சமீபத்தில் மத்திய அரசு இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளை ஹாட்ஸ்பாட் பகுதிகள் என குறிப்பிட்டு சில மாவட்டங்களின் பெயர்களை வெளியிட்டது என்பதை பார்த்தோம். அதில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்பட 22 மாவட்டங்களில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த ஹாட்ஸ்பாட் நகரங்களில் ஒன்று கலபுராகி. கர்நாடகத்தில் உள்ள இந்த மாவட்டத்தில் நேற்று ஒரு தேர் திருவிழா நடைபெற்றது. இந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சமூக விலகலை பொருட்படுத்தாமல் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் நடந்த இந்த தேர்த்திருவிழாவை போலீசாரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உள்ளூரில் மிகப் பிரபலமாக இருக்கும் இந்த தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதால் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் பரவி இருக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேர் திருவிழாவை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 3ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இவ்வாறு தேர் திருவிழா நடத்துவது பொறுப்பற்ற செயல் என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக