Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 22 ஏப்ரல், 2020

துரியோதனன் போருக்காக நல்ல நேரம் குறித்தல்!

களப்பலி விஷயமாகத் துரியோதனனும், பீஷ்மரும் கலந்து ஆலோசனை நடத்தினர். படைத்தலைவனாகிய பீஷ்மர் துரியோதனனிடம், களப்பலி கொடுப்பதற்கு முன்னால் அதற்கான நல்ல நேரத்தை முக்கியமாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு சகாதேவன் போல் வல்லவன் யாருமில்லை. அவன் நமக்குப் பகைவனேயானாலும் நீ சென்று கேட்டால் நல்ல நேரத்தைக் கூறுவதற்கு அஞ்சவோ, மறுக்கவோ மாட்டான். அதனால், சகாதேவனிடம் சென்று களப்பலி கொடுப்பதற்குரிய நல்லநேரத்தைக் கேட்டு அறிந்து கொண்டு வா! என்று கூறினார். பின்பு அரவானைச் சந்தித்து அவனை களப்பலியாகக் கொடுப்பதற்கு அவன் தயாராக இருக்கின்றானா? என்று அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பீஷ்மர் துரியோதனனிடம், அரவான் என்பவன் தூய்மையும், மனவுறுதியும் மிக்க வீரன். அவனை உயிரோடு விட்டுவிட்டால் போரில் கௌரவர் படைகளைச் சூறையாடி தோற்கடிக்கச் செய்து விடுவான். அதனால் அவனை முதலில் நாம் களப்பலியாக வாங்கி விடுவது நமக்கு வெற்றியைக் கொடுக்கும். அதனால் நீ சென்று சகாதேவனையும், அரவானையும் சந்தித்து இந்த இரண்டு காரியங்களையும் நிறைவேற்றிக் கொண்டு வரவேண்டும் என்று கூறினார். துரியோதனனும், பீஷ்மர் கூறியதை ஒப்புக்கொண்டு சகாதேவனையும், அரவானையும் காண்பதற்குப் புறப்பட்டான். துரியோதனன், தன்னைத் தேடி வருவதைக் கண்ட சகாதேவன் பகைமையை மறந்து வாருங்கள் அண்ணா! என்று அழைத்து உபசரித்தான். பகைமை நிறைந்த இந்த போர் நேரத்தில் தாங்கள் வந்த காரியம் என்ன? என்று சகாதேவன் கேட்டான்.

துரியோதனன், பகைமையை பாராட்டாமல் நான் கேட்கும் காரியத்தை முடித்துக் கொடுப்பாய் என்று நினைக்கிறேன். நல்ல நேரத்தை கணித்து சொல்வதில் நீ திறமைமிக்கவன். அதனால் களப்பலி கொடுப்பதற்கு ஏற்ற நல்ல நேரத்தை ஆராய்ந்து எனக்குச் சொல்ல வேண்டும் என்று கேட்டான். இவ்வாறு துரியோதனன் கேட்டவுடன் சகாதேவன் சிறிது நேரம் தனக்குள் யோசித்தான். பின்பு துரியோதனனிடம் நல்லநேரத்தை கூறுகிறேன் கேளுங்கள் என்றான். சூரியனும், சந்திரனும் செயலிழந்து ஒன்று சேருகின்ற நேரம் அமாவாசை இரவு, அந்த நேரம்தான் களப்பலிக்கு ஏற்ற நல்ல நேரம் என்று ஜோதிட வல்லுநரான சகாதேவன் கூறினான். அமாவாசை தினமே களப்பலி செய்வதற்கு உகந்த நாள் என்பதை அறிந்து கொண்டு துரியோதனன், அரவானை சந்திக்கச் சென்றான்.

துரியோதனன் அரவானை சந்தித்து, அரவானிடம்! உன் ஆண்மையும், வீரமும் உறுதி நிறைந்தவை. எதற்கும் அஞ்சாதவன் என்று உலகமெல்லாம் புகழ்கிறார்கள். அந்தப் புகழை நிரூபித்துக் காட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உனக்கு நான் தருகிறேன் என்று கூறினான். துரியோதனனைக் கண்டதும் முதலில் அரவானுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் தன்னைப் புகழ்ந்து கூறியதால் கோபத்தை தணித்துக் கொண்டு, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்? அவசியம் செய்து முடிக்கிறேன் என்று வாக்கு கொடுத்து அரவான் தானாகவே தன் தலையை வஞ்சகத்திற்குள் நுழைத்துக் கொண்டுவிட்டான். அப்படி என்றால் போர் தொடங்குவதற்கு முன்னால் உன்னைக் களபலியாகக் கேட்கின்றேன் கொடு என்று துரியோதனன் கேட்டான். இதைக் கேட்டதும் அரவானுக்கு, தலையில் பேரிடிகள் ஒருகோடிமுறை விழுந்து ஓய்ந்தது போலிருந்தது.

அரவான், தான் முட்டாள் தனமாகத் துரியோதனனுக்கு வாக்கு கொடுத்துவிட்டதை எண்ணி மனம் கலங்கினான். ஆனால் கொடுத்தவாக்கை திரும்பிப் பெறமுடியாததால் என்னை களப்பலியாக கொடுக்கின்றேன்! எப்போது வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன், எனக்கு உயிரினும் வாக்குப் பெரிது! என்று கூறி சம்மதித்தான். துரியோதனனும், வந்த காரியங்கள் இரண்டுமே தடையின்றி வெற்றியுடன் முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியோடு அஸ்தினாபுரத்திற்கு திரும்பினான். பின்பு பாண்டவர்களுக்கும், கிருஷ்ணருக்கும் துரியோதனன் சகாதேவனிடமும், அரவானிடமும் வந்து பேசி வாக்குப் பெற்றது தெரியவந்தது. கிருஷ்ணர், துரியோதனன் சூழ்ச்சியினால் செய்த இந்த ஏற்பாட்டை நாமும் சூழ்ச்சியினாலேயே முறியடிக்க வேண்டும் என்றார்.

பாண்டவர்கள், கிருஷ்ணரிடம் தாங்கள்தான் அந்த சூழ்ச்சியை எங்களுக்கு கூறி உதவ வேண்டும். நாங்கள் அறத்தையும் உங்களையும் தான் நம்பி இருக்கிறோம் என்று மனம் உருக வேண்டிக் கொண்டார்கள். கிருஷ்ணர், பாண்டவர்களிடம் துரியோதனன் களப்பலி கொடுப்பதற்காக நல்ல நேரத்தையும், களப்பலிக்காக அரவானையும் தேர்ந்தெடுத்துள்ளான். ஆனால் துரியோதனனை முந்திக்கொண்டு அதே நல்ல நேரத்தில், நாம் அரவானை களப்பலி கொடுக்க வேண்டும் என்று கூறினார். பாண்டவர்கள் வருத்தத்துடன், அந்த வேளையில் துரியோதனனும், அவனுடைய ஆட்களும் அரவானிடம் வாக்குப் பெற்றுக் கொண்டபடி அவனைப் பலிக்கு அழைத்துக் கொண்டு சென்று விடுவார்கள். பின்னர் எவ்வாறு நாம் அரவானை களப்பலி கொடுப்பது? என்று குழப்பத்துடன் கேட்டார்கள்.

கிருஷ்ணர், அனைத்தையும் நானே முன் நின்று முடித்து வைக்கப்போகிறேன்! பதினைந்தாவது திதியில் வரவேண்டிய அமாவாசையைப் பதினான்காவது திதியன்றே வரவழைத்துவிட்டால் அன்றே துரியோதனனை முந்திக்கொண்டு களப்பலியையும் கொடுத்து விடலாம் என்று கூறினார். பாண்டவர்கள், தயக்கத்துடன் பதினைந்தாம் திதியாக வரவேண்டியதை முறைமாற்றிப் பதினான்காவது திதியாக வரவழைப்பது சாத்தியமான காரியமா? என்று கேட்டார்கள். ஆனால் கிருஷ்ணர், சிறிதும் தயக்கமின்றி சாத்தியமே! சாத்தியமாகும் படி நான் செய்து காட்டுகிறேன் என்று கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக