீ பயம் கொள்ள வேண்டாம் என்றான்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக