புதன், 22 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 001

அதிபத்த நாயனார்

துறைமுகம் நிறைந்த கடல் வாணிபத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த சோழ நாட்டில் உள்ளது நாகப்பட்டினம். அந்த நாகப்பட்டினத்தின் கடற்கரைக்கு அருகே உள்ளே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் என்னும் இனத்தவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தனர். பரதவர் இனத்துக்கு தலைவராக அதிபத்தர் இருந்தார்.

அதிபத்தர் சிறந்த சிவபக்தராக சிறந்து விளங்கினார். அவர் தினமும் கடலுக்குச் சென்று வலை வீசி பல வகையான மீன்களை பிடித்து வருவார். அவர் பிடித்த மீன்களில் சிறந்தாக உள்ள ஒரு மீனைத் தேர்ந்தெடுத்து மனதில் சிவபெருமானை எண்ணி சிவபெருமானுக்கென்று நீரிலேயே விட்டு விடுவார். அவர் பிடிக்கும் மீன்களில் தினமும் மீனை விட்டு வந்தவர் எம்பெருமானின் மீது கொண்ட அன்பை மட்டும் விடாது வாழ்ந்து வந்தார்.

ஒரு சமயத்தில் பல நாட்களுக்கு தொடர்ந்து ஒரு மீன் என்றவாறே கிடைக்கத் தொடங்கியது. அந்த வேளையிலும் வேறு மீன்கள் கிடைக்கவில்லையே என்று சிறிதும் மனக்கவலை கொள்ளாத அதிபத்தர் கிடைத்த அந்த ஒரு மீனையும் எப்போதும் போல மனதில் எம்பெருமானை எண்ணி எம்பெருமானுக்காகவே கடலிலே விட்டு விடுவார்.

அதை தொடர்ந்து வந்த நாட்கள் எல்லாம் அவருக்கு மீன்கள் கிடைக்காமையால் அவரின் செல்வ வளம் குறைய துவங்கியது. அவர் மட்டும் உணவின்றி இல்லாமல் அவரின் குடும்பமும் உணவின்றி வருந்தும் நிலை ஏற்பட துவங்கியது. ஆனாலும், அந்த நிலையிலும் கூட எம்பெருமானின் மீது கொண்ட பக்தியும், அன்பும் குறையாது எம்பெருமானுக்கு அளிக்க ஒரு மீனாவது தனது வலையில் விழுகிறதே என்று மகிழ்ச்சி கொண்டார்.

எம்பெருமானுக்காகவே வாழ்ந்தும் எம்பெருமானின் மீது அன்பு கொண்ட அதிபத்தரை சிவபெருமான் சோதிக்க எண்ணினார். எம்பெருமான் சோதிக்க நினைத்த காலம் முதலே அதிபத்தருக்கு ஒரு மீன் கூட கிடைக்கவில்லை. இன்று எம்பெருமானுக்கு அளிக்க ஒரு மீன் கூட தனது வலையில் அகப்படவில்லையே என்று மனக்கலக்கம் அடைந்தப்போது தூய்மையான பொன்னால் சூரியனை போன்று பேரொளியை சிந்தும் மணிகளால் உருவாக்கப்பட்ட உறுப்புகள் கொண்ட விலைமதிப்பற்ற மீனை தமது தொண்டரான அதிபத்தரின் வலையில் விழும்படி செய்தார்.

தனது வலையில் விழுந்த மீனை கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி அடைத்தார் அதிபத்தர். கிடைத்த மீனை சிறிதும் யோசிக்காமல் எம்பெருமானை மனதில் நினைத்து அந்த மீனை கடலில் விட்டுவிட்டார். எம்பெருமான் மீண்டும் மீண்டும் அந்த மீனை அதிபத்தரின் வலையில் விழச்செய்தார். ஆனாலும், அந்த மீனை சிவபெருமானுக்காக மீண்டும் மீண்டும் அதை கடலிலேயே விட்டு வந்தார் அதிபத்தர்.

மிகுந்த வறுமை தன்னை கொடுமை செய்த போதும் தாம் கொண்ட கொள்கையில் சிறிதும் மனம் தளராத அதிபத்தரின் அன்பை கண்டதும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் பார்வதிதேவியுடன் இணைந்து காட்சி தந்தார். எம்பெருமானை கண்ட மாத்திரத்தில் தனது மனதில் இருந்த கவலைகள் யாவும் நீங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் எம்பெருமானை வணங்கினார் அதிபத்தர். எம்பெருமான்... அதிபத்தரை நோக்கி உனது அன்பினாலும் நீர் கொண்ட பக்தியினாலும் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றுரைத்து வேண்டும் வரத்தினை கேட்பாயாக... என்று கூறினார்.

அதிபத்தரோ தனது சிரத்தின் மீது கரங்களை வைத்து அடியார்க்கு தாங்கள் அருள் செய்ததிலேயே மிகுந்த ஆனந்தம் அடைந்தோம் என்று பணிவுடன் கூறி, யான் என்றும் தங்களின் அடியார் கூட்டத்தில் இருக்க வேண்டும் என்ற வரத்தினை வேண்டினர். எம்பெருமானும் அதிபத்தரின் விருப்பத்திற்கு இணங்கி தம்முடைய சிவலோக அடியார் கூட்டத்தில் அதிபத்தரையும் சேர்த்துக்கொள்ள அருளினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்