Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஏப்ரல், 2020

முதலாம் நாள் போரின் ஆரம்பம்.. !!!

💥 பீஷ்மர், கிருஷ்ணரிடம் நீங்கள் பாண்டவர்களுக்கு துணையாக இருக்கும் பொழுது அவர்கள்தான் போரில் வெற்றி பெறுவார்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். பின்பு கிருஷ்ணரும், பாண்டவர்களும் துரோணரைச் சந்திப்பதற்காகச் சென்றனர். 

துரோணர் புன்சிரிப்புடன் அவர்களை வரவேற்றார். பாண்டவர்கள், தங்களுக்கு எல்லாக் கலைகளையும் கற்பித்த துரோணரை வணங்கிப் பணிந்து நின்றனர். 

துரோணர், பாண்டவர்களிடம் இந்தப் போரில் என்னுடைய எதிர்ப்பால் நீங்கள் தோல்வி அடையாமல் இருக்க ஒரு வழி கூறுகிறேன். நான் போர்க்களத்தில் பல அரசர்களுக்கு நடுவே போர் செய்து கொண்டிருக்கும்போது, என்னுடைய மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டான் என்று யாராவது நம்பத்தகுந்தவர் ஒருவரை கூறச் சொல்லுங்கள்.

💥 அந்த செய்தியை கேட்ட உடனே நான் என் கையில் இருக்கும் வில்லைக் கீழே போட்டுவிடுவேன். அதனால் எளிதில் என்னை வீழ்த்தி விடலாம். பீஷ்மரும், நானும் இறந்துவிட்டால் கௌரவர்களை நீங்கள் எளிதில் தோற்கடிக்க முடியும். துரோணர் கூறியதைக் கேட்டவுடன், கிருஷ்ணரும், பாண்டவர்களும் ஆச்சரியம் அடைந்தனர்.

 பிறகு கிருஷ்ணரும், பாண்டவர்களும் தேரைத்திருப்பிக் கொண்டு தங்கள் படைகள் இருந்த இடத்தை நோக்கிச் சென்றனர். இருபுறமும் படைத்தலைவர்கள் கடைசி முறையாக அணிவகுப்பைச் சரிபார்த்துக் கொண்டனர். 

படைவீரர்கள் அனைவரும் போருக்கு தயாராக இருந்தனர். போருக்காக குறித்த நல்லநேரமும் நெருங்கி கொண்டிருந்தது. பாண்டவர்களும், கௌரவர்களும் போரில் வெற்றி பெறுவதற்காக அவர்களின் இஷ்ட தெய்வங்களை வணங்கிக் கொண்டனர்.

💥 விண்ணையும் மண்ணையும், எட்டு திசைகளையும் கிடுகிடுக்கச் செய்வது போலப் போர் முரசங்கள் ஒலித்தன. சங்குகள் முழங்கின. யானைகள் பிளிறியது, குதிரைகள் கனைத்தன. தேர்ச்சக்கரங்கள் பேரொலியுடன் இடி இடிப்பது போல உருண்டு வந்தது. வீரர்கள் உறையிலிருந்து வாளை உருவும் சத்தம் போர்களத்தில் எதிரொலித்தது. இருபுறமும் எதிரெதிரே நின்று கொண்டிருந்த முன்னணித் தேர்ப்படைகள் ஒன்றையொன்று நெருங்கின. 

கிருஷ்ணர், போரை தொடங்கலாம் என்பதை வலதுகையை அசைத்து பாண்டவர்களுக்கு சைகை காட்டினார். பீஷ்மரும், சுவேதனும் ஒருவருக்கொருவர் போர் தொடங்கலாம் என்ற குறிப்பைக் கண்களாலேயே தெரிவித்துக் கொண்டனர். இருபுறத்துப் படைகளும் சங்கமமாயின. தர்மத்தையும், அதர்மத்தையும் நிலைநாட்ட போரின் முதல்நாள் ஆரம்பமாகியது!.

💥 இரு படைகளும் மோதிக் கொண்டனர். வீரர்கள் சிங்கம் போல கர்ஜித்தனர். யானைப்படையும், குதிரைப்படையும் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டன. வீரர்கள் கத்தி, வளைதடி, சக்கரம் முதலியனக் கொண்டு போரிட்டனர். பீஷ்மர் வீர ஆவேசத்தோடு போர் புரிந்து எண்ணற்ற வீரர்களைக் கொன்றார். 

பகைவர்களால் எய்யப்பட்டு ஏற்கனவே தங்கள் மார்பில் துழைத்து நின்ற அம்புகளை வலியையும் பொருட்படுத்தாமல் பிடுங்கிப் பகைவர்கள் மேலேயே எறிந்தார்கள். போரில் வலது கையை இழந்தவர்கள், இடது கையால் பகைவர்மேல் அம்புகளை எய்து போரிட்டனர். இரண்டு கைகளையுமே இழந்தவர்கள் அம்புகளை வாயில் வைத்துக் கொண்டு பற்களால் எறிந்து போரிட்டனர்.

💥 குருச்சேத்திரப் போர்களத்தில் வீரமும், ஆண்மையும் தனியே வடிவெடுத்து படைவீரர்கள் போர் புரிந்தனர். பாண்டவர்களும், கௌரவர்களும் ஆர்வத்தோடும், ஊக்கத்தோடும் போர் புரிந்தனர். உறவு, பந்தம், பாசம் இவைகளைப் பற்றிய தயக்கத்தை எல்லாம் கிருஷ்ணரின் அறிவுரையால் தெளிவடைந்து போருக்குத் தயாரான அர்ஜூனன் பீஷ்மரை எதிர்த்து நின்றான். 

பீஷ்மரும், அர்ஜுனனும் போர் புரியும் காட்சி போர்களத்தை அதிசயிக்கச் செய்தது. பீஷ்மரின் உதவிக்காக துரியோதனும், அர்ஜூனனின் உதவிக்காக தர்மனும் சில சிற்றரசர்களை உடன் அனுப்பியிருந்தனர். சகுனி, சல்லியன் முதலியவர்கள் பீஷ்மர் பக்கமும், விந்தரன், அபிமன்யு முதலியோர் அர்ஜூனன் பக்கமும் துணையாக நின்றனர்.

💥 பீஷ்மர், போர் செய்வதற்காக நின்று கொண்டிருந்த தேரின் உச்சியில் ஒரு பெரிய பாம்புக் கொடி பறந்து கொண்டிருந்தது. ஆனால் அர்ஜூனன் அந்தக் கொடியின் மேல் பன்னிரண்டு அம்புகளை அடுத்தடுத்து வேகமாகச் செலுத்தித் துளைத்து விட்டான். பீஷ்மரின் மார்பின் மேலும், உடலிலும் பூண்டிருந்த கவசத்தின் மேல் அர்ஜூனன் எய்த ஒன்பது அம்புகள் பாய்ந்தது. போரில் அனுபவமும், திறமையையும் வாய்ந்த பீஷ்மர் அர்ஜூனனின் விற்போர் திறமையைக் கண்டு அதிசயித்தார்.. 

கௌரவர்கள் பக்கம் சகுனி, சல்லியன் முதலியவர்கள் முன்னணியில் நின்றனர். அர்ஜூனன் பீஷ்மரை தாக்கியது மட்டும் அல்லாமல் சகுனி, சல்லியன் அவர்களையும் தாக்கினான். துரியோதனனின் படைகளின் அணிவகுப்பு நிலை குலைந்து தடுமாறியது. உத்தரனும், சல்லியனும் நேரடியாக ஒருவருக்கொருவர் எதிர் நின்று விற்போரில் இறங்கினர்.

💥 இரு படைவீரர்களுக்கிடையே மழைபொழிவது போல அம்புகள் வேகமாகப் மோதிக் கொண்டிருந்தன. உத்தரனுக்கும், சல்லியனுக்கும் நடந்த போரின் போது திடீரென்று உத்தரன், சல்லியன் நின்று கொண்டிருந்த தேரின் குதிரைகள் மீது அம்பு எய்ததால் அதை தாங்க முடியாமல் குதிரைகள் இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தன. தேர்ப்பாகன் மார்பில் மீதும் நாலைந்து அம்புகள் பாய்ந்ததால் அவனும் வீழ்ந்தான். இவ்வாறு நடப்பதை பார்த்த சல்லியன் நம்பிக்கை இழந்து விட்டான். அவன் உடலும், உள்ளமும் தளர்ந்து விட்டது. இந்தச் சமயத்தில் உத்தரன் எய்த அம்புகளால் கையிலிருந்த வில்லும் நாணறுந்து இரண்டு துண்டாக முறிந்து விழுந்தது. உத்தரனின் செயலால் கோபம் அடைந்த சல்லியன் ஆவேச வேகத்தில் போர்முறை, நீதி, நியாயம் எல்லாம் மறந்து விட்டு அருகிலிருந்த ஓர் கூரிய வேலை எடுத்து உத்தரனின் மார்பைக் குறிவைத்து எறிந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக