>>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • நாளும் மகிழ்ச்சியாக வாழ 10 எளிய வழிகள்!
  • >>
  • 24-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • தோசைக்கல்லில் முதலில் சுடும் தோசை மட்டும் சரியாக வராததற்கான காரணங்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 7 ஏப்ரல், 2020

    சிவபுராணம்..!பகுதி 193

    கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல்களை கேட்டதும் மதுரை நகர மக்கள் அனைவரும் மனதில் அச்சம் கொண்டனர். தாங்கள் கேட்ட பேரிரைச்சலை பற்றி சுந்தர பாண்டியனாரிடம் சென்று தெரிவித்தனர். 

    மக்கள் அடைந்த அச்சத்தினால் சுந்தர பாண்டியனார், ஏழுகடல்களையும் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார். 

    எம்பெருமானின் ஆணைப்படியே ஏழுகடல்களும் கிணற்றுக்குள் சென்று ஏழு வண்ணங்களுடன் கிணற்றில் இருந்து வெளிவரத் துவங்கின.

    ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளிய பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை. மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்தை கடந்தால் வரும் தெருவானது ஏழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப்படுகிறது. 

    ஏழுகடல்களும் ஒருங்கே நிறைந்து காணப்பட்ட கிணற்றின் அருகே அமைந்த நந்தவனத்தில் எம்பெருமான் தம் தேவியுடன் காட்சி அளிக்க எழுந்தருளினார். பின்பு, எம்பெருமான் தம் தேவியரை நோக்கி உமது அன்னையின் விருப்பத்திற்கு ஏற்ப ஏழுகடல்களும் இந்த நகரத்திற்கு வருமாறு செய்துள்ளோம் என்றும், இங்கு உன் அன்னையை நீராடி மகிழ அழைத்து வருவாயாக என்றும் திருவாய் மலர்ந்தருளினார்.

    மீனாட்சி அம்மையார் ஏழுகடல்கள் மதுரைக்கு வந்துள்ளதை தனது அன்னையான காஞ்சனமாலைக்கு தெரிவித்து காஞ்சனமாலையை கடலில் நீராட அழைத்து வந்தார். அவ்வேளையில் சுந்தர பாண்டியனாரும் கடலின் அருகே வந்து அமர்ந்தார். 

    கடலின் அருகில் வந்ததும் அங்கு கூடியிருந்த சிவ முனிவர்களிடம் கடலில் நீராடுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்று வினவினார். அப்பொழுது அங்கிருந்த முனிவர்கள் காஞ்சனமாலையே... கணவனுடைய கரங்களையோ, மகனுடைய கரங்களையோ, பசுவினது கன்றின் வால் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றினை கரங்களில் பற்றிக் கொண்டு நீராடுதலே சிறந்த முறையாகும் என்று எடுத்துரைத்தனர்.

    முனிவர்களின் கூற்றுகளை கேட்ட காஞ்சனமாலைக்கு முகமும் வாட துவங்கியது. தனக்கு கணவரும் இல்லை... மகனும் இல்லை. ஆகவே, கன்றின் வாலினைப் பிடித்து கடலில் நீராட வேண்டும் என்று மனதிற்குள் எண்ணி வருத்தம் கொண்டார். பின்பு, தன் மனம் கொண்ட வருத்தத்தை தனது புதல்வியான மீனாட்சியிடம் தெரிவித்து கன்றின் வாலினைப் பற்றி கடலில் நீராடப் போவதாக தெரிவித்தார். தனது தாயின் மன வருத்தத்தை அறிந்ததும் மீனாட்சி தனது தலைவரான சுந்தர பாண்டியனாரிடம் சென்று தனது தாயின் மன வருத்தங்களை எடுத்துக்கூறினார்.

    கடலில் நீராட கணவனும், மகனும் இல்லாத என் தாய் கன்றின் வாலினைப் பற்றி நீராடப் போவதாகவும், எனவே அவரின் மனக்குறையை போக்கி அருள வேண்டும் என்று மீனாட்சி வருத்தத்துடன் கூறினார். மீனாட்சி கூறியதைக் கேட்ட எம்பெருமானான சுந்தர பாண்டியனார் தேவலோகத்தில் இருந்து வந்த மலையத்துவசனை மனதில் எண்ணினார். எம்பெருமான் நினைத்ததும் மலையத்துவச பாண்டியன் இருந்து வந்த தேவலோகத்தை விடுத்து தெய்வ விமானம் ஒன்றில் அவ்விடத்திற்கு வருகை புரிந்தார்.

    விண்ணுலகம் விடுத்து மண்ணுலகம் வந்த மலையத்துவச பாண்டியன் எந்த பிறவியில் நான் செய்த புண்ணியமோ இன்று நான் பெற்ற பெண் பிள்ளையால் மட்டுமே இம்மண்ணுலகம் வர முடிந்தது என்று கூறி உலகத்திற்கு இறைவனான சுந்தர பாண்டியனாரை வணங்க முற்பட்டார். மலையத்துவச பாண்டியன் தன்னை வணங்க வருவதை கண்ட எம்பெருமான், யாம் உங்களின் புதல்வியை மணந்ததால் தாங்கள் எனக்கு மாமன் முறையாகிவிட்டமையால் என்னை வணங்க வேண்டாம் என்றும், மேலும் மாமன் என்பவர் தந்தைக்கு சமமானவர் என்றும், தந்தையானவர் மகனை வணங்குவது என்பது முறையன்று என்றும் எடுத்துரைத்து மலையத்துவச பாண்டியனை நோக்கி மனைவியோடு சென்று ஏழுகடல் தீர்த்தத்தில் ஆழ்ந்து நீராடுங்கள் என்று கூறினார்.

    நீண்ட நாட்களுக்கு பின்பு தனது தந்தையை கண்டு மகிழ்ச்சி அடைந்து அவரை கட்டி அணைத்துக் கொண்டார் மீனாட்சி. மலையத்துவச மன்னன் என் மகளின் திருமணத்தை என்னால் காண முடியவில்லை. ஆனால், இன்று மகளை என் மருமகனோடு கண்டதில் என் மனமானது பேரானந்தம் அடைகிறது என்று கூறினார். காஞ்சனமாலையும் தன்னுடைய கணவனுக்கு அருகில் சென்று வணங்கினாள். பின் காஞ்சனமாலை தனது கணவரான மலையத்துவசனின் கரங்களை பற்றிக் கொண்டு தர்ப்பை மோதிரம் அணிந்து கொண்டு நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்தப்படி முனிவர்கள் கூறியுள்ள விதிப்படி கடலில் நீராடினார்.

    புண்ணிய கடலில் நீராடி கரையேறிய காஞ்சனமாலையும், மலையத்துவசனும் எம்பெருமானின் திருவருளால் அவர்களிடம் இருந்து வந்த பந்த, பாசம் ஒழித்து இனி என்றும் பிறவா நிலையான அருள் வடிவத்தை அடைந்தனர். அச்சமயத்தில் சுந்தர பாண்டியனார் ஒளிரும் திருநீலகண்டருமாக, நான்கு கரங்கள் மற்றும் நெற்றிக் கண்களும் கொண்ட சிவசொரூப வடிவில் காட்சியளித்தார். அப்போது அவ்விடத்தில் இருந்த அனைவரும் அக்காட்சியை கண்டு மனம் மகிழ்ந்தனர்.

    அவ்வேளையில் சிவலோகத்தில் இருந்து வந்த தேவ விமானத்தில் மீனாட்சி அம்மையாரின் தாயும், தந்தையும் ஏறி மண்ணுலகத்தை விடுத்து விண்ணுலக பதவியை அடைந்தனர். சிவபெருமானின் அருளால் இருவரும் என்றும் பிறவா நிலையை அடைந்தனர். பின் அங்கிருந்தோர் ஹர ஹர என்று துதிக்க தேவ விமானம் மேலெழும்பி சிவலோகத்தை நோக்கிச் சென்றது. தாயும், தந்தையும் சிவலோகத்தை நோக்கி சென்றதும் மீனாட்சி பிராட்டியரும், எம்பெருமானும் அரண்மனை நோக்கி வந்தனர்.

    பின்பு எம்பெருமானின் திருவடிகளில் விழுந்து ஏழுகடலையும் மதுரைக்கு வரவழைத்து பின் தந்தையையும் வரழைத்து தாய், தந்தையரை நீராடச் செய்து இறுதியில் சிவலோகப் பதவியையும் அளித்துள்ளீர்கள். தங்களின் பெருங்கருணையை எண்ணி நான் மிகவும் மனம் மகிழ்வதாக கூறினார் மீனாட்சி அம்மையார்.

    எம் தந்தையின் வம்சமிது நின்றுவிடாமல் தங்கள் செங்கோல் செலுத்தி ஆட்சி செய்து வருகின்றீர்கள். இதற்கு எவ்விதமான இடர்பாடுகள் ஏதும் ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். சுந்தர பாண்டியனாரும் தம் தேவியான மீனாட்சியின் கருத்தினை புரிந்து கொண்டு இன்முகத்தோடு புன்னகை பூத்தார்.

    சிவபுராணம் நாளையும் தொடரும்....

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக