உலகில்
உள்ள அனைவரும் எப்பாடு பட்டாயினும் வெற்றி பெற விழைகிறோம். நாம் எந்தத் துறையில்,
எந்தச் செயலை செய்தாலும், அதில் நாம் முன்னோடியாய் இருக்க விழைகிறோம். அதற்காக
நாம் பல்வேறு முயற்சிகள், அணுகுமுறைகள், ஆயத்தங்கள் ஆகியவற்றை மேற்கொள்கிறோம்.
அங்ஙனம், நாம் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மற்றும் ஆயத்தங்கள் மூலம் நாம்
வெற்றிக்கான சரியான பாதையை மேற்கொள்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும். அதை பற்றிய
சிறுகதை :
ஆற்றில்
வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று
கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு
காளை மாடு அங்கே வந்தது.
அதுவும்
அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே
ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன்
குபீர் என்று ஆற்றில் குதித்தான்.
அந்தக்
காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். காளை மாடு சுலபமாக அவனை
இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது. அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு
'வால்" கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில்
குதித்தது.
இதுதான்
நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.
இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை.
ஒரு
கட்டத்தில் நாய், 'வாள்... வாள்" என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு
இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நாயும், அவனும் போக வேண்டிய திசை வேறு. போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.
சிலர்
காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக்
கொள்கிறார்கள். ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே
ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப்
பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக்
கொண்டிருக்கிறான்.
கரையில்
நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்... ''நண்பா... கம்பளி மூட்டையை
இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை
விட்டுவிடு!"" ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ''நான் இதை
எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி
மூட்டை இல்லே. கரடிக் குட்டி!""
தத்துவம் :
தவறாகப்
பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள். சரியாகப் பற்றுகிறவர்கள் கரையேறி
விடுகிறார்கள். நாம் மேற்கொண்டுள்ள குறிக்கோளை அடையவும் பல வழிமுறைகள் இருக்கலாம்.
அவற்றில் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது அவசியமாகும். அப்படி தேர்ந்தெடுக்கும்
வழிகளில் நமது குறிக்கோளை நோக்கி நமது பயணம் தொடர வேண்டும். நமது குறிக்கோளை
மனதில் பதிய வைக்க வேண்டும். நமது குறிக்கோளை அடைய வேண்டும் என்ற துடிப்பு மட்டும்
குறையக் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக