Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஏப்ரல், 2020

கர்ணன் குந்தியிடம் கேட்கும் வேண்டுகோள்..!

கர்ணன், இதுவே வேறு ஒருவராக இருந்தால் தனியாக இருக்கும்போது தன் மனைவியிடம் இவ்வாறு நடந்து கொண்டதை பார்த்து காரணம் அறியாமல் கொலை செய்து இருப்பார்கள். 

ஆனால் துரியோதனன் அவனுடைய பெருந்தன்மையால் என்னை மன்னித்துவிட்டான். நான் செய்தது மிகப் பெரிய தவறுதான்! ஆனால் அவன் அதை ஒரு சிறிய தவறாகக்கூட எண்ணவில்லை. 

அப்படிப்பட்ட துரியோதனனுக்கு என் உயிரையே கொடுத்தாலும் ஈடாகாது. நான் எப்படி நன்றியை மறந்துவிட்டு உங்களுடன் வருவேன். சோற்றுக்கடன் கழிப்பதற்காகவாவது போரில் அவன் பக்கம் என் உயிரைத் தியாகம் செய்தாக வேண்டும். 

தாயே தயவு செய்து நீங்கள் வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள். மறுக்காமல் செய்கிறேன் என்று கர்ணன் கூறினான்.

கர்ணன் பேசி முடித்த பின்பு, குந்தி என்னுடைய இன்னொரு வேண்டுகோளையாவது நிறைவேற்றுவாயா? என்று கேட்டாள். 

கர்ணன், கூறுங்கள் தாயே! தாராளமாக நிறைவேற்றுகிறேன் என்று கூறினான். குந்தி, நீ உன் சகோதரர் ஐந்து பேரில் அர்ஜூனனை மட்டும் தான் எதிர்த்து போர் புரிய வேண்டும். மற்ற நான்கு பேரிடம் போர் புரியக் கூடாது. 

அர்ஜுனனை பழிவாங்குவதற்கென்றே உன்னிடம் வளர்ந்து வரும் நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் நீ அவன் மேல் எய்யக் கூடாது என்று இரண்டு வேண்டுகோளை விடுத்தாள். ஆனால் கர்ணன் இரண்டாவது வேண்டுகோளை கேட்டதும் சிறிது தயங்கினான். 

ஆனால் கொடுத்த வாக்கு நினைவிற்கு வந்ததால் குந்தி கூறிய வேண்டுகோளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு அவற்றின் படியே நடக்கிறேன் என்று உறுதி அளித்தான். பிறகு குந்தி கர்ணனிடம், உனக்கு ஏதேனும் வேண்டுகோள் உள்ளதா! என்று கேட்டாள்.

கர்ணன், ஆமாம்! நானும் சில வேண்டுகோள்களை உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அவற்றை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் என்று கூறினான். 

குந்தி, உன்னைப் பெற்ற தாயாக வாய்த்ததே பெரும்பேறு பெற்றேன். உன் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்வதைவிடச் சிறந்த பாக்கியம் எனக்கு வேற எதுவும் இல்லை என்று கூறினாள். 

விதியின் வலிமை நம்முடைய வலிமைகளை எல்லாம் காட்டிலும் மிகப் பெரியது அம்மா! குருக்ஷேத்திரப் போரில் நான் அர்ஜுனனுடைய வில்லால் கொல்லப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. என்னுடைய வலிமைக்கு காரணமானவற்றையெல்லாம் உங்கள் வேண்டுகோள்களால் கட்டிப் போட்டுவிட்டீர்கள்.

அதனால் நான் இறந்துவிட்டால் என் சடலத்தை அனாதையாக விட்டுவிடாதீர்கள். என்னுடைய சடலத்திற்கு செய்ய வேண்டிய நீர்க் கடன்களையும், கொள்ளி வைப்பதையும் முறையாக என் தம்பிகளை கொண்டு செய்துவிடுங்கள். 

கர்ணனை இறுதிக் கடன் செய்து எரிப்பதற்குக் கூட ஆள் இல்லை என்று இழிவாகப் பேசும்படி விட்டுவிடாதீர்கள். நான் இறந்த பின்பு என்னுடைய உண்மையான தாய் நீங்கள் தான் என்று உலகத்தில் அனைவரும் ஒப்புக்கொள்ளுமாறு பரவச் செய்யுங்கள். 

என் சடலத்துக்கு பாலூட்டி அந்த உறவு முறையை வெளிப்படுத்தி, நான் உங்கள் புதல்வன் என்பதை உலகிற்கு உணர்த்துங்கள் என்று வேண்டிக் கொண்டான். 

குந்தியும், உன்னுடைய இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவதால் உனக்கு மட்டும் பெருமை இல்லை கர்ணா! எனக்கும் பெருமை தான் என்று வேண்டுகோளுக்கு இணங்கி உறுதிமொழி கொடுத்தாள். ஆனால் கர்ணன், எக்காரணம் கொண்டும் போருக்கு முன் என் பிறப்பின் ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம் என்றான்.

பிறகு குந்தி, கர்ணனிடம் விடை பெற்றுக்கொண்டு பிரிய மனம் இல்லாமல் பிரிந்து சென்றாள். கர்ணனும் தன் தாயிடம் இருந்து பிரிய மனமில்லாமல் விடை கொடுத்து அனுப்பினான். 

கர்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்ற குந்தி கிரு ;ணரை சந்திக்கச் சென்றாள். கிருஷ்ணர், குந்தியிடம் அங்கு நடந்தவற்றை கூறுமாறு கேட்டார். குந்தியும், அங்கு நடந்தவற்றை அனைத்தையும் கூறி முடித்தாள். 

கிருஷ்ணர், குந்தியிடம் இந்த உண்மை உன்னையும், என்னையும் கர்ணனையும் தவிர வேறு யாருக்கும் தெரியவேண்டாம். இந்த இரகசியம் இரகசியமாகவே இருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டார். கிருஷ்ணர், அஸ்தினாபுரம் செல்வதாக குந்தியிடம் கூறிவிட்டு சென்றார்.

கிருஷ்ணர், அங்கிருந்து புறப்படும் போது தன்னுடன் வந்த சிற்றரசர்கள், பரிவாரங்கள் தவிர வேறு சிலரும் வந்தார்கள். 

ஆனால் கிருஷ்ணர் அவர்கள் தம்முடன் வந்தால் குழப்பங்கள் நேரிடலாம் என்று கருதி தடுத்து நிறுத்திவிட்டார். அங்கிருந்து கிருஷ்ணர், பாண்டவர்களை சந்திக்கச் சென்றார். பாண்டவர்களைச் சந்தித்துத் தூது சென்ற இடத்தில் நடந்தவற்றையெல்லாம் தெளிவாக கூறினார். 

இனிமேல் நாம் துரியோதனனிடம் போர் செய்து நம் உரிமையைப் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பாண்டவர்கள் நினைத்தனர். அதனால் தங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்திருந்த பேரரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் படைகளைக் கொடுத்துப் போரில் நேரடியாக உதவிபுரிய வேண்டுமென்று தூது அனுப்பி வேண்டிக் கொண்டார்கள். 

போர் நடக்கும் செய்தியைத் தூதுவர்கள் மூலம் அறிந்து கொண்ட அரசர்கள் தத்தம் படைகளோடு பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.

நியாயத்தைக் கூறுகிற தருமநெறி போலவும் தருமத்தை விட்டு விலகாத உண்மையை போலவும் அரசர்கள் பலரின் படைவீரர்கள் பாண்டவர்கள் பக்கம் மேலும் மேலும் வந்து சேர்ந்தார்கள். 

திரௌபதியின் தந்தையாகிய துருபத மன்னன் தன்னுடைய சிற்றரசர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு வந்திருந்தான். தமிழ்நாட்டு மூவேந்தர்கள் வந்திருந்தார்கள். பாண்டவர்கள் பக்கமே உண்மையும் அறமும் ஓங்கி நிற்கின்றன என்பதை உணர்ந்து கொண்ட அரசர்கள் அனைவரும் வந்திருந்தனர். 

முடி சூடிய மன்னர்களும், இளவரசர்களும், படை நடத்தும் தலைவர்களும், அமைச்சர்களும், உற்சாகத்தோடு பாண்டவர்களுக்கு உதவிபுரிய வந்து காத்திருந்தனர். பாண்டவர்கள், தங்களுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராக வந்திருக்கும் அனைவரையும் அன்பு ததும்பும் மனதோடு வரவேற்றுத் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துகொடுத்தனர்.

தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக