Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

கிருஷ்ணர் துரியோதனனுக்கு கூறிய அறிவுரை !

கிருஷ்ணர், துரியோதனா! நீ என்ன செய்தாய் என்று உனக்கு தெரியாதா! என்ன தீமை செய்தாய் என்று கேட்கின்றாய். நீ செய்த தீமைகள் ஒன்றா, இரண்டா? பாண்டவர்களை துன்புறுத்தி அவர்களை கட்டாயப்படுத்தி சூதாட வைத்தாய். 

அவையில் திரௌபதியின் ஆடையை களைய முற்பட்டாய். பீமனைக் கட்டிப் போட்டு விஷத்தை கொடுத்து அழிக்க நினைத்தாய். இத்தனை கொடுமைகளையும், பாவத்தையும் செய்து விட்டு என்ன செய்தேன் என்று கேட்கிறாய். நீ பெரியவர்கள் யாருடைய அறிவுரைகளையும் மதிக்கவில்லை. சமாதானத்தை விரும்பாத நீ நிச்சயமாக போர்க்களத்தில் அழிவது உறுதி என்று கூறினார்.

துரியோதனனும் ஆமாம்! போர் புரிவதுதான் சரியான வழி. யார் வலியவர்கள், யார் எளியவர்கள் என்பதைப் போரில் பார்த்துக் கொள்ளலாம். துரியோதனன் கிருஷ்ணரை பார்த்து, நீ இடைக்குலத்தில் பிறந்த சிற்றசன். இப்போது என்னைப் பாண்டவர்களோடு போர் புரிவதற்கு தூதராக வந்திருக்கிறாய்! நான் ஒன்றும் போருக்குப் பயந்தவன் இல்லை. 

அந்தப் பாண்டவர்களை விட நாங்கள் எந்த வகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. ஒரு தாய்க்கும் ஐந்து தந்தைகளுக்குமாகப் பிறந்து ஐவரும் ஒரு பெண்ணை மணந்து கொண்டவர்கள் பாண்டவர்கள் அவர்களுக்கு நாடு வேண்டுமா? நாட்டை ஆள்வதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை என்று பலவிதமாகக் கிருஷ்ணரிடம் பாண்டவர்களை பற்றி அவமரியாதையாக பேசினான் துரியோதனன்.

கிருஷ்ணரும் சிரித்த முகம் மாறாமல் அவன் கூறியவற்றை கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்தார். பீமனும், அர்ஜுனனும் போர் செய்ய ஆசை கொண்டிருப்பது வீண் போகாது என்று மனதில் நினைத்துக் கொண்டார் கிருஷ்ணர். 

துரியோதனனின் கோபம் முழுவதும் விதுரர் மேல் பாய்ந்தது. விதுரர் தனக்கு தந்தை முறையுள்ளவர் என்பதையும் மறந்து அவையில் அனைவர் முன்பும், நீ பொருள் கொடுத்தவர்களுக்கெல்லாம் தன் நலத்தை விற்கும் விலைமகளைப் போலக் கேவலமானவன். நீ என்னிடம் உணவு உண்டு எனக்கே துரோகம் செய்கிறாய் என்று மரியாதை இல்லாமல் பேசினான்.

துரியோதனன் தன்னை மரியாதைக் குறைவாக பேசியதைக் கேட்ட விதுரர் தன் பொறுமையை இழந்து, ஆத்திரத்தோடு வில்லுடன் எழுந்தார். அவையில் இருக்கும் அனைவரின் முன்பும் இப்போது இவன் மேல் எனக்கிருக்கும் ஆத்திரத்தில் இவன் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன். 

ஆனால் மகனைக் கொன்ற தந்தை என்ற பழி எனக்கு வேண்டாம் என்று இவனை விடுகிறேன். என் நன்றியையும், நற்பண்புகளையும் பற்றி உனக்குத் தெரியாவிட்டாலும், இங்கு இருக்கும் பெரியோர்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போது கேட்டுக்கொள் துரியோதனா!! நாளை ஏற்படப் போகிற போரில் நிச்சயமாக உனக்கு நான் வில் எடுத்து உதவமாட்டேன். இது சத்தியம் என்று கூறிக் கொண்டு தன் கையிலிருந்த வில்லை இரண்டாக உடைத்து துரியோதனன் முன் எறிந்து விட்டு திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து தன் மாளிகைக்குச் சென்றார்.

விதுரரைப் பகைத்துக் கொண்ட துரியோதனனின் அறியாமையை எண்ணி அவையில் இருந்த அனைவரும் மனம் வருந்தினர். உனக்கிருந்த ஒரே ஒரு நல்ல வலிமையான துணையை நீ இழந்து விட்டாய். விற்போர் செய்வதிலும், ஏனைய கலைஞானங்களிலும் வல்லவரான விதுரரைப் பகைத்துக் கொண்டதால் தோல்வி உன்னை நெருங்கிவிட்டது என்பதை மறந்து விடாதே! என்று பீஷ்மர் மனக் கொதிப்போடு கூறினார். அதற்கு துரியோதனன் விதுரர் என்னை விட்டுவிலகியதனால் நான் போரில் தோற்கமாட்டேன். 

விதுரரை விட சிறந்த முறையில் விற்போர் செய்ய வல்லவனான கர்ணன் என்னோடுதான் இருக்கிறான். துரோணரும் அசுவத்தாமனும் இருக்கிறார்கள். வயதிலும் அனுபவத்தாலும் மூத்தவராகிய நீங்கள் இருக்கிறீர்கள். இன்னும் நம்மைச் சேர்ந்த கோடிக்கணக்கான சிற்றரசர்கள் இருக்கிறார்கள். அதனால் எனக்கு தோல்வி கிடையாது என்று கூறினான்.

கர்ணன் துரியோதனனுக்கு ஆதரவாக பேசினான். விதுரர் வில் முறிந்து விட்டதே என்று இங்கு யாரும் கவலைப்பட வேண்டாம். பாண்டவர்களை முறியடித்து தோற்கடிக்க என்னுடைய வில் ஒன்றே போதும். அர்ஜுனனை தோற்கடிக்க என்னிடம் நாகாஸ்திரம் வளர்ந்து வருகிறது. 

அர்ஜுனனை தோற்கடித்து பாண்டவர்களை விரட்டி அடிக்க நான் ஒருவனே போதும் என்று கர்ணன் கூறினான். இந்திரனால் வெல்லமுடியாத அரக்கர்களை எல்லாம் வென்று வானுலகத்தில் தன் புகழை முற்றிலும் பெற்றவன் அர்ஜுனன். அவன் உன்னிடம் தோற்பான் என்று கனவு காணாதே! அர்ஜூனனும் நீயும் நேருக்கு நேர் நின்று போர் செய்தால் நீ வில்லை இதற்கு முன் தொட்டிருக்கிறாய் என்று கூடக் காண்பவர்கள் நம்பமாட்டார்கள் என்றார் பீஷ்மர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக