விரைவில் தமிழகத்தில் உள்ள சிறை வளாகங்களை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் இயக்கப்பட உள்ளன.
நாட்டிலேயே முதல் முறையாக
தமிழகத்தில் உள்ள சிறைகளை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கு 9 மத்திய சிறைகளும், பெண்களுக்கு 4 சிறப்பு சிறைகளும்
இருக்கின்றன. இதில் 13 ஆயிரம் ரிமாண்ட் செய்யப்பட்ட மற்றும் குற்றவாளி என உறுதிபடுத்தப்பட்ட
கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில் வேலூர், திருச்சி, கோவை ஆகிய சிறைகள் மட்டும் 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கின்றன. மற்ற சிறைகள் 20 முதல் 45 ஏக்கர்கள் வரை இருக்கும். பொதுவாக சிறைக் கைதிகளை கண்காணிக்க தமிழகத்தில் போதிய காவலர்கள் இல்லை.
குறிப்பாக அதிக ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைகளுக்கு தனிக் கவனம் செலுத்தியே ஆக வேண்டும். சிறைகளில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளுக்காக ஜாமர்கள், எக்ஸ்ரே இயந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடந்த தமிழக பட்ஜெட்டில் சிறைகளில் ட்ரோன்கள் பயன்பாட்டிற்காக ரூ.21.85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 9 ட்ரோன்களை தலா ரூ.2.25 லட்சம் மதிப்பில் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக சிறைத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதையொட்டி காவல்துறையினர் தொழில்நுட்ப பிரிவின் உதவியை சிறைத்துறை நிர்வாகம் நாடியுள்ளது. சில சமயங்களில் சிறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடையும் சூழல் ஏற்படுகிறது.
இதுபோன்ற சமயங்களில் சிறை வளாகத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க வேறு ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது. எனவே ட்ரோன்கள் சிறை முழுவதையும் கண்காணிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக