Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கூறிய அறிவுரை !

🌹 பாண்டவர் படைகளும், கௌரவர் படைகளும் போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டன. துரியோதனன், கர்ணன் முதலியவர்களும் அணிவகுப்பு முறைப்படியே சென்றனர். கௌரவர்கள், பதினொரு அக்குரோணி படைகளுடன் பேராரவாரத்தோடு போர் களத்தை நோக்கி நடந்தனர். குருச்ஷேத்திர களத்தில் பாண்டவர்களின் படைகளும், கௌரவர்களின் படைகளும் சேர்ந்து பதினெட்டு அக்குரோணிப் படைகளாக நின்றனர். குருக்ஷேத்திரத்தில் இருதரப்பு படைகளும் அணிவகுத்து நின்றன. இந்த மாபெரும் போரினால் ஈரேழு பதினான்கு புவனங்களும் என்ன ஆகுமோ என்று அனைவரும் கலங்கினர். இரண்டு பெருங்கடல்கள் எதிரெதிரே நிற்பதுபோல இருபுறமும் படைகள் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றன.

🌹 படைத்தலைவர்களின் ஆணை கிடைத்தால் படைகள் கலந்து போர் புரிய தயாராக நின்றனர். தனக்கு தேரோட்டியாக இருக்கும் கிருஷ்ணரைப் பார்த்து அர்ஜுனன், பரந்தாமா! தேரை விரைவாகச் செலுத்துங்கள். என் எதிரில் போர் செய்வது யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். துரியோதனனுக்கு துணையாக வந்திருப்போரைக் காணவேண்டும் என்றான். கண்ணாகப் பழகிப் பாசம் காட்டிய பீஷ்மர், கலைகளையும், வில் வித்தையையும் கற்பித்த ஆசிரியர் துரோணர், கிருபாச்சாரியார், எவ்வளவோ துரோகம் செய்திருந்தாலும் சகோதரர் முறையாகிய துரியோதனனும் அவன் தம்பிமார்களும் எதிர்புறம் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.

🌹 அர்ஜூனனின் மனதில் பாசத்துக்கும், கடமைக்கும் இடையே பெரும்போர் நடந்தது. அர்ஜூனன் தனக்கு முன்னே மலர்ந்த முகத்துடன் இருக்கும் தேரைச் செலுத்தும் கிருஷ்ணரைப் உற்றுப் பார்த்தான். கிருஷ்ணர், அர்ஜுனனின் மனநிலையை உணர்ந்துகொண்டு சிரித்தார். அர்ஜூனன், கிருஷ்ணரிடம் இந்தப் போர் வேண்டாம், என்னை விட்டு விடுங்கள்! நான் சென்றுவிடுகிறேன். வில், வாள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினான். ஆனால் கிருஷ்ணர், இதை கேட்டு கலகலவென்று சிரித்தார். கிருஷ்ணர், அர்ஜூனனிடம் நீ என்னிடம் விளையாடுகிறாயா? அல்லது உண்மையாகத்தான் சொல்கிறாயா? என்று கேட்டார். அர்ஜூனனும் உண்மையாகத்தான் சொல்கிறேன், அண்ணனையும், தம்பியையும், பாட்டனையும் கொன்று பெறுகின்ற வெற்றி எனக்கு வேண்டாம். உறவினர்களைக் கொன்று அரசாட்சியை அடைய முயலும் தீவினையிலிருந்து என்னை விடுதலை செய்யுங்கள்! என்று கிருஷ்ணரிடம் கூறினான்.

🌹 உண்மையாகவே அர்ஜூனன் குழப்பத்துடன் இருக்கிறான் என்பதை கிருஷ்ணர் புரிந்து கொண்டார். கிருஷ்ணர், அர்ஜூனனிடம் மனம் வருந்தாதே! தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! இரக்கத்தால் நீ போரிடவில்லை என்று பகைவர்கள் எண்ணமாட்டார்கள். போரிட அஞ்சுகிறாய் என்று நினைப்பார்கள். அவர்களின் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர். போரில் வெற்றி பெற்றால் இந்த மண்ணுலகம், வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம். அதனால், நீ துணிந்து போர் செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார். கிருஷ்ணரின் அறிவுரையைக் கேட்ட அர்ஜுனன் மனக் குழப்பம் தீர்ந்து, நீங்கள் கூறியபடி நடக்கிறேன் என்று கூறி போருக்கு தயாரானான்.

🌹 கிருஷ்ணரும், பாண்டவர்களும் போரைத் தொடங்குவதற்கு முன்னால் எதிர்ப்பக்கம் இருந்த கௌரவர்களிடம் சென்று தங்களுக்கு வேண்டியவர்களை சந்தித்து விட்டு வர, தேரின் மேலே ஏறிக் கொண்டு கௌரவர்கள் படை நின்று கொண்டிருந்த இடத்திற்குச் சென்றனர். முதலில், அவர்கள் பீஷ்மரை சந்தித்தனர். கிருஷ்ணர், பீஷ்மரிடம் இந்தப் போரில் பாண்டவர்கள் பக்கம்தான் நியாயம் இருக்கிறது. இது தங்களுக்கே தெரியும். இப்படித் தெரிந்திருந்தும் பாண்டவர்களை எதிர்த்து போரில் நீங்கள் முன்னணியில் நிற்கலாமா? நீங்களே இந்தப் போரில் தலைமை தாங்கி நின்றால் பாண்டவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என்று கேட்டார்.

🌹 பீஷ்மர், பாண்டவர்களிடம் போரில் வெற்றி நிச்சயமாக உங்களுக்குத்தான். எதிர்கால உலகம் தர்மனது இன்பம் நிறைந்த செங்கோலாட்சிக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. நான் விரைவில் இறந்து விட்டால் உங்களுக்குச் சீக்கிரமே வெற்றி கிடைத்துவிடும். முன்பொரு காலத்தில் என்னைக் கொல்ல வேண்டும் என்று தவத்தின் பயனாக இப்பிறவியில் துருபதனின் மகனாக பிறந்த சிகண்டியால் தான் எனக்கு மரணம் ஏற்பட போகிறது. சிகண்டியை எனக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினால் பெண்ணாக இருந்து ஆணாகப் பிறந்தவன் என்ற இழிவினால் நான் வில்லையோ, வாளையோ, கையில் எடுக்கமாட்டேன். அப்பொழுது அர்ஜூனன் எய்தும் அம்புகளால் நான் வீழ்ந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக