பிரஹதஸ்வர் முனிவர், பாண்டவர்களிடம் இருந்து விடைபெற்று சென்றார். அதன் பிறகு உரோமச முனிவர், பாண்டவர்களை சந்தித்தார். அவர் பாண்டவர்களிடம், நீங்கள் அனைவரும் அர்ஜூனன் தேவலோகத்தில் இருந்து திரும்பி வரும்வரை தீர்த்த யாத்திரை செல்லுங்கள். தீர்த்த யாத்திரை மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு மேலான புண்ணியங்கள் உண்டாகும் எனக் கூறினார். முனிவரின் ஆலோசனைப்படி பாண்டவர்கள் தீர்த்த யாத்திரை மேற்கொண்டனர். பாண்டவர்கள் பல புண்ணிய தலங்களுக்கு சென்று நீராடினர். இந்த யாத்திரை மூலம் பாண்டவர்கள், அனுபவங்கள் பல பெற்றனர். கடைசியில் அவர்கள் கைலாய மலைக்கு சென்றனர். அங்கு சித்தர்களின் ஆசியைப் பெற்றனர். சிறிது காலம் அங்கு தங்கினர். ஒரு நாள் திரௌபதி மலர்களின் மணத்தால் மிகவும் கவரப்பட்டாள்.
அம்மலரை தேடி நறுமணம் வரும் திசையை நோக்கி சென்றாள். சிறிது தூரம் சென்ற பிறகு சௌகந்திகம் என்னும் மலரில் இருந்து தான் இத்தகைய மணம் வருகிறது என்பதை உணர்ந்தாள். அப்பொழுது பீமன் திரௌபதியை தேடி அங்கு வந்தான். பீமனிடம், இந்த மலர் மிகவும் நறுமணத்துடனும் இருக்கிறது. எனக்கு இந்த மலர் வேண்டும். தாங்கள் விரைந்து சென்று இந்த மலரை பறித்துக் கொண்டு வாருங்கள் எனக் கூறினாள். அந்த மலரை தேடி பீமன் சென்றான். எங்கு தேடியும் அவ்வித மலரை பீமனால் கண்டுபிடிக்க முடியவில்லை. போகும் வழியில் பீமன் ஒரு முனிவரை கண்டான்.
முனிவரிடம், எனக்கு சௌகந்திகம் என்னும் மலர் வேண்டும். அம்மலர் எங்குள்ளது என்று எனக்கு தாங்கள் கூறுவீர்களா? என்றான். முனிவர் பீமனிடம், பீமா! அம்மலர் குபேரரின் வசத்தில் உள்ளது. நீ குபேரபுரி சென்றால் மட்டுமே இம்மலரை பறிக்க முடியும் எனக் கூறினார். அதன் பிறகு பீமன் அங்கிருந்து குபேரபுரியை நோக்கி விரைந்து சென்றான். பீமன் சென்ற வேகத்தில் மரங்கள், செடிகள் எல்லாம் குலுங்கின. திடீரென்று பீமனின் வேகத்தில் தடைப்பட்டது. வழியில் ஒரு குரங்கு பீமனை மறித்து படுத்திருந்தது.
பீமன், குரங்கை பார்த்து, வானரமே! எதற்காக வழியை மறித்து படுத்துக் கொண்டு இருக்கிறாய். எழுந்து எனக்கு வழியை விடு என்றான். வானரம், நான் வயதான குரங்கு. என்னால் எழ முடியவில்லை. நீ அவரசரமாக செல்ல வேண்டுமென்றால் என்னை தாண்டிச் செல் என்றது. பீமன், பிராணிகளை தாண்டிச் செல்லலாகாது. உன்னை தாண்டுவது எனக்கு கஷ்டமான செயல் அல்ல. என் அண்ணன் அனுமன் கடலை தாண்டியது போல் உன்னையும் தாவிச் சென்றிருப்பேன் என்றான். அதைக்கேட்ட வானரம், அனுமனா? அவன் யார்? எனக் கேட்டான்.
என் அண்ணன் அனுமன், சீதையை தேடுவதற்காக கடலைத் தாண்டியவர் என்பது உனக்குத் தெரியாதா? பலத்திலும் நான் என் அண்ணன் அனுமனுக்கு சமமானவன். இதை உன்னிடம் சொல்வதில் என்ன பயன்? நான் விரைந்து செல்ல வேண்டியிருக்கிறது. அதனால் நீ எனக்கு வழியை விடு. இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் என்றான். வானரம், வீரனே! நீ என் மேல் கோபம் கொள்ள வேண்டாம். எழுவதற்கு என் உடலில் சக்தி இல்லை. நீ அவசரமாக செல்ல வேண்டி இருந்தால், என்னுடைய வாலை சிறிது நகர்த்திவிட்டு செல்! என்றது.
உடனே பீமன், இந்த வானரமிடம் வீண் விவாதம் செய்வதால் எந்த பயனும் இல்லை. அதனால் இக்குரங்கின் வாலை நகர்த்திவிட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான். குரங்கின் வாலைப் பிடித்து நகர்த்த முயன்றான். பீமனால் குரங்கின் வாலை சிறிதுகூட அசைக்க முடியவில்லை. பலசாலியான நான் இந்த குரங்கின் வாலை சிறிது கூட அசைக்க முடியவில்லையே என பீமன் வியப்படைந்தான். பிறகு தன் முழுபலத்தையும் ஒன்று சேர்த்து வாலை நகர்த்தி பார்த்தான். அப்பொழுதும் முடியவில்லை. இதனால் பீமன், தலை குனிந்து நின்றான்.
பீமன் குரங்கைப் பார்த்து, வானரமே! உன் வாலை என்னால் சிறிதும் அசைக்க முடியவில்லை. நீ யார்? என்பதை எனக்கு சொல் என்றான். வானரம் பீமனிடம், வீரனே! நான் வாயு புத்திரன் அனுமன். நீயும் வாயு புத்திரன் என்பதை நான் அறிவேன். அந்த வகையில் நீ என் சகோதரன் ஆவாய். தம்பி, பீமா! உன்னை நான் வழி மறித்ததற்கு காரணம், இந்த வழியில் நீ சென்றால் ஆபத்துக்கு உள்ளாவாய். அதனால் தான் உன்னை தடுத்தேன். இந்த வழியில் மனிதர்களால் செல்ல முடியாது.
நீ தேடி வந்த சௌகந்திகம் என்னும் மலர் இருக்கும் இடம் அதோ! அத்திசையில் உள்ளது என்றார். பீமன், நான் தங்களை கண்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களை கண்டதில் என்னைக் காட்டிலும் பாக்கியசாலி யாருமில்லை. நான் தங்களின் முழு உருவத்தை காண விரும்புகிறேன் என வேண்டினான். பீமன் வேண்டிக் கொண்டதால், அனுமன் தன் முழு உருவத்தையும் பீமனுக்கு காட்சி அளித்தார். பீமன், அனுமனை மனதார தரிசித்தார். அதன் பின் அனுமன், தன் உருவத்தை பழைய உருவில் மாற்றிக் கொண்டார். பீமனை அன்போடு தழுவிக் கொண்டார்.
அனுமன் பீமனிடம், பீமனே! நான் உன்னைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு வேண்டும் வரத்தை என்னிடம் கேள் என்றார்.
தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக