Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 13 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 198

ஜலந்திரன் அனைத்து தேவ ராஜ்ஜியங்களையும் போரிட்டு வெற்றி பெறுவதை அறிந்த மற்ற தேவ அரசர்களை தங்கள் மனதில் அச்சம் கொண்டனர். இனி அந்த அசுரன் எந்த தேவ சாம்ராஜ்ஜியத்தை தாக்க முடிவெடுத்துள்ளானோ... என்று அச்சம் கொண்டிருந்தனர். எமலோகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்பு அடுத்து நிருதியுடனும், வாயுதேவனுடனும் போர் புரிய முடிவெடுத்தான். நிருதியுடன் போர் புரிய செல்கையிலேயே நிருதியானவர் தனது படைவீரர்களுடன் அவ்விடத்தை விட்டு மறைந்து சென்றார்.

அடுத்து வாயுதேவனை தேடிச் செல்கையில் வாயுதேவனும் தங்களது படைவீரர்களுடன் மறைந்து சென்றுவிட்டார். இவ்விரு சாம்ராஜ்ஜியத்தையும் எவ்விதமான இழப்புகளும் இன்றி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான் ஜலந்திரன். சிறிது கால ஓய்வுக்கு பின் குபேர ராஜ்ஜியத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தோடு குபேரன் இருக்கும் இடத்தை நோக்கி தனது அசுரப்படையை வழிநடத்திக் கொண்டிருந்தான். ஜலந்திரன் அசுர படைகளுடன் தனது ராஜ்ஜியத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதை அறிந்த குபேரனும் மற்ற தேவ அரசர்களைப் போல ஜலந்திரனிடம் போர் புரிய விரும்பவில்லை.

அதற்கு பதிலாக குபேரன் தனது படைகளை அணிவகுத்து அழகிய கன்னிகள் பூமாரி பொழிய... ஜலந்திரனையும் அவரது அசுர படைகளையும் இருகரம் கூப்பி வரவேற்று உபசரிக்க துவங்கினார். அதாவது, தேவேந்திரன் முதலான பலம் பொருந்திய பல தேவ வேந்தர்களை போரில் வெற்றி கொண்டு வெற்றி வாகை சூடிய வீரனே... உனது வீரத்திற்கு இவ்வுலகமே நானும் எனது மக்களும் உனது வீரத்திற்கு எதிரியாக இருக்க விருப்பம் கொள்ளவில்லை என்றும், இதற்கு பதிலாக நாம் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருப்போம் என்றும் கூறிவிட்டு ஜலந்திரனை அரவணைக்க துவங்கினார்.

பின்பு தன்னிடம் உள்ள ஏராளமான பொன் நகைகளையும், நவரத்தினங்களையும், நவமணிகளையும் தட்டுகளில் வைத்து ஜலந்திரனிடம் காணிக்கையாக கொடுக்கத் தொடங்கினார். குபேரனுடைய உபசரிப்பை கண்டதும் ஜலந்திரன் மிகவும் ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டான். ஏனெனில் எவ்விதமான இழப்புகளும் இன்றி தனக்கு ஒரு ராஜ்ஜியம் சொந்தமாக கிடைப்பதைக் கண்டதும் மனதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

ஜலந்திரன் குபேரனை மனதார ஆரத்தழுவிக்கொண்டு குபேரா... இன்று முதல் நீயும் நானும் நண்பர்களாக இருப்போம் என்றும், உனது உபசரிப்பைக் கண்டு யாம் மிகவும் மனம் மகிழ்ந்தோம் என்றும் கூறிவிட்டு குபேரனின் நண்பனாகவும் அவருடைய விருந்தினராகவும் பல நாட்கள் குபேர பட்டிணத்தில் தங்கி பல இன்ப களியாட்டங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்ந்தான். குபேர பட்டிணத்தில் இருந்து கொண்டு தனது அடுத்த இலக்கு யார் என்பதை நிர்ணயித்துக் கொண்டே இருந்தார். பின்பு தன்னுடைய இலக்கு என்பது தன்னுடைய அசுர குலத்தில் பலமும் பராக்கிரமும் கொண்ட பல அசுரர்களை வதம் செய்து வந்த திருமாலே தனது அடுத்த இலக்காக நிர்ணயம் செய்து கொண்டு அதற்கான படைகளையும் திரட்டிக்கொண்டு குபேர பட்டிணத்தில் இருந்து விடைபெற்று வைகுண்டத்தில் வீட்டில் இருக்கும் திருமாலைக் எதிர்த்து போர் புரிய சென்று கொண்டிருந்தார் ஜலந்திரன். தன்னை நோக்கி அசுரகுல வேந்தனான ஜலந்திரன் வருவதை அறிந்ததும் திருமால் கருடவாகனத்தில் ஏறி அசுரர்களை அழிக்க துவங்கினார்.

அசுரர்கள் தங்களிடம் உள்ள பலவிதமான சக்திகள் நிறைந்த ஆயுதங்களை திருமாலின் மீது எறிந்து தங்களது எதிர்ப்புகளை காட்டத் துவங்கினார். ஆயினும் திருமால் விட்ட அஸ்திரங்களால் அசுரப்படையானது சிறு நேர கணப்பொழுதில் நிர்மூலமாக துவங்கியது.

அதாவது, ஆயுதங்களையே ஏவ முற்பட்ட கைகள் யாவும் உடலில் இருந்து அறுபட்டு விழுந்தன. பல அசுரர்களின் தலைகள் மற்றும் அங்கங்கள் யாவும் சிதைந்தன. போரில் அசுரர்கள் தாங்கி கொண்டிருந்த வாகனங்களாகிய யானைகளும் குதிரைகளும் மடிந்து விழுந்தன. தேர்கள் யாவும் கணப்பொழுதில் பொடிப்பொடியாக மாறத்துவங்கின.

அசுரப்படைகள் முழுவதும் அழிந்து வருவதைக் கண்ட ஜலந்திரன் நேரடியாக திருமாலுடன் நேருக்கு நேர் போர் செய்ய தொடர்ந்தான். மூவுலகங்களிலும் அவர்களின் போரினை அனைத்து தேவர்களும் கண் இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தனர். ஜலந்திரன் திருமாலுடைய வாகனமாகிய கருடன்மீது பாய்ந்து தன் கதாயுதத்தால் தாக்கினான். ஜலந்திரனுடைய எதிர்பாராத தாக்குதல் மூலம் கருடன் கீழே விழுந்தார். கருடனது முதுகில் இருந்து குதித்த திருமால் ஜலந்திரன் மீது பல வகையான ஆயுதங்களை செலுத்தி அவை ஒன்றும் செய்யாததைக் கண்டு திகைத்தார். திருமால் அவ்விடத்திலிருந்து மாயமாக மறைந்து போனார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக