பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதி மயிலாப்பூர் என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கைலாச மலையில் பிரம்மா கடவுள் ஈசனின் வலிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை (கபாலத்தை) திருகி கொய்துவிட்டதாகவும், தன் தவறை உணர்ந்த பிரம்மா இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக புராணக்கதைகளில் சொல்லப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்களால் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது. பின்னர் இக்கோவிலை போர்த்துகீசியர்கள் சிதைத்தனர்.
பிறகு விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் மறுபடியும் கபாலீஸ்வரர் கோவில் கட்டப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இக்கோவில் திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.
பல்வேறு பரிவார மூர்த்திகளும், 63 நயன்மார்களும் இக்கோயிலில் காண முடியும். இக்கோயில் சுற்றி நாற்புறமும் மாடவீதிகளும், அழகிய கோபுரங்களும், திருக்குளம் கொண்டு அழகாக காட்சி அளிக்கிறது.
இக்கோவில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை பக்தர்கள் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.
இக்கோயில் மேற்கு நோக்கிய வாயிலின் முன்புறம் நீராழி மண்டபத்தோடு கூடிய பெரிய திருக்குளம் காணப்படுகிறது. இந்த குளம் கபாலி தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.
கடவுள் தீர்த்தம், வேத தீர்த்தம், வாலி தீர்த்தம், கங்கை தீர்த்தம், வெள்ளி தீர்த்தம், ராம தீர்த்தம் என்றும் இதற்கு பல பெயர்கள் உண்டு.
பங்குனி மாதம் பவுர்ணமியை தீர்த்த நாளாகக் கொண்டு 10 நாள் பங்குனி உற்சவம், வசந்த உற்சவம், நவராத்திரி, கந்தர் சஷ்டி, திருவாதிரை விழா என திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
கிழக்குப்பகுதியில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. சுமார் 120 அடி உயரம் கொண்டது. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிரகாரம்.
சிவலிங்க திருமேனியோடு மேற்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறார் கபாலீஸ்வரர். இந்த கருவறை பிரகாரத்தில் சந்திரசேகரர், அறுபத்துமூவர், தொகையடியார் ஒன்பது பேர், சிவநேசர், அங்கம் பூம்பாவை உலா திருமேனி வரிசையில் உள்ளன.
கபாலீசுவரர் சந்நிதிக்கு வலப்புறத்தில் தெற்கு நோக்கிய தனிக்கோயிலில் கற்பகவல்லி தாய் வீற்றிருக்கிறார்.
ராஜகோபுரம் அமைந்துள்ள கிழக்கு வாயில் எதிரே நர்த்தன விநாயகர் உள்ளார். சனி பகவானுக்கு இக்கோயிலில் தனிச் சந்நிதி இருக்கிறது.
நவக்கிரகங்களும் உள்ளன. கபாலீசுவரரை நோக்கியபடி நந்தி அமைந்துள்ளது. நந்தியை ஒட்டினாற்போல் கொடிமரமும், பலி பீடமும் இருக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக