Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 31 மார்ச், 2020

கர்ணனின் கொடைத்திறன்...!

யட்சன், தர்மரின் பதிலில் மிகவும் மகிழ்ந்தார். தர்மனே! உனது பதில்கள் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உனக்கு வேண்டும் வரத்தை என்னிடம் கேள்? என்றார். யட்சனே! என் உடன்பிறவா சகோதரர்களான நகுலன் மற்றும் சகாதேவன் உயிர் பெற்று எழ வேண்டும் எனக் கேட்டான். 

யட்சன், தருமனே! நீ உன் உடன் பிறந்த சகோதரர்களை தவிர்த்து நகுலன் மற்றும் சகாதேவன் உயிர் பெற நினைப்பது ஏன்? என வினவினார். தருமர், யட்சனே! எங்கள் தந்தைக்கு குந்தி, மாத்ரி என இரு மனைவிகள். இருவருமே எங்களுக்கு அன்னை தான். அவர்கள் இருவரின் புதல்வர்களும் உயிர் வாழ விரும்புகிறேன். குந்தியின் புதல்வனான நான் உயிரோடு இருக்கிறேன். அதேபோல் அன்னை மாத்ரியின் புதல்வர்களும் உயிர் பெற வேண்டும் என விரும்புகிறேன் எனக் கூறினான்.

தருமரின், பரந்த மனதையும், தியாக உணர்வையும் எண்ணி மகிழ்ந்த யட்சன், உன் சகோதரர்கள் அனைவரும் உயிர் பெற்று எழுவர் எனக் கூறினார். அதன்பின் சகோதரர்கள அனைவரும் புத்துயிர் பெற்று எழுவது போல் எழுந்து நின்றனர்.

 தர்மர், யட்சனே! நீ பல கேள்விகள் என்னிடம் கேட்டாய். நான் உன்னிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன் என்றான். சரி, உனது கேள்வியை நீ கேள் என்றார். தர்மர், யட்சனே! பலம் பொருந்திய, எவராலும் வெல்ல முடியாத எனது சகோதரர்களை மாய்த்து, உயிர் பெறச் செய்த தாங்கள் யார்? என வினவினான்.

 யட்சன், மகனே! நான் உனது தந்தை யமதர்மன். உங்களது கொள்கையில் நீங்கள் எவ்வளவு முனைப்புடன் இருக்கின்றீர்கள் என்பதை அறியவே, மான் உருவேடுத்து முனிவரின் கடைக்கோலை எடுத்துக் கொண்டு வந்தேன் என்றார்.

தருமர், தந்தையே! முனிவரின் கடைக்கோலை தேடியல்லவா நாங்கள் வந்தோம். தாங்கள் கடைக்கோலை எங்களிடம் கொடுக்க வேண்டும் என வேண்டினான். எமதர்மர், மகனே! கடைக்கோலை தருகிறேன் எனக்கூறி கொடுத்தார். மகனே! நீ உனது கொள்கையில் சித்தமாய் இருக்கின்றாய். உனது கொள்கையில் வெற்றி பெற எனது ஆசிர்வாதம் உன்னிடம் இருக்கும் எனக் கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார். பிறகு பாண்டவர்கள் அங்கிருந்து பர்ணசாலைக்கு வந்தனர். முனிவரிடம் கடைக்கோலை கொடுத்தனர். முனிவர் கடைக்கோலை பெற்றுக் கொண்டு பாண்டவர்களை வாழ்த்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

'அள்ளி கொடுப்பதில் கர்ணனுக்கு நிகர் யாருமில்லை" என்னும் அளவிற்கு கொடை வள்ளலாக திகழ்ந்தவன் கர்ணன். கர்ணனைப் பார்க்க வருபவர்கள் எப்பேர்ப்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் கர்ணனின் அழைப்பு இருந்தால் மட்டுமே அவனைப் பார்க்க இயலும். ஆனால் வறியவர்களுக்கு மட்டும் இதில் விலக்கு உண்டு. 

அவர்கள் எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் கர்ணனை முன் அனுமதியின்றி பார்க்க ஆணையிட்டிருந்தான். ஒருநாள் கர்ணன் எண்ணெய்க்குளியல் எடுத்துக்கொண்டிருந்தான். அப்பொழுது வறியவன் ஒருவன் கர்ணனை தேடி அங்கு வந்தான். வறியவர் என்பதால் அவனை தடுக்காமல் உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளே சென்ற வறியவர், கர்ணன் எண்ணெய்க்குளியலில் இருப்பதைக் கண்டான்.

கர்ணன் வறியவரை கண்டவுடன் புன்முறுவல் செய்தான். வாருங்கள் வறியவரே! என வரவேற்றான். வறியவர், தான் மிகுந்த வறுமையில் இருப்பதாகவும், தனக்கு ஏதேனும் பொருள் தந்து உதவுமாறும் வேண்டினான். தான் எண்ணெய்க்குளியலில் இருப்பதால் வறியருக்கு உதவ முடியாமல் போய் விடுமோ என கர்ணன் பயந்தான். உடனே சுற்றும் முற்றும் பார்த்தான். தன் பக்கத்தில் இருந்த வேலையாள் ஒருவன், தங்க கிண்ணத்தில் எண்ணெய் வைத்திருப்பதை பார்த்தான். 

உடனே அக்கிண்ணத்தை இடதுகையால் வாங்கி, இடது கையாலேயே அவ்வறியருக்கு கொடுத்தான். வறியரும் அக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டார். ஆனால் கர்ணனிடம், தனக்கு இதில் ஒரு முரண்பாடு இருப்பதாக கூறினான். கர்ணன். என்ன முரண்பாடு? என வினாவினான். வறியவர், தாங்கள் இடது கையால் தானல் அளிக்கலாமா? எனக் கேட்டான்.

இதைக்கேட்டு சிரித்த கர்ணன், வறியவரே! இடது கையால் தானம் அளித்ததில் தவறில்லை என நினைக்கின்றேன். ஏனென்றால் நான் தங்களுக்கு கொடுக்க தங்க கிண்ணத்தை இடது கரத்தில் இருந்து வலது கரத்திற்கு மாற்றுவதற்குள் என் எண்ணம் மாறிவிடலாம் அல்லவா? இந்த தங்க கிண்ணம் தங்களுக்கு தேவைதானா? என யோசிக்கலாம். 

இதைவிட குறைந்த மதிப்பில் ஏதேனும் கொடுக்கலாம் என கூட தோன்றலாம். அதனால் தான் நான் உங்களுக்கு இடது கரத்தால் கொடுத்தேன் என பதில் கூறினான்.

ஒரு முறை கிருஷ்ணர், அர்ஜூனனிடம், கர்ணனின் கொடை திறமையை பற்றி பேசிக் கொண்டு இருந்தார். இது அர்ஜூனனுக்கு பிடிக்கவில்லை. கிருஷ்ணரிடம், கர்ணன் மட்டும் தான் சிறந்த கொடை வள்ளலா? நான் கொடை வள்ளலாக இருக்க முடியாதா? என விவாதித்தான். 

உடனே கிருஷ்ணர் யார் கொடையில் சிறந்தவர் என்பதை சோதித்து பார்த்துவிடலாம் எனக் கூறி ஒரு தங்க குன்றை உருவாக்கினார். அர்ஜூனனை அழைத்து, அர்ஜூனா! இந்தக் குன்று முழுவதையும் இன்று மாலைக்குள் நீ தானம் செய்து விட்டால், நீ கர்ணனை விட சிறந்த கொடை வள்ளல் என்று நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார். அர்ஜூனனும், தங்க குன்று தானமாக வழங்கப்படும் என ஊர் முழுக்க செய்தியை பரப்பச்செய்தான்.

இதை அறிந்து பல பேர் தங்க குன்றை தானமாகப் பெற வந்தனர். அர்ஜூனன், வருவோர் அனைவருக்கும் தங்கத்தை வெட்டி எடுத்து வழங்க ஆரம்பித்தான். எவ்வளவு குன்றும் தானமாக கொடுத்தாலும் அவனால் அன்று மாலைக்குள் பாதி அளவு குன்று கூட தானம் கொடுக்க முடியவில்லை. அப்பொழுது கர்ணன் அந்தப் பக்கமாக வந்தான். 

கிருஷ்ணர் கர்ணனை அழைத்து, கர்ணா! இந்த தங்க குன்றை நாளை காலைக்குள் தானமாக வழங்க வேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா? எனக் கேட்டார். கர்ணனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான். உடனே அந்த பக்கமாக வந்த பெரியவரை அழைத்து, இந்த தங்க குன்றை உங்களுக்கு தானமாக அளிக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறினான். இதில் ஒரு பங்கை நீங்கள் வைத்துக் கொண்டு மற்றவற்றை மக்களுக்கு கொடுங்கள் என்றான். பெரியவரும் தங்கக்குன்றை தானமாகப் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு கர்ணன் அங்கிருந்து சென்றுவிட்டான்.

கிருஷ்ணர் அர்ஜூனனிடம், அர்ஜூனா! இப்பொழுது உனக்கும், கர்ணனுக்கும் கொடை திறனில் உள்ள வித்தியாசம் புரிந்ததா? எனக் கூறினார். அர்ஜூனனும் தான் செய்தது தவறு என எண்ணினான்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக