Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 மார்ச், 2020

கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளுர் - தல வரலாறு


Image result for கேடிலியப்பர் திருக்கோயில் கீழ்வேளுர்
றைவன் பெயர் : கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர்
இறைவி பெயர் : வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை
பதிகம் : திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1
தல மரம் : இலந்தை
தீர்த்தம் : சரவண தீர்த்தம்
வழிபட்டோர் : முருகப் பெருமான், அகத்தியர், குபேரன்
தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - மின்னுலாவிய சடையினர்.
2. அப்பர் - ஆளான் அடியவர்.

தல வரலாறு:

இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 147 வது தேவாரத்தலம் ஆகும்.

வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப்பெயர். அவர் பூஜைக்கு கெடுதி வராது, இறைவியார், துர்க்கையின் அம்சமாக காவல் புரிந்தார். அவருக்கு அஞ்சு வட்டத்து அம்மை என்று பெயர்.

அகத்தியர் கூத்தபெருமானின், வலத் திருவடியைத் தரிசித்த பதி.
முன்பு தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற்கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது. அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து "வட பத்ரிகாரண்யம்" ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி "தென் பத்ரிகாரண்யம்" ஆயிற்று. பத்ரி என்றால் இலந்தை என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத்தலம் தென் பத்ரிகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல விருட்சமாயிற்று.
ஸ்ரீ முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், "பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்"' என்று கூறி அருளினார்.
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர்,
 கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார்.
அப்போது வீரஹத்திகளான மாயைகள் முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங்களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே ஸ்ரீ அஞ்சு வட்டத்தம்மன் என்ற திருநாமமும் இந்த அம்பிகைக்கு உண்டு. குமரன் தவக்கோலத்திலேயே இங்கு காட்சி தருகிறார்.
சிங்கத்துவஜன் என்னும் அரசன் காட்டில் வேட்டையாடி அலைந்த போது களைப்பால் தாகம் ஏற்பட்டது. ஒரு முனிவரின் ஆஸ்ரமத்துக்கு சென்று, அரசன் என்ற ஆணவத்துடன் தண்ணீர் கொண்டு வரும்படி ஆரவாரமாகக் கத்தினான். இதனால், தியானத்தில் இருந்த முனிவர் கோபத்துடன் வெளியில் வந்து, "கழுதை போல் கத்துகிறாயே, நீ கழுதையாகப் போ,'' என்று சபித்தார்.

மற்றொரு காட்டரசன் விந்திய மலையில் தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியரைத் தரிசிக்க சென்றவர்களை துன்புறுத்தி வந்தான். இதனால் அந்த அரசனையும் கழுதையாகுமாறு அகஸ்தியர் சபித்தார்.அவர்கள் கழுதையாகப் பிறந்தனர். வணிகன் ஒருவன் அவற்றை பொருள் சுமக்க பயன்படுத்தினான். ஒருநாள், கழுதைகள், தற்போதைய அட்சயலிங்க சுவாமி கோயிலிலுள்ள பிரம்மத் தீர்த்தத்தில் நீர் பருகின. இறைவனின் அருளால் அவை தமது முற்பிறப்பு வரலாற்றை உணர்ந்தன. அதை மனித மொழியில் பேசிக்கொண்டன.

கழுதைகள் பேசுவதைக் கவனித்த வணிகன், அவற்றை விட்டுவிட்டு ஓடிவிட்டான். இரண்டு கழுதைகளும் கோயிலை வலம் வந்தன. அட்சயலிங்க சுவாமியின் அருள் பெற்றன. ஆடிமாதம் பவுர்ணமி முதல் சதுர்த்தி வரையில் பிரம்மதீர்த்தத்தின் நீரருந்தினால், நீங்கள் மீண்டும் மனித வடிவை அடைவீர்கள் என்று அசரீரி ஒலிக்கவே, இரண்டும் நீர் அருந்தி மனித வடிவத்தைப் பெற்றன.

சிரஞ்சீவியாக விளங்கும் மார்கண்டேய முனிவர் ஒரு நாள் தம் நித்திய சிவ பூஜையை துவங்கினார். அப்போது பிரம்மகற்பம் முடிந்து, கடல் பொங்கி அண்டபகிரண்டங்கள் அழியத் துவங்கியது. "எந்தக்காலத்திலும் அழியாத தென்னிலந்தை வனம் சென்று கீழ்வேளூர் கேடிலியை வணங்குவாய்''என்று அசரீரி ஒலித்தது. அதன்படி மார்கண்டேய முனிவர் வணங்கி பேரு பெற்ற இடம் அட்சயலிங்க சுவாமி கோயில். இது உலகம் அழியும் காலத்திலும் அழியாத தலமாக விளங்குமென குறிப்பு உள்ளது.
நோய் தீரும் பிரார்த்தனை:
படைப்பாற்றல் குறைந்ததால், கோயில் வடக்கு கோபுர வாசலின் எதிரில் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி, அதில் மூழ்கி அட்சயலிங்க சுவாமியை வழிபட்டார் பிரம்மா. அவருக்கு மீண்டும் படைக்கும் ஆற்றல் கிடைத்தது. இங்குள்ள திருமஞ்சனக்குளம் தோஷ நிவர்த்தியை அளிக்கிறது. நிருதி மூலையிலுள்ள இந்திர தீர்த்தத் தடாகத்தில் இந்திரன் மூழ்கி தன் சாபம் நீங்கப் பெற்றான். தென்மேற்கு மூலையிலுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடினால் தோல் நோய் குணமடைவதாக நம்பிக்கையுள்ளது.
சிற்ப வேலைப்பாடு:
அம்பிகை பிம்பம் சுதையால் ஆனதால் அபிஷேகம் கிடையாது. சாம்பிராணித்தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. முருகன் வடக்குப்பார்த்து பாலரூபமாய் புன்சிரிப்புடன் நின்று தவம் புரிகிறார். தேவநாயகர் என்று அழைக்கப்படும் தியாகராஜர் திருவுருவம் சிறப்பானதாகும். கோயிலிலுள்ள சிங்க உருவங்களும், யாளி வரிசைகளும், வளைந்து தொங்கும் சட்டங்களும், அவற்றின் நுனியில் வாழைப்பூத் தொங்கல்களும், அதைத் தம் மூக்கால் கொத்தும் கிளிகளும் சிற்ப வேலைப்பாடுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
விசேஷ அம்பாள்:
 மூலவர் அட்சயலிங்க சுவாமி என்ற கேடிலியப்பர் என்றும், அம்பாள் சுந்தரகுஜாம்பாள் என்றும், வனமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். பத்ரகாளியின் அம்சமான "அஞ்சுவட்டத்தம்மன்' என்ற தெய்வமும் இங்கு குடியிருக்கிறாள். நான்கு திசைகள் மற்றும் ஆகாயம் ஆக ஐந்து புறங்களிலும் இருந்து பிரச்னை ஏற்பட்டாலும், பாதுகாப்பு தருபவளாக விளங்குவதால் இந்தப்பெயர் சூட்டப்பட்டது. இவள் ஒரு சமயம் ஐந்துமுறை ஆகாயத்தில் வட்டமடித்து நடனமாடியதாகவும், அதனால் இந்தப் பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. எப்படியாயினும், இவள் ஆகாய தெய்வம் என்பதால், அடிக்கடி விமானபயணம் மேற்கொள்வார்,
இந்த அம்பாளை வணங்கி விபத்தின்றி பயணம் செய்ய வேண்டிக் கொள்ளலாம். பாலசுப்பிரமணியர், அகஸ்தியர், ஆளுங்கோவேஸ்வரர், விஸ்வநாதர், மகாலட்சுமி, கைலாசநாதர், பிரகதீஸ்வரர், அண்ணாமலைநாதர், ஜம்புகேஸ்வரர், குபேரன், தேவேந்திரன் சன்னதிகளும் இங்கு உள்ளன. மகாமண்டபத்தில் தெற்கு நோக்கி உற்சவரான கல்யாணசுந்தரரும், நர்த்தன கணேசரும் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் அமைப்பு:
சிலந்திச் சோழன் என்று பெயர் பெற்ற கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக்கோயில்களில் கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரியகோயில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறது.
கோபுரத்திற்கு எதிரில் முருகப்பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப்படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்தின் விமானத்தில் தென்புறம் இருப்பது சோமாஸ்கந்த விமானம், வடபுறமிருப்பது கேடிலியப்பர் விமானம். தலவிநாயகர் பத்ரி விநாயகர். அத்துடன் சுந்தர விநாயகரும் உள்ளார்.
கட்டுமலை மீதுள்ள சந்நிதியில் வலது பாத நடராஜர் தரிசனம் தருகிறார். அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம். அடுத்து சோமஸ்கந்தர் திருச்சந்நிதி. தட்சிணாமூர்த்தி, பதரி விநாயகர், அறுபத்துமூவர், ஜுரதேவர், அகஸ்தீஸ்வரர், விஸ்வநாதர், நவக்கிரகங்கள் ஆகியோரையும் மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவரும், மகாலட்சுமி, சிவ ஆஞ்சநேயர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.
அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சந்நிதி இருப்பது ஒரு சிறப்பம்சமாகும். முருகப்பெருமானின் பூசைக்கும் தவத்துக்கும் கெடுதி உண்டாகாதவாறு இறைவி சுந்தர குசாம்பிகை துர்க்கையின் அம்சமாகக் காவல் புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சந்நிதி முதல் பிராகாரத்தில் முருகன் சந்நிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கின்றது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (ஸ்ரீ சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர். தட்சிணாமூர்த்தி மிகப் பழமையான திருமேனி. இத்தலத்திலுள்ள ஏகபாதமூர்த்தி திருஉருவம் தனிச்சிறப்புடையது. காளி உருவம் சுதையாலானது. சுதையால் ஆன இத்திருமேனிக்குப் புனுகுசட்டம், சாம்பிராணித் தைலம் சார்த்தப்படுகிறது. அபிஷேகம் செய்யப்படுவதில்லை.
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இப்பெயர் திருநாவுக்கரசரின் ஆளான அடியவர்க்கு அன்பன்தன்னை என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் எடுத்தாளப்பட்டுள்ளது. பாடல் தோறும் கிழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர் என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோயிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.
கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள் முருகப்பெருமான் பாலசுப்பிரமணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார். திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின் திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.

சிறப்புக்கள் :

அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம்.

கோச்செங்கணாரின் மாடக் கோவில்.

மூன்று கல் வெட்டுகளில் இரண்டு சோழர் காலத்தவை, ஒன்று தஞ்சை மராட்டிய மன்னன் காலத்தது.


போன்:  
+91- 4366 - 276 733.

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு திருவாரூர் - நாகை பாதையில் உள்ள இரயில் நிலையம் கீவளூர். நிலையத்திலிருந்து, வடக்கே 2-கி. மீ. தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து பஸ் வசதி உள்ளது. கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது).
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்
வேள் (முருகப் பெருமான்) வழிபட்டதால், இப்பெயர்.
கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது).
அகத்தியருக்கு நடராஜப் பெருமான் தனது வலதுபாத தரிசனம் தந்த தலம் என்ற சிறப்புடையது இத்தலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக