செவ்வாய், 3 மார்ச், 2020

சூர்ப்பனகை இராமரை கண்டு காதல் கொள்ளுதல்

 சூர்ப்பனகை அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. விசுவரசு என்பவனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சளி என்பவளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கேகயி என்பவளுக்கு இராவணனன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பணகை பிள்ளைகளாக பிறந்தனர். சூர்ப்பனகையின் கணவன் வித்யுத்ஜிஹ்வா என்னும் அரக்கன். வித்யுத்ஜிஹ்வா அதிகம் அறிவு உடையவன் என்பதால் தமக்கு அவனால் பெருமை கிடைக்காது. ஆதலால் அவனை கொன்று விட வேண்டும் என நினைத்தான் இராவணன். ஒரு சமயம் போரின் போது தங்கை கணவன் என்பதை கூட பார்க்காமல் அவனை கொன்று விட்டான் இராவணன்.

 சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் நின்று கொண்டிருப்பாள். அன்றும் பஞ்சவடிக்குத்தான் வந்து கொண்டிருந்தாள். தூரத்தில் வரும்போதே கோதாவரிக் கரையில் புதிதாக ஓர் பர்ண சாலை இருப்பதை பார்த்து விட்டாள் சூர்ப்பனகை. இது முனிவனின் வேலையாக தான் இருக்கும். இந்த வனத்துக்கு நான் அரசி என்னைக் கேட்காமல் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இந்த முனிவன்கள் மேல் இரக்கமே காட்டக் கூடாது என்று நினைத்துக் கொண்டு வேகமாக சென்றாள். அவள் செல்லும் வேகத்தில் பூமியே அதிர்ந்தது. பர்ணசாலை பிய்த்து எறிந்துவிடும் நோக்கத்தில் ஆவேசம் பொங்க சென்றாள். அவள் சென்ற வேகத்தில் சட்டென்று நின்று விட்டாள். இராமர் ஓர் மரத்தின் கீழ் அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருந்தார். இராமரை கண்டவுடன் அவளுக்கு இராமரின் மேல் காதல் வந்துவிட்டது. ஆகா! இவர் என்ன அழகு! ஆயிரம் ஆண்கள் சேர்ந்தாலும் இவரின் அழகுக்கு ஈடாக முடியாது. இவரை கடவுள் எனக்காக தான் படைத்து இருக்கிறான். ஆனால் நானோ ஒரு அரக்கி. என் உருவில் சென்றால் அவன் என்னை விரும்ப மாட்டான். ஆதலால் நான் அழகிய ஒரு பெண் உருவில் செல்கிறேன் என்று பெண் உருவம் எடுத்தாள். அன்னம் போல் நடந்து இராமன் முன் நின்றாள். இராமர் அவளை பார்த்து, யாரம்மா நீ ? இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? உன் பெயர் என்ன? உன் தாய் தந்தையர் எங்கே? என வினவினார். ஆனால் இராமருக்கு இவள் தீயவள் என்று அடிமனதில் தோன்றியது.

 சூர்ப்பனகை, பெருமானே! தங்களுக்கு வணக்கம்! என் பெயர் காமவல்லி. நான் பிரம்ம தேவரின் பேரன் விஸ்ரவசுவின் மகள் ஆவேன். என் அண்ணன் குபேரன் மற்றும் இராவணனுடைய தங்கை நான். நான் கன்னி பெண். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றாள். இராமர், அப்படியா? நீ இராவணின் தங்கையா? இராவணனோ ஒரு அரக்கன். அப்படியென்றால் நீ ஒரு அரக்கியாக தான் இருக்க வேண்டும். நீ எப்படி அழகிய பெண் உருவில் இருக்கிறாய்? என்றார். அதற்கு சூர்ப்பனகை, ஆம் நாம் ஒரு அரக்கி தான். எனக்கு அரக்கியாக இருப்பதில் விருப்பம் இல்லை. ஆதலால் தவம் இருந்து தேவர்களிடம் வரம் பெற்று பெண் உருவம் பெற்றேன் என்று சிறிதும் கவலைப்படாமல் பொய் கூறினாள்.

பெண்மணியே! இக்கொடிய கானகத்தில் தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என வினவினார். பெருமானே! எனக்கு அரக்கர்களுடன் வாழ பிடிக்கவில்லை. ஆதலால் இங்கு வந்து தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அன்புடன் பணிவிடை செய்து கொண்டு இருக்கிறேன் என்றும் மறுபடியும் பொய் உரைத்தாள். இராமர், பெண்மணியே! நீ என்னை காண வந்த நோக்கம் என்ன? என்று சொல்லவில்லையே என வினவினார். சூர்ப்பனகை தன் தந்திரத்தை ஆரம்பித்தாள். பெருமானே நான் தங்களை பார்த்தவுடன் என்னை அறியாமல் என் மனம் தங்களிடம் வந்துவிட்டது. நான் உங்களை விரும்புகிறேன். தாங்கள் என்னை திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அழகிய குரலில் கொணஞ்சும் விதமாக கேட்டாள்.

தொடரும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்