தாயங்கள் உருட்டப்பட்டது. சகுனி தந்திரத்தால் இம்முறையும் துரியோதனனே வென்றான். துரியோதனன் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். இப்பொழுதிலிருந்து பாண்டவர்கள் உட்பட திரௌபதியும் என்னுடைய அடிமை என்றான். பாண்டவர்கள் துன்பத்தில் மூழ்கினர். துரியோதனன் ஏவலாளியை அழைத்து, திரௌபதியை எனக்கு பணிபுரிய அழைத்து வா. இது என் கட்டளை எனக் கூறி அனுப்பினான். அப்பொழுது விதுரர் எழுந்து, துரியோதனா! நீ இவ்வாறு செய்வது தர்மத்திற்கு உகந்தது அல்ல. நீ செய்யும் இச்செயலுக்கு நிச்சயம் பாண்டவர்கள் உன்னை பழி தீர்ப்பர். அதனால் பாண்டவர்களிடம் பணிந்து, அவர்களிடம் இருந்து பறித்தவற்றை திரும்பக் கொடுத்து விடு. இவ்வாறு நீ செய்யவில்லை என்றால் நிச்சயம் மகாபாரத போர் நிகழும். அப்போரில் நீ மாண்டு ஒழிவாய் என்பதை மனதில் கொள் என்றார்.
துரியோதனன் விதுரரின் சொற்களை செவிகளில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏவலாளியிடம், உடனே சென்று அவளை அழைத்து வா என்றான். ஏவலாளியும் திரௌபதியின் இருப்பிடத்தை அடைந்தான். திரௌபதியிடம், அம்மா! சபையில் நடந்த சூதாட்டத்தில் தர்மர் அவர்கள் பொன் பொருட்களை எல்லாம் இழந்து, இந்திரப்பிரஸ்தத்தையும் இழந்து, தம்பிகளையும் இழந்து, கடைசியில் தங்களையும் சூதில் பணயமாக வைத்து தோற்றுவிட்டார். அரசர் துரியோதனன் தங்களை அவைக்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டுள்ளார் என்றான். இதைக்கேட்ட திரௌபதி, அனைவரும் சூழ்ந்திருக்கும் சபையில் பெண்கள் வருவது மரபா? என்னை அழைத்து வரச்சொல்லி உன்னிடம் கூறியது யார்? எனக் கேட்டாள். ஏவலாளி, அரசர் துரியோதனன் தான் என்றான்.
அப்படியென்றால் தர்மர் சூதாடும்போது, என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? இல்லை தர்மர் தன்னை இழந்த பின் என்னை பணயம் வைத்தாரா? இக்கேள்விக்கான பதில் அறிந்து வா எனக் கூறி அனுப்பினாள். ஏவலாளி திரும்பி துரியோதனனிடம் சென்றான். அரசே! திரௌபதி அவர்கள், தர்மர் சூதாடும்போது, என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? இல்லை தர்மர் தன்னை இழந்த பின் என்னை பணயம் வைத்தாரா? இக்கேள்விக்கான பதிலை அறிந்து வரச்சொல்லி அனுப்பியுள்ளார் எனக் கூறினான். ஏவலாளி இவ்வாறு கூறியதைக் கேட்ட பாண்டவர்களின் கண்களில் கண்ணீர் ததும்பியது. துரியோதனன், மூடனே! நான் திரௌபதியை இங்கு அழைத்து வரும்படி கட்டளையிட்டுள்ளேன். நீயோ அவள் கேட்கும் கேள்விக்கு என்னிடம் பதில் கேட்கிறாய். உடனே சென்று அவளை அழைத்து வா எனக் கோபத்துடன் கூறினான்.
ஏவலாளி திரௌபதியின் மாளிகைக்குச் சென்றான். ஆனால் திரௌபதி மறுபடியும், தர்மர் சூதாடும்போது, என்னை முன்னே பணயம் வைத்து இழந்தாரா? இல்லை தர்மர் தன்னை இழந்த பின் என்னை பணயம் வைத்தாரா? இக்கேள்விக்கான பதில் அறிந்து வா எனக் கூறி அனுப்பினாள். இதனால் கவலையுற்ற ஏவலாளி என்ன செய்வதென்று தெரியாமல் திரும்பிச் சென்று நடந்தவற்றைக் கூறினான். துரியோதனன் ஏளனமாக பார்த்து சிரித்து, நீ ஏன் பயப்படுகிறாய். இந்த பாண்டவர்களை பார்த்து தான் பயப்படுகிறாயா? துச்சாதனனை அழைத்து, தம்பி நீ சென்று அந்த திரௌபதியை உடனே அழைத்து வா. அவள் வர மறுத்தால் அவளை பிடித்து இழுத்து வா எனக் கூறி அனுப்பினான்.
துச்சாதனன், திரௌபதி மாளிகைக்குச் சென்றான். ஏ! திரௌபதி இங்கே என்ன செய்து கொண்டு கொண்டிருக்கிறாய். நீ சூதில் எங்களிடம் தோற்றுவிட்டாய். இனி நீ பாண்டவர்களின் மனைவியும் அல்ல. துருபதனின் மகளும் அல்ல. இன்று முதல் நீ என் அண்ணனின் அடிமை ஆவாய். அந்த ஏவலாளியிடம் கூறியதுப் போல் என்னிடம் கூற முடியாது. வா! என் அண்ணனுக்கு வந்து பணிவிடை செய் எனக் கூறினான். திரௌபதி, துச்சாதனா! நான் உனது சகோதரர்களின் மனைவி. நீ என்னிடம் இவ்வாறு பேசுதல் மரபல்ல. உடன் பிறந்தோரின் மனைவியை சூதில் பணயமாக வைத்து விளையாடுவது உங்கள் குல மரபா?
என் கேள்விக்கான பதில் தெரியாமல் என்னால் சபைக்கு வர இயலாது என கடுமையாக கூறினாள். இதைக் கேட்டு கோபங்கொண்ட துச்சாதனன், திரௌபதியின் கூந்தலை பற்றிக் இழுக்க முற்பட்டான். அப்பொழுது திரௌபதி அவனை தடுத்து, உன்னால் என்னை தொட இயலாது. நான் தீயில் இருந்து தோன்றிய யாக்கியசேனை. என்னை தொடுவது என்பது நெருப்புக்கு சமமானது எனக் கூறினாள். இதனைக்கேட்டு மிகுந்த கோபம் கொண்ட துச்சாதனன், மீண்டும் திரௌபதியை பற்றி இழுக்க முற்பட்டான். இதனால் இருவருக்குள்ளும் சண்டை நடந்தது. துச்சாதனன், திரௌபதியை அடித்து கீழே தள்ளினான்.
கீழே விழுந்த திரௌபதியால் எழ முடியவில்லை. துச்சாதனன் திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து தரதரவென இழுத்துச் சென்றான். திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்துச் சென்றான். இதைப் பார்த்த அனைவரும் வாயடைத்து நின்றனர். துச்சாதனன் மாளிகையில் இருந்து சபை வரைக்கும் திரௌபதியின் கூந்தலை பிடித்து இழுத்து வந்தான். திரௌபதியின் அலறல் சத்தத்தையும் அவன் பொருட்படுத்தவில்லை. திரௌபதியை இழுத்து வந்து சபையில் தள்ளினான்.
தொடரும்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக