>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 1 மே, 2020

    சிவபுராணம் - பாகம் 2 பகுதி 009

    இளையான்குடி மாறநாயனார் !!

    இளையான்குடி என்னும் இயற்கை வளம் நிரம்பிய எழில் மிகுந்த ஊரானது இறைவனின் அருளால் செழுமை நிறைந்து காணப்பட்டது. இவ்வூரில் உலகிற்கே உணவிடும் விவசாய குலத்தில் பிறந்தவர் தான் மாறனார். இளையான் குடியில் பிறந்த காரணத்தினால் இளையான்குடி மாறனார் என்று அழைக்கப்பட்டார். பெரும் செல்வங்களை உடைய மாறனாருக்கு வயல் வெளிகளும் நிறைய இருந்தன. விவசாய குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்து மிகுந்த செல்வந்தராய் இருந்தார்.

    சிவபக்தியில் சிறந்து விளங்கிய மாறனார் எந்நேரமும் எம்பெருமானின் திருநாமத்தை மனதில் எண்ணி, சிவ அடியார்களுக்கு விருந்தோம்பல் செய்வதை தம் தொண்டாக செய்து வாழ்ந்து வந்தார். ஆண்டவன் வழிபாடு மற்றும் ஆராதனையை தினமும் செய்து மகிழ்ந்தார். இறைவன் மீதும், அவரின் அடியார்களின் மீதும் அளவில்லாத அன்பு கொண்டவர்.

    தன்னுடைய இல்லத்தை தேடி வரும் அடியார்களை சிவபெருமானாகக் கருதி இன்முகங்காட்டி... இன்சொல் பேசி... வரவேற்று அவர்களுக்கான கோலமிட்ட இருக்கையில் அமர்த்தி அவர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கி அடியார்களுக்கு திருவமுது செய்து வந்தார். அடியார்களுக்கு அறுசுவை அமுது படைத்து மனம் மகிழ்வதையே தனது வாழ்க்கை பணியாகக் கொண்டிருந்தார்.

    தாம் கொண்ட கொள்கையில் அணு அளவும் பிறழாது சிவத்தொண்டை புரிந்து வந்தார் இளையான்குடி மாறனார். எதிர்பாராத சில சூழல்களால் வறுமையின் பிடியில் அகம்பட்டார். செல்வ வளம் குறையத் துவங்கியது. ஆனாலும் அவரின் மனம் கலங்கவில்லை. கடன் பெற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தும் தொண்டு செய்து வந்தார். மாறனார் வளம் நிறைந்த காலத்தில் மட்டுமின்றி வறுமை ஏற்பட்ட காலத்திலும் அடியாரைப் போற்றி காத்து கொண்டிருந்தார். இவ்விதமாக இருக்கையில் எம்பெருமான் மாறனாரின் பக்தியின் திறத்தை உலகுக்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார். எப்போதும் போலவே தனது திருவிளையாடலை செய்ய துவங்கினார்.

    ஒரு சமயம் மாரிக்காலத்தில் தம்மிடம் இருந்த குறைந்த அளவு பணத்திற்கு சிறிதளவு நிலத்தை குத்தகைக்கு வாங்கினார். அதில் விதை நெல்லை விதைத்திருந்தார். என்ன காலமோ என்று தெரியவில்லை அன்றிரவு பயங்கர காற்றோடு மழை பெய்யத் தொடங்கியது. வழி நெடுகிலும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. மாறனாருக்கு என்ன செய்வது என்று புலப்படவில்லை. ஆனால் மனதிலோ விதை நெல் வீணாகிவிடுமே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தார்.

    அன்றிரவு உணவின்றி பசியால் வாடியபோதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவைப்பூட்டி விட்டு வீட்டினுள் சென்றார். அங்கு மாறனாரும், அவர் துணைவியாரும் உணவு உண்ணாமலும், மழை பெய்தமையால் ஏற்பட்ட குளிராலும் வாடினார்கள். நள்ளிரவுப் பொழுதிலே சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாறனாரின் மனைக்கு எழுந்தருளி கதவைத் தட்டி அழைத்தார்.

    கதவை திறந்து பார்த்த மாறனார் மழையில் நனைந்து வந்த அடியாரை கண்டதும் துடித்துப் போனார். அடியாரை விரைந்து வீட்டினுள் அழைத்து வரவேற்று மழையில் நனைந்த அவரது மேனியில் விழும் ஈரத்தை துவட்டச்செய்து ஆசனத்தில் அமர்த்தினார் மாறனார். பின்பு, ஈரத்தை துவட்டி இயல்புநிலைக்கு வந்த அடியார்... மாறனாரிடம் உம்மை பற்றி யாம் நிறைய கேள்விப்பட்டோம் என்று கூறினார்.

    அதற்கு மாறனாரோ!!... எல்லாம் இறைவனின் செயல்கள் என்று கூறிவிட்டு, அடியாரே... சற்று தாங்கள் அமைதி கொள்ள வேண்டுகின்றேன் என்றும், தங்களுக்காக சூடாக உணவை தயார் செய்து அளிக்கின்றேன் என்றும் கூறினார். அடியாரும் அதற்கு சம்மதிப்பது போல் தலையை அசைத்தார். பின்பு, மாறனார் தன் மனைவியிடம் சென்று அடியவரின் பசியைப் போக்க என்ன செய்யலாம்? என ஆலோசித்தார். இருவரும் என்ன செய்வது? என்று புலப்படாமல் நின்று கொண்டிருந்தனர்.

    கனத்த மழையில் தோன்றும் மின்னலை போன்று மாறனார் மனைவிக்கு ஒரு சிந்தனை தோன்றியது. அதாவது இன்று நம் சிறுவயலில் விடுத்த செந்நெல்லை எடுத்து வந்தால் அதைக் கொண்டு அமுது படைக்கலாம் என்று கூறினார். என்ன செய்வது என்று அறியாமல் நின்று கொண்டிருந்த மாறனாருக்கு தம் துணைவியார் கொடுத்த யோசனையானது அடியாருக்கு உணவை படைக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது.

    நாயனார் வயல்வெளிக்குச் சென்று அன்று விதைத்த முளை நெல் மழையினால் மிதப்பதை ஒன்று சேர்த்து கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்தார். ஆனால், மழையினால் விறகு ஈரமாகி விட்டதை அம்மையார் தன் கணவரிடம் எடுத்துரைக்க, மாறனார் வீட்டின் விட்டத்தை எடுத்து ஒடித்து கொடுத்தார். வீட்டின் பின்புறம் உள்ள குறும்பயிரான கீரையைக் கொணர்ந்தார் மழையில் நனைந்தவாறே. இவற்றையெல்லாம் வந்த அடியாரின் பசியைப் போக்க சுவை உணவாக மாற்றிய அம்மையார் தம் கணவரிடம், அடியாரை அமுது உண்ண அழைத்தார்.

    அடியாரை வணங்கி திருவமுது செய்யுங்கள் சுவாமி என நமஸ்கரித்து அவர் பாதங்களில் வீழ்ந்தனர் தம்பதிகள். பாதங்களில் விழுந்து எழுந்து பார்க்கையிலே அங்கு அடியவரை காணாது திகைத்து நின்றனர். அங்கே பெரும் ஜோதியாய் மேள, தாளம் முழங்கிட ரிஷப வாகனத்தில் உமாதேவியோடு தோன்றினார் உலகுகிற்கே அளக்கும் எம்பெருமான். உனது வறுமையையும் பொருட்படுத்தாது அடியவர்களுக்கு கொடுப்பதே சிறந்த அறம் என்று கொண்ட கொள்கையில் சிறிதும் பிசகாது நீ செய்த இந்த தொண்டு சிறந்தது.

    இன்னும் பல ஆண்டுகள் நீவிர் இருவரும் வாழ்ந்து குறைவில்லா செல்வங்களோடு இன்பங்கள் பல பெற்று அடியார்களுக்கு தொண்டு புரிந்து என் பாதத்தை வந்தடைவீர்களாக என்று கைலாயநாதர் திருவாய் மலர்ந்தருளினார். அவர் கூறியபடியே இருவரும் பல காலம் வாழ்ந்து தொண்டு செய்து பரமனின் பாதத்தை அடைந்து இன்புற்று வாழ்ந்தார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக