Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 27 ஏப்ரல், 2020

சிவபுராணம் - பாகம் 2 பகுதி 005

ஆனாய நாயனார் !

ஆனாய நாயனார் சோழ நாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர் குலத்தில் பிறந்தவர். இவர் தூய திருநீற்றினை விரும்பும் திருத்தொண்டாற்றியவர். மனம், மொழி, மெய் என்ற முக்கரணங்களாலும் சிவபெருமான் திருவடிகளை அல்லாது வேறு ஒன்றினையும் பேணாதவர். தமது குலத்தொழிலாகிய பசுக்காத்தலைச் செய்பவர். இவர் வேய்ங்குழல் வாசிப்பதில் கெட்டிக்காரர்.

பசுக்களை காலையில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போதும், மாலையில் திரும்ப அழைத்து வரும்போதும் வேய்ங்குழல் வாசித்துக்கொண்டேதான் இருப்பார். இவர் வேய்ங்குழலில் ஐந்து எழுத்தினை அமைத்துப் பாடும் அற்புதமான திறனைப் பெற்றிருந்தார். இவரின் இன்ப இசைக்கு உயிரினங்கள் அனைத்தும் மெய்மறந்து நிற்கும். இவர் ஒருநாள் வழக்கம்போல் பசுக்களை ஓட்டிக்கொண்டு புறப்பட்டார். நறுமலர் மாலையை அணிந்து கொண்டு, தலையை ஒருபுறமாகக் கோதி முடிந்து, அதில் கண்ணி மாலையைச் சூட்டிக் கெண்டார். செங்காந்தட் பூவினைக் காதில் சொருகிக் கொண்டார். கால்களிலே தோற்பாது கையைத் தரித்துக் கொண்டார்.

கையிலே வெண்கோலும், வேய்ங்குழலும் எடுத்துக் கொண்டு பசுக்களை ஓட்டிக்கொண்டு முல்லை நிலத்திற்குப் புறப்பட்டார். அப்பொழுது கார் காலம். முல்லை நிலம் பூத்துக் குலுங்கும் புது மலர்ச்சோலை போல் காட்சி அளித்தது. ஆங்காங்கே கொன்றை மரங்கள் புது மலர்களைத் தாங்கிய வண்ணம் எழிலுறக் காட்சி அளித்தன. இவர் முல்லை நிலத்தின் இயற்கை எழிலில், இன்பத்தை அளிக்கும் வண்ண மலர்களின் நறுமண வாசனையில் உள்ளத்தைப் பறி கொடுத்தார்.

தம்மை மறந்து வேய்ங்குழலின் இன்ப இசையை இனிமையாக எழுப்பி வாசித்துக்கொண்டே இருந்தார். அப்பொழுது இவர் பார்வை கொன்றை மரத்தின் மீது பதிந்தது. அம்மரத்திலிருந்த மலர்கள் கொத்து கொத்தாக மாலை போன்ற வடிவத்தில் தொங்கிக் கொண்டிருந்தன. எந்நேரமும் சிவபெருமானைப் பற்றியும், திருவெண்ணீற்றை பற்றியும் எண்ணிக் கொண்டிருக்கும் இவர் கண்களுக்கு கொன்றை மரத்தின் வடிவத்தைப் பார்த்ததும் கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் எழுந்தருளி இருப்பது போல் தோன்றியது.

மரத்தின் அந்த அழகிய தோற்றப் பொலிவினில் சிவனையே பார்த்து விட்டது போன்ற பெருமகிழ்ச்சி அடைந்தார் அடியார். அவருடைய ஐம்புலன்களும் எம்பெருமான் மீது பக்தியால் ஆனந்தமடைந்தன. பின்னர் ஆனாயர் அம்மரத்தை வலம் வந்து வணங்கினார். தாம் வைத்திருந்த வேய்ங்குழல் பலவற்றில் சிறந்ததான ஒன்றை எடுத்தார். ஆனாயர் பரமனை எண்ணியபடியே இனிய பண்ணுடன் கொண்ட இசை ஒன்றை எழுப்பினார். அவர் சுத்த சுரத்திலே திருவைந்தெழுத்தை இசையுடன் அமைத்து முறையோடு சுருதி சேர்த்து வாசிக்கலானார்.

ஐந்தொலியின் இசை இன்பம் வெள்ளம் போல் பாய்ந்து ஓடியது. இசைக்கு அனைத்தும் மயங்கி கரையும் தன்மை கொண்ட அவ்வின்ப இசை கந்தர்வ கானம் போல் அமைந்தது. அருகம் புல்லை அசை போட்டபடியாக நின்று கொண்டிருந்த ஆடுகள் ஆனாயர் இசைக்கு மயங்கி அவரது அருகே வந்து நின்றன. பசுக்கள் ஈன்ற கன்று குட்டிகள் தாய்ப்பாலையும் மறந்து இன்ப ஆனாய நாயனார் எழுப்பிய இன்ப இசையில் உணர்விழந்து ஆனாயரைச் சுற்றி நின்றன. வனத்தில் இருந்த அழகிய புள்ளிமான் கூட்டங்கள் துள்ளி ஓடிவந்து ஆனாயரைச் சூழ்ந்தன.

வனத்தில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு அதிகப்படியாக ஊக்கம் காட்டி நின்ற ஆயர்கள், தாங்கள் செய்து கொண்டு இருந்த வேலைகளை மறந்து இசை வெள்ளத்தில் மூழ்கி... நின்ற இடத்திலேயே செய்வதறியாது செயலற்று நின்றனர். வானில் வலம் வரும் புட்பக விமானத்தில் அமர்ந்த வண்ணம் ஆனாயரின் இசைத்தேனைச் சுவைத்துப் பருகிக்கொண்டிருந்தனர். ஆனாயர் தேவகான இசை மழை பொழிந்த வண்ணமாகவே இருந்தார். உலகில் மாறுபட்ட உள்ளத்தினரும், வாழ்வில் வேறுபட்ட நிலையில் இருப்போரும் தத்தம் நிலைமை, தகுதி இவற்றை எல்லாம் அறவே மறந்து ஒருமனப்பட்டு உள்ளம் மகிழ ஆனாயரின் இசைக்கடலில் மூழ்கி இன்பம் கண்டனர்.

ஆனாய நாயனாரின் வேய்ங்குழல் இசையில்...

மழை வரும் வேளையில் தோகை விரித்தாடும் மயிலும்...

படமெடுத்தாடும் பாம்புகளும் மயங்கி விழுந்துக் கொண்டு இருந்தன.

பகை மிருகங்களான சிங்கமும், யானையும் தங்களின் பகைமையை மறந்து ஒன்றோடொன்று இணைந்தவாறு இசை வசப்பட்டு நின்றன.

புலிகள் முன்னிலையிலேயே புள்ளி மான்கள் எவ்விதமான பயமும் இன்றி நின்று கொண்டு இருந்தன.

இயற்கையும் இசைக்கு மயங்கிய வண்ணமாக... வேகமாக வீசிய காற்றும் குறைந்து நின்றது.

மரக்கிளைகள் யாவும் அசைவற்று நின்றுக் கொண்டு இருந்தன.

விண்ணை முட்டும் மலையிலிருந்து துள்ளிப் பாய்ந்தோடும் தேனருவிகளும் எவ்விதமான சத்தத்தையும் எழுப்பாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தன.

அலைகள் நிரம்பிய கடல் கூட எவ்விதமான ஓசையும் இன்றி அமைதியுடன் காணப்பட்டது.

இடியும், மழையும் கொண்ட மேகக் கூட்டங்கள் கூட எவ்விதமான பேரிரைச்சலையும் எழுப்பாமல் அமைதியாக சென்று கொண்டு இருந்தது.

ஈரேழு உலகமும், ஆனாயரின் இசை வெள்ளத்தில் இன்ப சுகம் பெற்றன. உயிருள்ள பொருட்கள் மட்டுமல்ல... உயிரற்ற பொருட்களும் கூட ஆனாயரின் குழலோசைக்குக் கட்டுப்படத்தான் செய்தன.

மண்ணிலே இருந்து எழுந்த ஆனாயரின் குழலோசை மேலோங்கி விரைந்து சென்று விண்ணகத்தை முட்டியதோடு இல்லாமல் கைலாய மலையில் வீற்றிருக்கும் உமாமகேஸ்வரனின் திருச்செவிகளுக்கும் ஊடுருவிற்று. வெள்ளி அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் ஆடும் அரனாரும் இசைக்குக் கட்டுப்பட்டவர்தானே! இலங்கேஸ்வரனின் இசைக்கு அடிமையானவரான அவர் இன்று ஆனாயரின் இசை வெள்ளத்திலே மெய்யுருகி ஆனாயரை ஆட்கொள்ளப் பார்வதியுடன் விடையின் மீது காட்சி அளித்தார்.

ஆனாயரின் இசைக்குக் கட்டுப்பட்ட கங்காதரன் ஆனாயரை வேய்ங்குழலை இவ்வாறு இசைத்துக் கொண்டே எம் அருகே வந்து அமர்ந்திடுவாய் என்று வாழ்த்தி அருளினார். ஆனாயர், இறைவன் அருகேயே அமர்ந்து, வேய்ங்குழல் வாசிக்கும் பேறு பெற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக