Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 17 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 202

முன்னொரு காலத்தில் காளமேகம் போன்றதொரு யானை வடிவம் கொண்ட 'கயாசுரன்" என்னும் அசுரன் ஒருவன் இருந்தான். அவன் மேருமலையின் மேல் நான்முகனை நினைத்து கடுந்தவம் மேற்கொண்டான். 

கயாசுரன் தவத்தில் மகிழ்ந்த பிரம்ம தேவரும் அவன் முன் தோன்றி, உனது தவத்தினால் யாம் மகிழ்ந்தோம், வேண்டும் வரத்தினைக் கேட்பாயாக என்று கூறினார். தனது முன் தோன்றிய பிரம்ம தேவரை மனதார வணங்கினான் கயாசுரன். பின்பு பிரம்ம தேவரிடம் படைப்பு அதிபதியாக விளங்கும் தங்களை கண்டதே எனது பாக்கியம் ஆகும். 

அடியேன் ஆகிய நான் தங்களிடம் வேண்டுவது ஒரு சிறிய வரம் மட்டுமே. அதாவது எனக்கு என்றும், எவராலும் அழிக்க முடியாத வலிமையும், வெற்றியும் என்னும் வரத்தினை தாங்கள் எனக்கு அளித்தால் அடியேன் என்றும் மகிழ்ச்சி பெறுவேன் என்று கூறினான்.

பிரம்ம தேவரும் கயாசுரன் வேண்டிய வரத்தினை அளித்தார். ஆனால், நீ பகையுடன் சிவபெருமான் முன்செல்லாதே, சென்றால் அப்போது உன் வரங்கள் யாவும் அழியும் எனக்கூறி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். 

பிரம்ம தேவரிடம் வரம் பெற்ற மகிழ்ச்சியில் கயாசுரன் தனது வெற்றியும், வலிமையும் எவராலும் அழிக்க இயலாது என்னும் ஆணவம் கொண்டான். அவன் தனது அசுர வேலைகளை காட்டத் தொடங்கினான். அதாவது, தான் பெற்ற வரத்தினால் தேவர்களையும், சொர்க்க லோகங்களையும் துன்புறுத்த எண்ணினான்.

சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான். தேவலோகம் சென்று தேவர்கள் புறமுதுகிட்டோட போர்புரிந்து வானுலகத்தை அழித்தான். பிறகு சொர்க்கலோகத்திற்கு சென்று இந்திரனோடு போரிட்டான். இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். இந்திரனின் வாகனமான ஐராவதத்தின் வாலைப் பிடித்துச் சுழற்றி இந்திரன் மயங்கும்படி அதனை எறிந்தான். சொர்கத்தை அழித்தான் இந்திரனை பயந்தோடச் செய்தான்.

கயாசுரன் திக்கு பாலகர்களைத் துரத்தினான். நிலவுலகத்திற்கு வந்து மக்களுக்கு துன்பம் புரிந்து ஆலகால விஷம் போல எங்கும் திரிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும், உலக மக்கள் அனைவரையும் கொடுமை படுத்தினான். முனிவர்கள் அவனைக் கண்டு பயந்து சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் காசியை அடைந்து மணிகர்ணிகை என்னும் ஆலயத்துள் விசுவேசுரரை வணங்கி நின்று சுவாமி கயாசுரன் என்னும் அசுரன் நிலவுலகத்தை அழித்து அடியோர்களையும் கொல்லும்படி விரைந்து வருகின்றான். அடியோர்களை உய்யும்படி அருள்புரியும் என்று கூறினார்கள்.

கயாசுரன் மணிகர்ணிகை ஆலய வாசலில் வந்து இடி போல் சத்தமிட்டு கொண்டு இருந்தான். கயாசுரனின் ஆணவம் அவனின் கண்களை மறைத்தது. சிவபெருமான் முன் நின்று அனைவரும் பயப்படும்படியாக கர்ண கொடுரமாக சத்தமிட்டான். கயாசுரனின் சினம் கொண்ட பேச்சுக்களால் சிவபெருமான் கோபங்கொண்டு தமது திருமுடி அண்டத்தின் உச்சியைத் தொட ஆயிரம் கோடி சூரியப் பிரகாசத்தோடு எழுந்து நின்றார். அப்பேரொளியைக் காணும் சக்தி தேவர்கள், முனிவர்கள் முதலியவர்களின் கண்களுக்கு இல்லாது போயிற்று. அவர்கள் தங்கள் கண்களை கரங்களினால் மறைத்துக் கொண்டு வருந்தினர்.

உக்கிர வடிவோடு சிவபெருமான் கயாசுரன் முன் சென்றார். கயாசுரன் இவர் சிவபெருமான் என்பதறிந்தும், பிரம்ம தேவர் கூறியவற்றை மறந்தும் அவரோடு போர்புரிய எண்ணினான். சிவபெருமான் அவனைத் தம் திருவடியால் உதைத்து அவன் கவிழ்ந்து பதைத்து விழுமாறு செய்தார். உடனே அவனுடைய தலையை ஒரு திருவடியினாலும், தொடையை மற்றொரு திருவடியினாலும் மிதித்துக் கொண்டு, இரண்டு திருக்கரங்களின் நகங்களால் கயாசுரனின் முதுகினைப் பிளந்து நான்கு கால்களும் பக்கங்களில் பொருந்த... இரத்தம் கக்கி இரைச்சலிட... அவன் தோலை உரித்தார்.

அதனைக் கண்டு உமாதேவியார் கலங்கினார். சிவபெருமானுடைய உக்கிரத் திருமேனியின் பேரொளியைக் கண்ட உயிர்களின் கண்கள் ஒளியிழந்தன. சிவபெருமான் உயிர்களின் கண்ணொளி மங்கியதைப் போக்கக் கருதி, யானைத் தோலை தமது திருபிம்பத்தின் மேல் போர்த்துத் தம் பேரொளியை மாற்றினார். உயிர்களுக்கு கண்ணொளியை அளித்து அருள்புரிந்தார். தேவர்களையும், பூலோகத்தையும், பக்தர்களையும் காக்க கயாசுரனுடன் சண்டையிட்டு வென்றதால் சிவபெருமானுக்கு கஜயுக்த மூர்த்தி என்ற பெயர் தோன்றியது. கயாசுரனை அழித்த எம்பெருமானை அனைத்து தேவர்களும் பலவாறு துதித்து வணங்கி பூ மழை பொழிந்து அருள் பெற்றனர். பிறகு காசிப்பதியில் வாழ்பவர்களும், முனிவர்களும், அகிலநாயகரை வணங்கி அவருக்கு விசேஷ பூஜை புரிந்து அருள் பெற்றுச் சென்றார்கள்.

சிவபெருமானின் பாடல்கள் மனதிற்கு அமைதியும் நெகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடிய ஒன்றாகும். எம்பெருமானின் திருவிளையாடல் மற்றும் அவர்களது சக்திகளும் அளவற்றவை ஆகும். அவைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இந்த ஒரு பிறவி என்பது போதாது. கிடைக்கும் நேரங்களில் எம்பெருமானின் திருவிளையாடல்களையும் அவர்தம் பாடல்களையும் படித்தும், கேட்டும் இந்த பிறவி கடலில் இருந்து நீந்தி எம்பெருமானின் திருவடிகளை சரணடைவோமாக...!

🙏🙏 சுபம் 🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக