Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

கல்வியின் சிறப்பு

எல்லாச் செல்வங்களிலும் சிறந்த செல்வம் கல்வியே! கல்வி தான் ஒருவனை அறிவாளி ஆக்குகிறது. அறியாமை எனும் இருட்டைக் கல்வி எனும் ஒளி தான் போக்குகிறது. எதிர்காலத்தை சிறப்பாய் அமைக்க உதவுவது கல்வியே. ஆதலால் கல்வியை தக்க முறையில் பயில்வது இன்றியமையாதது.

இங்கு கல்வியின் சிறப்பை உணராத ஒரு சிறுவன், கல்வியின் சிறப்பை எப்படி உணர்ந்தான் என்பதை பார்ப்போம்.

ஒரு கிராமத்தில் தாமு என்பவர் அவருடைய மனைவி தேவகி, செல்ல மகன் சீனு ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். தாமு மற்றும் தேவகி இருவரும் கூலி வேலை பார்த்து குடும்பத்தை நடந்தி வந்தனர். தாமுவிற்கும், தேவகிக்கும் தங்களைப் போல் தங்கள் செல்ல மகன் கஷ்டப்படாமல் நன்கு படித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ஆசைபட்டனர். அதனால் சீனுவின் அப்பா தினமும் சீனுவிடம் பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் செல்ல வேண்டும். நன்றாக படிக்கணும், நன்றாக படித்து முடித்து நல்ல வேலைக்கு போகணும். நீ சந்தோஷமாக இருக்கணும். அதுதான் எங்கள் இருவரின் ஆசை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்.

ஆனால் சீனு, அப்பா சொல்வதை சிறிதும் காதில் வாங்கிக் கொள்ளாமல், பள்ளிக்கு ஒழுங்காகச் செல்லாமலும், படிக்காமலும், மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டும் இருந்து வந்தான். சீனுவின் இந்த செயல் பள்ளி ஆசிரியர் மூலம் தாமுவிற்கும், தேவகிக்கும் தெரியவந்தது. உடனே இருவரும் சீனுவை அழைத்து ஏன் பள்ளிக்குச் செல்லாமல் இவ்வாறு நடந்து கொள்கிறாய் என்று கேட்டனர். அதற்கு சீனு, தனக்கு படிப்பில் ஆர்வம் இல்லை என்றும், தான் வேலைக்குச் செல்ல விரும்புவதாகவும் கூறினான். சீனு கூறியதைக் கேட்ட தாமு, தேவகி தன் மகனின் எதிர்காலத்தை எண்ணி மிகவும் வருத்தப்பட்டனர். எங்கள் ஆசையை நிறைவேற்ற உன்னால் இயலவில்லை என்கிறாய். சரி, உன்னுடைய விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம். நீ தாராளமாக நாளை முதல் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு செல் என்று மனதை தேற்றி கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.

அடுத்தநாள் சீனு, பள்ளிக்கு செல்லாமல் சிற்றாள் வேலைக்குப் போனான். முதல் நாள் சிற்றாள் வேலை செய்வது அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அடுத்தநாள் வேலை செய்த களைப்பால் நீண்ட நேரம் தூங்கி விட்டான். சீனுவின் மேஸ்திரி அங்கு வந்து, டேய் சீனு, எட்டு மணி ஆகிறது. இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறாயா? எழுந்தரிடா என்று குச்சியில் அடித்தபடி எழுப்பினார். சீனு வேகமாக எழுந்து, அவசர அவசரமாக வேலைக்கு ஓடினான். பகல் முழுவதும் மண், சிமெண்டு, சாந்து சுமக்க வேண்டும். சீனுவின் உடம்பெல்லாம் புண்ணாக வலித்தது. மாலையில் வேலை முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது மேஸ்திரி தன் மகனிடம் பேசிக் கொண்டிருந்ததை சீனு கேட்டான். மேஸ்திரி தன் மகனிடம் நீ நன்றாக படிக்கணும். நீ நன்றாக படித்தால் என்னை மாதிரி நாற்காலியில் அமர்ந்தபடி மற்றவர்களை வேலை வாங்கலாம். இல்லாவிட்டால் இப்படித்தான் இவர்களைப்போல் கல் சுமந்து, மண் சுமந்து அவஸ்தைப்படணும். என்ன புரிஞ்சுதா? இனி நன்றாக படிப்பியா? என்று கேட்டார். அவனும் சரி அப்பா நான் நன்றாக படிக்கிறேன் என்றான்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை கேட்ட சீனு, மேஸ்திரி சொன்னதைத்தானே நம் அப்பாவும் நம்மிடம் சொன்னார். அவர்கள் சொன்னதை தான் அப்போது கேட்காததை எண்ணி மனதிற்குள் வருத்தப்பட்டான். உடனே சீனு, தான் இனி இந்த சிட்டாள் வேலைக்கு வரவில்லை என்று அந்த மேஸ்திரியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு வீட்டிற்கு சென்றான். வீட்டிற்கு சென்றவுடன் சீனு, தன் அப்பாவிடம் நான் நாளை முதல் மீண்டும் பள்ளிக்கு செல்கிறேன் என்றும், நன்றாகப் படித்து நல்ல வேலையில் சேர்வேன் என்றும் கூறினான். சீனு கூறியதைக் கேட்ட சீனுவின் அப்பா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

தத்துவம் :

கல்வியின் பயனை அறிந்து கல்வியை முழுமையாக கற்றால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக