தனது பேரனான அநிருத்தன் இல்லாததை அறிந்த கிருஷ்ணர், துவாரகையில் தேட முயற்சி செய்கையில் நாரத முனிவரின் உதவியினால் அநிருத்தன் இருக்குமிடத்தை அறிந்து கொண்டார். பின்பு, கிருஷ்ணர் பிரத்தியும்னனுடனும், மாபெரும் படையுடனும் சோனிதபுரியை அடைந்தார்.
வேந்தன் அந்தப்புரத்தை அடைவதற்கு முன்னரே தனது ஒற்றர்கள் மூலம், தனது நாட்டிற்கு பெரும் படையுடன் கிருஷ்ணர் வந்து கொண்டிருப்பதை அறிந்து கொண்டான். பின்பு அதற்கு தயாராகும் வகையில் பாணாசுரன் தனது படைவீரர்களை தயாரான நிலையில் இருக்குமாறு உத்தரவிட்டான். குறுகிய நேரத்திற்குள் அசுரர்கள் அனைவரும் இணைந்து மாபெரும் படை கொண்ட ஒரு சேனையாக உருவெடுத்து கிருஷ்ணரை எதிர்க்க தயாராக நின்று கொண்டிருந்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மிகவும் வலிமையான போர் உருவாகியது. அசுர வீரர்கள் அனைவரையும் துவாரகையிலிருந்து வந்த வீரர்கள் கடுமையாக தாக்கினர். மாயசக்திகளில் வல்லவர்களான அசுரர்கள் தனது மாய சக்தியால் வீரர்களை திசை திருப்ப பலவிதமான சூழ்ச்சிகளையும் உருவாக்கினார்கள். ஆனால், துவாரகையிலிருந்து வந்த வீரர்கள் அவர்களின் மாய சக்திகளைக் கொண்டு அவர்களைத் தாக்கி அழித்து முன்னேறி கொண்டிருந்தனர்.
இவையாவற்றையும் கண்டுகொண்டிருந்த அசுரகுல வேந்தனான பாணாசுரனுக்கு மிகுந்த கோபமும், எதிரிகளின் மீது தயவு தாட்சியின்மையும் தோன்றியது. வலிமை மிகுந்த தனது இரு தோள்களையும் தட்டிக் கொடுத்து இனி இவர்களை வதம் செய்தே ஆக வேண்டும் என்று உரைத்து, தானே நேரடியாக களத்தில் இறங்கி அவர்களை நிர்மூலமாக்குகின்றேன் என்று கூறி ரதத்தில் ஏறினான்.
பின்பு தனது ரதத்தில் முன்னேறி, எதிரிகளின் வீரர்கள் சூழ்ந்த இடத்தை அடைந்து தனது வீரர்களை அழித்த வீரர்களை அழிக்கத் தொடங்கினான். ரதத்தில் இருந்தவாறு தனது தவ வலிமையால் பெற்ற பல சக்திகளைக் கொண்டு அவர்களின் உயிரை பிரித்து எடுக்கும் விதமான பல ஆயுதங்களை ஏந்திய வீரர்களை உருவாக்கி முன்னேற ஆணையிட்டார். அசுர வீரர்கள் வருவதை உணர்ந்த கிருஷ்ணபரமாத்மா அவர்கள் யாரையும் தனது படையை நெருங்க விடாமல் அழித்து காத்து நின்றார். பின்பு கிருஷ்ணர் தானே பாணாசுரனை சந்திப்பதாக உரைத்து முன்வந்தார். பின் பாணாசுரன் விடுத்த ஒவ்வொரு அஸ்திரங்களையும் பயனற்றுப்போகச் செய்தார்.
தனது தவ வலிமையாலும், தன்னிடமுள்ள வலிமை வாய்ந்த பலவிதமான அஸ்திரங்களையும் கொண்டு அங்கிருந்த அனைத்து வீரர்களையும் அழிக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டான் பாணாசுரன்.
இருப்பினும் எதிரில் இருப்பவர் யார்? என்பதை உணர்ந்தும், அதை தனது கர்வ சிந்தனையால் மதியிழந்து பாணாசுரன் செய்த அனைத்தையும் கிருஷ்ணர் நிர்மூலமாக்கி அவனது கர்வத்தையும் அவனது சக்தியையும் குறைக்கத் தொடங்கினார்.
இனியும் பொறுமை காத்தல் ஆகாது என்று எண்ணிய கிருஷ்ணர் தனது கரங்களில் இருந்த வில்லினால் அம்பு எய்து பாணாசுரனின் இரு கைகளையும் துண்டித்தார். பின்பு அவன் உயிரை மாய்க்க தனது சக்கராயுதத்தை அசுரனை நோக்கி ஏவ தொடங்கினார். அவ்வேளையில் யுத்தக்களத்தில் சர்வலோக சஞ்சாரியான எம்பெருமான் தோன்றி கிருஷ்ணரை தடுத்து நிறுத்தினார்.
கிருஷ்ணரும், எம்பெருமானின் கூற்றுக்கிணங்கி சுதர்சன சக்கரத்தை பயன்படுத்துவதை நிறுத்தினார். பின்பு எம்பெருமான் கிருஷ்ணரிடம் பாணாசுரன் என்னுடைய பரம பக்தன் ஆவான். அவன் தான் பெற்ற வலிமையால் கர்வம் கொண்டு தன்னை வெல்ல எவரும் இல்லை என்ற ஆணவத்தில் தன்னுடன் போர் புரிய எவராவது பிறக்க மாட்டார்களா? என்று என்னிடம் கேட்டான். அவன் கர்வத்தையும், அகங்காரத்தையும் அகற்ற அவன் இரு கைகளையும் துண்டிக்கக்கூடிய வீரன் விரைவில் தோன்றுவான் என்று வரமளித்து இருந்தேன். அதன் காரணமாகவே இந்த போரானது நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
பாணாசுரனுக்கு எதிரிகளின் மீது பயம் இல்லை என்ற வரம் அளித்து இருப்பதால், நான் அளித்த வரமானது உண்மையாக இருக்கும் வகையில் அவனை உயிருடன் விட்டு விடு என்று கூறினார். அவனின் இரு கைகள் இழந்த நிலையில் அவனின் மனதில் குடிக்கொண்டு இருந்த ஆணவமானது முழுவதுமாக அகன்றது என்றார்.
கிருஷ்ணர், எம்பெருமானின் கூற்றுக்கிணங்கி பாணாசுரனை வதம் செய்வதை தவிர்த்து அவனுடன் இருந்த அசுரப்படை வீரர்களை மட்டும் வதம் செய்தார். பின்பு அந்தப்புரத்தில் உள்ள அநிருத்தனையும், உஷையையும் அழைத்துவர தனது வீரர்களுக்கு ஆணையிட்டார். பின்பு அவர்கள் இருவரும் வந்ததும் தன் புதல்வனான பிரத்தியும்னனிடம் தனது பேரனையும், அவன் மணக்க இருக்கும் உஷையையும் ஒப்படைத்துவிட்டு, பின் அவர்கள் அனைவருடனும் கிருஷ்ணரும் துவாரகையை நோக்கி பயணிக்க தொடங்கினார்.
கிருஷ்ணரும், எம்பெருமானும் சென்ற பிறகு பாணாசுரன் மனதளவில் தான் கொண்ட அகந்தையால் தான் செய்த செயல்களை எண்ணி மிகவும் மனம் வருந்தி தனக்கு மோட்சம் அளிக்க எல்லாம் வல்ல எம்பெருமானை எண்ணி மனமுருகி துதிக்கத் தொடங்கினார்.
சிவபுராணம் நாளையும் தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக