Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 ஏப்ரல், 2020

கர்ணனை காண செல்லும் குந்தி...!

இந்திரன், அந்தணனை போல வந்து கவச குண்டலங்களை வாங்கிக் கொண்டு சென்றதை நினைத்துக் கொண்டு மாளிகையில் கர்ணன் உலாவிக் கொண்டிருந்தான். வேறு சில எண்ணங்களும் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் குந்தி மாளிகைக்குள் நுழைந்தாள். 

குந்தி வருவதை கர்ணன் பார்த்து விட்டான். உடனே குந்தியின் முன்னாள் வந்து கிருஷ்ணர் என்னிடம் நீங்கள் தான் என் தாய் என்ற இரகசியத்தை கூறினார். நான் உங்களின் மகன் என்பது உண்மை என்றால் உங்களை மகிழ்ச்சியோடும், பாசத்தோடும் வரவேற்பது எனது கடமை என்று கூறினான். அதற்கு குந்தி மறுமொழி கூறாமல் சிறிது நேரம் கர்ணனை உற்றுப் பார்த்தாள்.

பின்பு மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கர்ணன் பிறந்த சூழலை உரைத்தாள். குந்தி சொல்வதை அனைத்தையும் கர்ணன் உருக்கமாக கேட்டான். குந்தி கூறியது உண்மையாகத்தான் இருக்கும் என்று கர்ணனுக்கு தோன்றியது. ஆனால் பாண்டவர்களுக்கு ஆதரவு கிடைப்பதற்காக கிருஷ்ணர் குந்தியை வைத்து நாடகத்தை நடத்துகிறார் என்று ஒரு சந்தேகமும் இருந்தது. 

அதற்காக குந்தியிடம் நேருக்கு நேர் அந்த சந்தேகத்தையும் கேட்டு நிவர்த்தி செய்து கொள்ள ஆசைப்பட்டான். அதற்காக குந்திக்கு ஒரு கடுமையான சோதனையை வைத்தான். அம்மா! நீங்கள்தான் என்னுடைய தாய் என்பது உண்மையாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் என் மனதில் சில சந்தேகங்கள் இருக்கின்றது. அதனை நிவர்த்தி செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினான்.

முன்பு பல பெண்கள் என்னுடைய செல்வத்திலும், செல்வாக்கிலும், பெருமையிலும் பங்கு கொள்ள ஆசைப்பட்டு என் தாய் என்று பொய் உறவு கொண்டாடி வந்தனர். அத்தகைய தீய இயல்பையும், தீய எண்ணங்களும் கொண்ட அந்தப் பெண்களை சரியாக சோதித்துத் தண்டித்தேன். 

தேவர்களால் எனக்குப் பரிசளிக்கப்பட்ட ஒரு மாயமந்திரம் பொருந்திய ஆடை ஒன்று என்னிடமிருக்கிறது. என்னை உண்மையாகவே பெற்ற தாயைத் தவிர வேறு யார் அணிந்து கொண்டாலும் அந்த ஆடை அவர்களை எரித்துவிடும். என்னைப் பெற்றெடுத்த தாய் என்று பொய் உரைத்ததால் அவர்களை அந்த ஆடை எரித்து விட்டது.

ஆனால் நீங்கள் என்னுடைய உண்மையான தாய் என்பதால் அந்த ஆடை தங்களை ஒன்றும் செய்யாது என்று கூறி அந்த அற்புத ஆடையை எடுத்துக் கொண்டு வந்து குந்தியிடம் கொடுத்தான். கர்ணன் கொடுத்த ஆடையை விரித்து தன் உடல் மறைய குந்தி போர்த்திக்கொண்டாள். 


விநாடிகள் கடந்து சென்றது. ஆனால் குந்தியை அந்த ஆடை எதுவும் செய்யவில்லை. குந்தி, பொழிவாக விளங்குகிற ஆடையை போர்த்திக் கொண்டு சிரித்த முகத்துடன் தன் மகனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். கர்ணன் மகிழ்ச்சியுடன், அம்மா! இனிமேல் சந்தேகமே இல்லை. நீங்கள் தான் என்னைப் பெற்ற தாய். நான் உங்கள் புதல்வன் என்று கூறி அன்புடன் குந்தியின் பாதங்களில் விழுந்து வணங்கினான்.

குந்தி, கர்ணனை தன் கைகளால் எடுத்துத் தூக்கி தன்னுடன் தழுவிக் கொண்டாள். மகனே! நான் உன்னைப் பெற்ற பின்பு உன் முகத்திலேயே விழிக்க முடியாத பாவியாகிவிட்டேன். நான் செய்த தவறுகளை மன்னித்துவிடு. உன்னுடைய சகோதரர்களாகிய பாண்டவர்கள் வனவாசத்தை முடித்துவிட்டு வந்த பிறகும் நாட்டை இழந்து தனியாக இருக்கிறார்கள். 

நீ உடனே அவர்களுடன் வந்து சேர்ந்து மூத்தவன் என்ற பொறுப்போடு, அவர்களுடன் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்று கூறி மனமுருகி அழுதாள். ஆனால் கர்ணன் குந்தியிடம் கடமையைக் காட்டிலும் நன்றி தான் எனக்கு முக்கியம். நீங்கள் என்னை பெற்றவுடன் ஆற்றில் மிதக்க விட்டுவிட்டீர்கள். என்னை இத்தனை காலமாக வளர்த்தது சூத்திர குலத்தை சேர்ந்த அதிரதன் என்பவர் தான். இன்று வரையிலும் துரியோதனன் எனக்கு உற்ற நண்பனாக இருக்கிறான்.

 துரியோதனன், என்னையும் மதித்து ஒரு நாட்டுக்கு அரசனாக்கி தன் சகோதரர்களும், பிற சிற்றரசர்களும் வணங்கிப் போற்றும்படிச் செய்தான். இன்னும் எத்தனையோ விதங்களில் அவனுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன். 

ஒரு நாள் துரியோதனன் துணைவி பானுமதியும், நானும் தனிமையில் அமர்ந்து பகடை உருட்டும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தோம். இரண்டு பேரும் ஆர்வத்தோடு விளையாடிக்கொண்டிருந்தோம். விளையாடும் போது மாளிகையின் வாயில் புறத்தில் துரியோதனன் உள்ளே வந்ததை பானுமதி பார்த்து விட்டாள். கணவன் முன்னால் எழுந்து நிற்க வேண்டிய மரியாதைக்காக அவள் எழுந்து நின்றாள்.

ஆனால் நான் வென்று விடுவேன் என்று அவள் எழுந்து நின்று ஆட்டத்தை களைத்து விட்டாள் என்று தவறாக புரிந்துகொண்டு வரன்முறை எல்லாவற்றையும் மறந்து அவளைத் தொட்டு அவள் இடுப்பிலிருந்த ஆபரண மேகலையை பிடித்து இழுத்து விட்டேன். நான் இழுத்த வேகத்தில் ஆபரணம் அறுந்துவிட்டது. அறுந்த மேகலையிலிருந்து மணிகள் சிதறியது. நாங்கள் இருவரும் பதறிவிட்டோம். ஆனால் துரியோதனன் எந்தவித பதட்டமும், கோபமும் இல்லாமல், கர்ணா! இந்த மணிகளை எல்லாம் நான் எடுத்துக் கோர்த்து தருகிறேன் என்று முன்வந்தான். அப்பொழுதுதான் துரியோதனன் அங்கே வந்திருப்பதும் அதனால் தான் அவள் எழுந்தால் என்ற காரணமும் எனக்கு புரிந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக