Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 004

அரிவாட்டாய நாயனார்!

கணமங்கலம் என்னும் ஊர் சோழவள நாட்டின் செழிப்பும், வளமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்த தலங்களில் ஒன்றாகும். பாசன வசதியும், வளம் கொழிக்கும் மண் மேன்மையும், ஆன்ம வளத்தை அளிக்கக்கூடிய இறை வளமும் நிறைந்த இந்த தலத்தில் தாயனார் என்னும் சிவனடியார் அவதாரம் செய்தார். தாயனார் வேளாண் குடியிலேயே பிறந்தவர். சிவபெருமானின் மீது மிகுந்த பக்தியும், அன்பும் கொண்டவர்.

தினமும் இறைவனுக்கு சம்பா அரிசியின் அமுதும், செங்கீரையையும், மாவடுவையும் நிவேதனப் பொருட்களாகத் தவறாமல் அளித்து வந்தார். தாயனார் கோவிலுக்குச் செய்து வந்த திருப்பணிகள் பலவற்றுள் இதை ஒரு முக்கியத் திருப்பணியாகக் கொண்டிருந்தார். இவரது துணைவியாரும் தன்னுடைய கணவரை போன்று இறைவனிடத்தில் பக்தி கொண்டிருந்தாள். கணவனும், மனைவியும் இறைப்பணியை செய்வதை தமது வாழ்நாளில் முக்கிய இலட்சியமாக கொண்டிருந்தனர்.

எம்பெருமான் இவர்கள் செய்து வந்த மாசற்ற அன்புடன் கூடிய பக்தியினால் மனம் மகிழ்ந்தார். இவர்களது அன்பினால் மகிழ்ந்த எம்பெருமான் இவர்களின் பக்தியை உலகறிய செய்யும் பொருட்டு திருவிளையாடல் நிகழ்த்த தொடங்கினார். எங்கே அவரின் விளையாடலுக்கு ஆட்படுகின்றோமோ... அங்கே இறைவனின் அன்பையும், ஆட்சியையும் பெற துவங்குகிறோம். எம்பெருமானின் அருளால் இவர்கள் செய்து வந்த திருத்தல பணிகளுக்கு இடையூறு நிகழும் வண்ணம் பயிர் விளைச்சல் குன்றி வறுமை ஏற்படத் துவங்கியது.

தாயானார் ஈட்டி சேமித்து வைத்த அனைத்து செல்வங்களும் இருந்த இடம் தெரியாது மறைந்து போயின. அதாவது அவர் ஈட்டி வைத்த செல்வம் யாவும் பரந்து விரிந்த கடலில் சிந்திய உப்பை போன்று இருந்த இடம் காணாது போயின. செல்வங்கள் யாவும் இழந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் எம்பெருமானுக்கு திருவமுது செய்ய வேண்டும் என்று சற்றும் மனம் தளராமல் அதற்கான பணிகளை மேற்கொள்ளத் துவங்கினார்.

வறுமையின் நாட்களும் அதிகரிக்கத் தொடங்கின. தன்னிடம் இருந்த செல்வ செழிப்பையும், பல வேலை ஆட்களை வைத்தும் வேலை வாங்கி பொருள் ஈட்டிய அடியார் இன்று இறைவனுக்கு திருவமுது செய்ய வேண்டுமே என்று எண்ணி நெல் அறுக்கும் பணியில் ஈடுபடத் தொடங்கினார். கூலி வேலைக்கு உண்டான கூலிக்கு கிடைக்கும் செந்நெல்லை இறைவனுக்கு திருவமுது செய்யவும், கார் நெல் அறியும் இடத்தில் கிடைக்கும் கூலியான கார் நெல்லை தன்னுடைய உணவிற்கும் பயன்படுத்திக் கொண்டார்.

இவ்விதமாக வறுமையில் வாழ்ந்து வந்தாலும் இறைவனுக்கு திருவமுது செய்ய முடிகின்றதே என்று எண்ணி மிகவும் பெருமையாகவும், மனக்களிப்புடனும் வாழ்ந்து வந்தார். எம்பெருமான் திருவுள்ளம் இந்த நிலையையும் மாற்றத் துவங்கியது. எம்பெருமானின் அருளால் தாயனாருக்கு இனி வருகின்ற விடியற்பொழுதும் மாற்றம் மிகுந்த பொழுதாக இருந்து வந்தது.

தனது குடியிருப்பில் இருந்து தனது வேலைக்காக செல்லும் வயல்வெளியை அடைந்ததும் தாயனார் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாதது. அதாவது இறைவனின் திருவுள்ளம் கொண்ட அன்பினால் வயல் வெளிகள் செந்நெல்லாக பூத்துக் குலுங்கின. வயலில் இருந்த கார் நெல் எல்லாம் செந்நெல்லாக மாறி, கார் நெல் சிறிதும் இல்லாமல் இருப்பதை கண்ட தாயனார் எப்பிறவியில் யாம் செய்த புண்ணியமோ என்று எண்ணி மனம் மகிழ்ந்தார்.

தாயனார் அன்று முழுவதும் வேலை செய்து கிடைத்த கூலிகளான செந்நெல் யாவும் எம்பெருமானுக்கு திருவமுது செய்துவிக்க அளித்து வந்தார். தனக்கும், தன் துணைவியாருக்கும் அரிசி உணவு இல்லாமல் போனது. தாயனாரோ அதைப் பற்றி சிறிதும் கவலைக் கொள்ளாமல் தனது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும் கீரையை பக்குவம் செய்து சமைத்து உண்ணத் தொடங்கினார். இவ்வுணவை உண்டே... கிடைக்கும் கூலிகளைக் கொண்டு இறைவனுக்கு திருவமுது செய்து கொண்டிருந்தார். இவ்வாறு இருக்கையில் கிடைக்கும் கீரைக்கும் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது.

கீரைக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையிலும் தனக்கு கிடைத்த கூலியை கொண்டு இறைவனுக்கு திருவமுது செய்து கொண்டிருந்தார். தன்னுடைய வயிற்றுப்பசியை தண்ணீர் அருந்தி நிரப்பிக் கொண்டிருந்தார். அடியாரின் வயிற்றில் எதுவும் இல்லாமல் இருந்தாலும், மனதில் மிகவும் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு திருவமுது செய்ய முடிகின்றதே என்ற எண்ணம் அவரை மகிழ்ச்சி அடையச் செய்து கொண்டிருந்தது.

ஒருநாள் தாயனார் இறைவனுக்கு திருவமுது படைப்பதற்கான செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஓர் கூடையில் சுமந்துக்கொண்டு புறப்பட்டார். பசியால் ஏற்பட்ட சோர்வு அவரை மிகவும் வருத்தியது. அடியாருடன் அவரது மனைவியும் பஞ்சகவ்வியம் எடுத்துக்கொண்டு நடக்க முடியாமல் சென்று கொண்டிருந்தார். தாயனார் பசியினால் நிலத்தில் விழப்போனார். அம்மையார் தாங்கிக் கொண்டார். கூடையில் சுமந்து வந்த நிவேதனப் பொருட்கள் கீழே விழுந்து சிதறின.

நிவேதனப் பொருட்கள் கீழே விழுந்ததை எண்ணி தாயனார் மனம் கலங்கினார். திருவமுது தரையில் வீழ்ந்த பின்னர் திருக்கோவிலுக்கு சென்று தான் என்ன பயன்? என்று எண்ணித் துடித்தார். தாயனார் உலகத்தில் உயிர் வாழவே விரும்பவில்லை. தம்மிடம் இருந்த அரிவாளால் கழுத்தை அரிந்துகொள்ள துணிந்தார்.

அவரது பக்தியின் ஆவேசத்தைக் கண்டு உடன் வந்த அவரின் மனைவி செய்வதறியாது திகைத்தார். பின்னர் தன் கழுத்தில் கிடக்கும் மாங்கல்யத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றியவாறு இறைவனை வணங்கி நின்றார். தாயனாரின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட அம்பலத்தரசன் தொண்டரைத் தடுத்தாட் கொண்டார். திருவமுது சிந்திய நிலவெடிப்பிலிருந்து ருத்ராட்ச மாலையும், திருவெண்ணீரும் அணியப் பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.

அத்திருக்கரம் நாயனாரின் கையைப் பற்றியது. இறைவனின் ஸ்பரிசத்திலே மெய் உருகி நின்றார் தாயனார். அவர் கையிலிருந்த அரிவாள் தானாக நழுவியது. நிலத்தில் இருந்து வெடுக் வெடுக் என்று ஒலி கேட்டது. அவ்வொலியைக் கேட்ட தாயனார் தான் நிலத்தில் கொட்டிய மாவடுவை எம்பெருமான் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அறிகுறியாகத்தான் இவ்வோசை கேட்கிறது என்று உணர்ந்து அகம் மகிழ்ந்தார்.

நினைத்த மாத்திரத்திலேயே எழுந்தருளி அடியார்கள் துயர் துடைக்கும் இறைவனின் திருவருட் கருணையை எண்ணி எண்ணி மனம் உருகிய தாயனாரும், அவர் மனைவியாரும் நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தனர். அடியவரை ஆட்கொண்ட இறைவன் சக்தி சமேதராய்த் தம்பதியருக்கு பேரானந்த காட்சி அளித்தார். இறைவன் தாயனாருக்கும், அவர் தம் மனைவியாருக்கும் என்றென்றும் தம் அருகிலேயே இருந்து மகிழ்ந்து வாழும் பேரின்பப் பேற்றினை அருளினார்.

அரிவாளால் தம் கழுத்தை அரியத் துணிந்தமையால் இவருக்கு தாயனார் என்ற நாமத்துடன் அரிவாள் தாய நாயனார் என்னும் சிறப்பு திருநாமம் ஏற்பட்டது. அரிவாள் தாய நாயனாரும், அவரது மனைவியாரும் உலகில் நெடுங்காலம் வாழ்ந்து, இறைவனுக்குப் பற்பல அரிய திருப்பணிகளைச் செய்தனர். பின்னர் இருவரும் பிறவாப் பெருவாழ்வு பெற்று இறைவனின் திருவடி நிழலிலேயே ஒன்றினர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக