Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 6 மார்ச், 2020

கச்சத்தீவு: அந்தோணியார் திருவிழா கோலாகல தொடக்கம்!


Image result for கச்சத்தீவு: அந்தோணியார் திருவிழா கோலாகல தொடக்கம்!

ச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, இலங்கையில் இருந்து பத்தாயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.


ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் கடந்த 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை நிறுவினர். அதன் பிறகு ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 74 விசைப்படகுகள், 24 நாட்டுப் படகுகளில் செல்ல அனுமதி பெறப்பட்டு 2,881 பயணிகள் செல்ல அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை சுங்கத் துறை சோதனைக்குப் பிறகு அதிகாலை 6 மணி முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகுகள் கச்சத்தீவு செல்லத் தொடங்கும். மறுநாள் (சனிக்கிழமை) திருவிழா முடிந்ததும் காலை 10 மணிக்கு கச்சத்தீவில் இருந்து புறப்பட்டு அனைத்து விசைப்படகுகளும் மாலை 5 மணிக்குள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை வந்தடையும்.

திருவிழாவுக்கு வருபவர்கள் மதுபானங்களை எடுத்து வரவோ,மது அருந்திவிட்டு வரவோ, புகைபிடிக்கவோ, தடை செய்யப்பட்ட பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வரவோ அனுமதி கிடையாது. மடிக்கணினி, கேமரா உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சத்தீவில் உணவு சமைக்கவோ, சேலை, கைலி, துணிவகைகள், சோப்பு, எண்ணெய் போன்ற வியாபாரம் மற்றும் பண்டமாற்றம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒருநபர் ரூ.5,000 வரை எடுத்துச் செல்லாம். திருவிழாவை முன்னிட்டு கச்சத்தீவில் இந்திய ரூபாயை இலங்கை ரூபாயாக மாற்ற இலங்கை அரசு 2 தினங்களுக்கு வங்கி சேவையையும் அனுமதித்துள்ளது. கச்சத்தீவில் திருவிழாவின்போது குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை இலங்கை கடற்படையினர் செய்து வருகின்றனர்.

அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் இன்று மாலை 5 மணி அளவில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கும். தொடர்ந்து சிலுவைப் பாதை திருப்பலி பூஜையும், சிறப்புப் பூஜைகளும் நடைபெறும். இரவு அந்தோணியார் தேர் பவனி நடைபெறும்.

திருவிழாவின் 2ஆவது நாளான சனிக்கிழமை காலை 6 மணி அளவில் சிறப்புத் திருப்பலி பூஜைகள் தமிழ், சிங்கள மொழிகளில் நடைபெறும். திருப்பலி பூஜைக்குப் பிறகு தேர் பவனியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று திருவிழா முடிவடையும்.

கச்சத்தீவு செல்லும் பக்தர்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து பயணம் இனிதாக நடைபெற வாழ்த்து தெரிவித்ததோடு, பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பாதுகாப்பாக வரவேண்டுமென அறிவுரை வழங்கினார். முன்னதாக கச்சத்தீவு செல்லும் பயணிகளை சோதனை செய்யும் அதிகாரிகளிடம் சோதனை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பக்தர்கள் செல்லும் படிகளில் ஏறி பக்தர்களுக்கு கையசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், கச்சத்தீவு செல்லும் ஒவ்வொரு பயணிகளும் பாதுகாப்பு கவசங்கள் லைப் ஜாக்கெட் அணிந்திருக்க வேண்டும், கச்சத்தீவு செல்லும் பக்தர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி பயணிகளுக்கு குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழக காவல்துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை உள்ளிட்ட 755 பேர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் இதுவரை சீனாவிலிருந்து 300க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். அவர்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களுக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை எனவும் தெரிவித்தார். ஆகையால் பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கச்சத்தீவு திருவிழாவிற்கு சென்று வருமாறு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக