சூரியனின் அருளால், அருணி என்னும் குரங்கின அரசிக்கு பிறந்தவன் சுக்ரீவன். இவனது அண்ணன் வாலி இந்திரனின் அருளால் தோன்றியவன். இவர்களில் வாலி, வானரகுல அரசனாகவும், சுக்ரீவன் இளவரசனாகவும் கிஷ்கிந்தை நாட்டை ஒற்றுமையுடன் ஆட்சி செய்து வந்தனர். கிஷ்;கிந்தா பகுதியில் மாயாவி என்னும் அரக்கன் எல்லோரையும் துன்புறுத்தி வந்தான்.
அவனிடம் யுத்தம் செய்ய முடிவு செய்த வாலியும், சுக்ரீவனும் அரக்கனை விரட்டி சென்றனர். அப்போது அந்த அரக்கன் ஒரு நீண்ட பொந்து கொண்ட குகைக்குள் புகுந்து கொண்டான். சுக்ரீவனை காட்டிலும் வாலி வீரத்திலும், வலிமையிலும் சிறந்தவன் என்பதால், வாலி தன் தம்பி சுக்ரீவனிடம், தம்பி! வேறு எந்த அரக்கனும் குகைக்குள் நுழையாதபடி நீ வெளியே வாசலில் நின்று பார்த்துக் கொள்.
நான் குகைக்குள் உள்ள பொந்தில் ஒளிந்து கொண்டு இருக்கும், அரக்கனை கொன்று விட்டு வருகிறேன் என்று சொல்லி வாலி குகைக்குள் சென்றான். அவர்களின் சண்டை நாள் கணக்கில் நடந்தது. அவர்கள் செய்யும் சண்டையில் இரத்தம் குகைக்கு வெளியில் வந்தது.
இதனைப் பார்த்த சுக்ரீவன் அரக்கன் அண்ணனை கொன்று விட்டான் என நினைத்துக் கொண்டான். வெளியில் வந்தால் தன்னையும் கொன்று விடுவான் என பயந்து குகையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். சில நாட்களில் வாலி அரக்கனை கொன்றுவிட்டு, வெளியில் செல்ல குகையின் வாயிலுக்கு வந்தான். ஆனால் அக்குகையின் வாயில் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு வாலி மிகவும் அதிர்ச்சி அடைந்தான். பிறகு மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கல்லை நகர்த்தி வெளியே வந்தான். ஒரு வழியாக கிஷ்;கிந்தா வந்து சேர்ந்தான். அங்கு கிஷ்;கிந்தாவில் சுக்ரீவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து வருவதை கண்டான். தன் தம்பி சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அரசனாகவே, தன்னைக் கொல்வதற்காக குகையின் வெளியில் கல்லை வைத்து வாசலை அடைத்ததாக வாலி நினைத்தான். இதனால் சுக்ரீவன் மேல் வாலிக்கு மிகுந்த கோபம் உண்டானது. சுக்ரீவனை கொல்ல வேண்டும் என நினைத்தான்.
உடனே வாலி, சுக்ரீவனிடம் சென்று, நீ என்னை ஏமாற்றி அரச பதவியை பறித்து கொள்ளலாம் என நினைத்தாயா? எனக் கேட்டான். சுக்ரீவன் எவ்வளவோ சொல்ல முன் வந்தும் அதை சிறிதும் கேட்கவில்லை வாலி. பிறகு சுக்ரீவனிடம் இருந்து அரச பதவியை பறித்துக் கொண்டு அவனை மிகவும் துன்புறுத்தி வந்தான். சுக்ரீவன் வாலியிடம் இருந்து தப்பிக்க காட்டுக்கும், மலைக்கும் என மாறி மாறி ஓடி ஒளிந்துக் கொண்டான். ஆனால் வாலியோ, சுக்ரீவன் எங்கு சென்றாலும் விடாமல் துரத்தி துன்புறுத்தி வந்தான். கடைசியில் சுக்ரீவன், வாலி மதங்க முனிவரால் சாபம் பெற்ற ருசியமுக மலைக்கு சென்று ஒளிந்துக் கொண்டான். அம்மலைக்கு வாலி சென்றால் அவனது தலை வெடித்து விடும் என்பது முனிவரின் சாபமாகும். அந்த சாபத்துக்கு அஞ்சிய வாலி அம்மலைக்கு வருவதில்லை. இதனால் கோபங்கொண்ட வாலி, சுக்ரீவனின் மனைவி ருமாவை கவர்ந்து சென்று அந்தப்புரத்தில் சிறை வைத்தான்.
தொடரும்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக