வியாழன், 19 மார்ச், 2020

அனுமனின் சொல் திறமை!...


 ரவு சூழ்ந்து, சந்திரன் தோன்றினான். பிறகு இராமரும் இலட்சுமணரும் தூங்கச் சென்றனர். இராமர் மட்டும் தூங்காமல் மனதை வருந்திக் கொண்டு இருந்தார். பொழுது விடிந்தது. இராம இலட்சுமணர் பம்பையில் நீராடி காலை கடமைகளை முடித்தனர். பிறகு சுக்ரீவனை தேடிக் கொண்டு பயணத்தை தொடங்கினர்.

 அவர்கள் சவரி காட்டிய வழியில் வெகுதூரம் நடந்து ருசியமுக மலைப்பகுதியை கண்டனர். அங்கு தான் சுக்ரீவன் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அம்மலையை நோக்கி இருவரும் நடந்து சென்றனர். இராம இலட்சுமணர் மலையை நோக்கி வருவதைக் கண்ட சுக்ரீவன் தன்னை கொல்ல வாலி அனுப்பிய ஆட்களாக இருக்கக்கூடும் என பயந்து நடுங்கினான். சுக்ரீவனின் உடன் இருந்த மற்ற வானரங்கள் எல்லாம் பயந்து ஒளிந்துக் கொண்டன. ஆனால் அங்கு சுக்ரீவனுக்கு துணையாக இருந்த அனுமன் இராம இலட்சுமணரைக் கண்டு பயப்படவில்லை. அனுமன் நன்கு கற்றுத் தேர்ந்தவன். அது மட்டுமின்றி அனுமனிடத்தில் ஒரு விஷேச குணமும் உண்டு. தன் உணர்வினால் எதிர்நோக்கி வருபவர் யார்? எத்தகையவர்? என்பதை அறியும் ஆற்றல் உடையவர். அதனால் அனுமன் சுக்ரீவனிடம், நீ பயப்படாமல் இங்கேயே ஒளிந்துக்கொள். நான் சென்று, வருபவர் யார் என்பதை அறிந்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு மரத்தின் பின் மறைந்துக் கொண்டு இராம இலட்சுமணரை உற்று நோக்கினான்.

 இவர்களை பார்த்தால் தேவர்கள் போல் தெரிகிறார்கள். இவர்கள் யார் என்று எளிதாக கண்டுப்பிடிக்க முடியவில்லையே. இவர்களின் முகங்களை பார்த்தால் ஏதோ மிகப்பெரிய பொருளை தொலைத்தது போல் தெரிகிறதே. தொலைத்த பொருளை தேடி வருபவர்கள் போல் தெரிகிறது. இவர்கள் தர்ம நெறியில் நடப்பவர்கள் போல் தெரிகிறது. இவர்களுடைய முகத்தை பார்த்தால் அன்பு, பாசம், கருணை, பண்பு, ஒழுக்கம், அழகு நிறைந்து விளங்குகிறது. இவர்கள் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் பொன் போல் இருக்கின்றன. இவர்கள் அஞ்சா நெஞ்சம் உடையவர்கள். இவர்கள் நல்வழியில் செல்பவர்கள். இவர்களை பார்த்து என் உள்ளம் உருகுகின்றதே என எண்ணிக் கொண்டு இருந்தான்.

 இராமரும் இலட்சுமணரும் அனுமனின் அருகில் வந்தனர். இராமர் அனுமனை பார்த்து, நற்குணம் நிறைந்த தம்பி! நீ யார் என வினவினார். அதற்கு அனுமன், இராமரை வணங்கி, ஐயனே! நான் அஞ்சனா தேவியின் மகன் ஆவேன். என் பெயர் அனுமன். இம்மலையில் வாழும் சுக்ரீவனின் பணியாள் என்றான். இராமர் அனுமனிடம், ஐயனே! நாங்கள் இங்கு சுக்ரீவனை காண தான் வந்துள்ளோம். சுக்ரீவன் எங்கு உள்ளார் என்று சொல்லுங்கள். நாங்கள் சுக்ரீவனை உடனே காண வேண்டும் என்றார். இதைக் கேட்ட அனுமன் சிறிது சிந்தித்தான். இவர்கள் வாலி அனுப்பியவர்களாக இருந்தால், இவர்களின் முகத்தில் கோபத்தீ தான் தெரிய வேண்டும். ஒருவேளை நான் சுக்ரீவனை காட்டி, இவர்கள் சுக்ரீவனை கொன்று விட்டால் பெரும் தீங்கு ஏற்பட்டு விடுமே? இவர்கள் யார் என்பதும் தெரியவில்லை. இவர்களை எப்படி உள்ளே அனுமதிப்பது? இவர்களை இங்கேயே இருக்கச் சொல்வோம் என மனதில் நினைத்துக் கொண்டான்.

அனுமன் இராமரை பார்த்து! பெரியவர்கள் எப்போதும் சிறியவர்களை பார்க்க வரக்கூடாது. சிறியவர்கள் தான் பெரியவர்களை பார்க்க வர வேண்டும். ஆதலால் தாங்கள் இங்கேயே இருங்கள், நான் சென்று சுக்ரீவனை அழைத்து வருகிறேன். சுக்ரீவன் தன்னை யார் காண வந்துள்ளார்கள் எனக் கேட்டால் நான் அவரிடம் தங்களை யார் என்று கூறுவேன் எனக் கேட்டான். உடனே இராமர் இலட்சுமணனிடம், இலட்சுமணா! இந்த வானர வீரனின் சொல்லின் திறமையை பார்த்தாயா? இவன் எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன். நம்மை யார் என்று தெரிந்து கொள்ள எவ்வாறு நுணுக்கமாக கேள்வியை எழுப்பியுள்ளான். இவனின் சொல்லின் திறமையை நான் பாராட்டுகிறேன் என்றார்.

தொடரும்.....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்