Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

இலங்கா தேவி - அனுமன் சண்டை

இலங்கா தேவி, இலங்கையை விழிப்புடன் பாதுகாத்து வரும் நகர தேவதை ஆவாள். நான்கு முகங்களும், எட்டு கரங்களும், கொடிய உருவமும் கொண்டவள். அவள் தோற்றமே அச்சம் தருவது போல் இருந்தது. 

அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில், அம்பு ஆகிய ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு இருந்தாள். அனுமன் மதில் சுவரை ஏறுவதைக் கண்டு இலங்காதேவி, நில்! நில்! என சொல்லிக் கொண்டு ஓடி வந்தாள். அனுமனிடம், யார் நீ? ஒரு குரங்கு, உனக்கு எவ்வளவு தைரியம்? என் அனுமதியின்றி யாரும் உள் செல்லக் கூடாது.

 எவரும் உள் செல்ல அஞ்சும் இக்காரியத்தை செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்? இத்தனை அரக்கர்கள் காவல் புரிவதை பார்த்து உனக்கு பயம் இல்லையா? இங்கிருந்து ஓடிப்போ, என்றாள்.

இவளது பேச்சைக்கேட்டு அனுமனுக்கு கோபம் வந்தது. ஆனால் அனுமன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. அனுமன், எனக்கு இந்நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான் நான் இங்கு வந்தேன் என்று புத்திசாலிதனமாக கூறினான். 

நான் உன்னை இங்கிருந்து, ஓடிப்போ என்று சொன்ன பிறகும் நீ என்னிடம் வாதம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு எவ்வளவு துணிவு வந்திருந்தால் இங்கே வந்திருப்பாய்? உன்னைப் போன்றோர் இங்கே வரக் கூடாது. பதில் பேசாமல் இங்கிருந்து ஓடிப் போ என ஏளனமாக கூறினாள். 

அரக்கி இப்படி பேசுவதை கேட்டு அனுமன் மனதில் சிரித்துக் கொண்டான். மறுபடியும் அரக்கி அனுமனிடம், நீ யார்? யார் சொல்லி நீ இங்கே வந்துள்ளாய்?

நான் இவ்வளவு சொல்லியும் நீ இங்கிருந்து போவது போல் தெரியவில்லையே! உன்னை கொன்றால் தான் இங்கிருந்து போவாய் என நினைக்கிறேன் என்றாள்.

அனுமன், நீ என்ன தான் செய்தாலும், இந்த ஊருக்குள் போகாமல் திரும்பி போகமாட்டேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட இலங்காதேவி, அனைவரும் என்னைப் பார்த்து அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் இவன் என்னைப் பார்த்து பயப்படுவது போல் தெரியவில்லை.

 இவன் சாதாரணமான குரங்கு இல்லை. இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது. இவனை கொல்வது தான் சரி. இல்லையென்றால் இலங்காபுரிக்கு தீங்கு ஏற்படும் என்று மனதில் நினைத்தாள்.

உடனே இவள் அனுமனை பார்த்து, முடிந்தால் உன் உயிரை காப்பாற்றிக் கொள் என கூறிக் கொண்டு வேலை அனுமனை நோக்கி எறிந்தாள்.

தன்னை நோக்கி வந்த வேலை அனுமன் தன் கைகளால் ஒடித்து தூக்கி எறிந்தான். தன் வேலை ஒடித்த அனுமன் மீது மிகுந்த கோபம் கொண்டு பல ஆயுதங்களை ஏவினாள். 

அனுமனோ தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை எல்லாம் ஒடித்து வானில் வீசினான். தன் ஆயுதங்கள் அனைத்தும் வானில் தூக்கி எறியப்பட்டதை பார்த்து மிகவும் கோபங்கொண்டு குன்றுகளை அனுமன் மேல் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தாள், இலங்கா தேவி. பிறகு இலங்கா தேவி அனுமனை தன் கரங்களால் அடிக்க ஓடி வந்தாள். அனுமன் அவளது கரங்களை ஒன்றாக பிடித்து அவளை ஓங்கி அடித்தான். அவள் வலி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தாள்.

பிறகு இலங்கா தேவி அனுமனிடம், வானரமே! எவராலும் வீழ்த்த முடியாத என்னை நீ வீழ்த்திவிட்டாய். அப்படியென்றால் அரக்கர்களுக்கு அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. 

ஐயனே! நான் பிரம்மதேவரின் கட்டளையினால் இலங்கையை காவல் புரிகிறேன். பிரம்மன் என்னிடம், எப்போது வானரத்தால் நீ வீழ்கிறாயோ, அப்பொழுது அரக்கர் குலம் அழிய போகிறது என்று அர்த்தம் என்றார். 

உன்னால் இன்று என் காவல் நிறைவுப்பெற்றது. பிரம்மன் சொன்னது போல் நடந்துவிட்டது. இனி நீ செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும் எனக்கூறி அனுமனுக்கு வழிவிட்டு வானுலகம் சென்றாள்.

தேடல் தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக