புதன், 8 ஏப்ரல், 2020

கிருஷ்ணரிடம் உதவி கேட்கும் அர்ஜூனன் மற்றும் துரியோதனன்...!

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர் நடைபெறுவது உறுதியாகி விட்டது. அதனால் பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் பலத்தை கூட்ட பல நாட்டு மன்னர்களின் உதவியை நாடினர். துரியோதனனும் போரில் வெற்றி பெற பல நாட்டு மன்னர்களின் உதவியை நாடிச் சென்றான். 

முதலில் துரியோதனன் கிருஷ்ணரைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான். துரியோதனன், தன்னை காண துவாரகைக்கு வருவதை அறிந்த கிருஷ்ணர், தான் உறங்குவது போல் பாசாங்கு செய்துக் கொண்டிருந்தார். துரியோதனன் துவாரகை வந்தடைந்தான். 

கிருஷ்ணரை காணச் சென்ற துரியோதனன் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவரை எழுப்ப மனமின்றி கிருஷ்ணர் கண் விழிக்கும்வரை காத்துக் கொண்டிருந்தான்.

கிருஷ்ணரின் தலைப்பக்கம் துரியோதனன் அமர்ந்திருந்தான். அர்ஜூனன் வரும் வரை கிருஷ்ணர் காத்திருக்க நினைத்தார். அதே நேரத்தில் அர்ஜூனனும் அங்கு வந்து சேர்ந்தான்.

அப்பொழுது கிருஷ்ணர் உறங்கிக் கொண்டிருந்ததை கண்ட அர்ஜூனன் கிருஷ்ணரின் கால்பக்கம் அமர்ந்திருந்தான். அர்ஜூனன் வந்து விட்டதை அறிந்த கிருஷ்ணர் கண்விழித்து பார்த்தார். கிருஷ்ணர் எழுந்தவுடன் அவரது கண்களில் முதலில் தெரிந்தவர் அர்ஜூனன் தான். 

அர்ஜூனன், வாசுதேவா! மகாபாரதப் போரில் தாங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருந்து போர்புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டான். கிருஷ்ணர், நிச்சயம் போரில் உன் படைக்கு உதவி புரிவேன் எனக் கூறினார்.

வாசுதேவா! எனக்கு முன் இங்கு வந்து அமர்ந்து கொண்டிருக்கும் அண்ணன் துரியோதனனை தாங்கள் கவனிக்கவில்லையே! என்றான். உடனே கிருஷ்ணர் துரியோதனன் பக்கம் திரும்பி, துரியோதனா! நீ எப்பொழுது வந்தாய். 

நான் உன்னை பார்க்கவில்லையே எனக் கேட்டார். துரியோதனன், வாசுதேவரே! நான் அர்ஜூனனுக்கு முன்பே இங்கு வந்துவிட்டேன். தாங்கள் என்னை கவனிக்க மறந்து விட்டீர்கள் என்றான். கிருஷ்ணர், துரியோதனா! நீ என்னை காண வந்ததற்கான காரணம் என்ன? என்று வினவினார். 

வாசுதேவரே! நடக்கவிருக்கும் மகாபாரத போரில் தாங்கள் எங்கள் படைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளவே இங்கு வந்தேன் எனக் கூறினான்.

துரியோதனா! நான் முதலில் அர்ஜூனனை பார்த்ததால், போரில் அர்ஜூனனுக்கு உதவி புரிவதாக கூறி விட்டேனே, இனி என்னால் ஒன்றும் செய்ய இயலாதே எனக் கூறினார். வாசுதேவரே! எனது இந்த வேண்டுக்கோளை தாங்கள் நிராகரித்து விட்டீர்கள். 

எனது மற்றொரு வேண்டுக்கோளையாவது தாங்கள் நிறைவேற்ற வேண்டும் என வேண்டினான். கிருஷ்ணர், சரி துரியோதனா! உனது வேண்டுகோளை கூறு என்றார். துரியோதனன், வாசுதேவரே! நடக்கவிருக்கும் மகாபாரத போரில் தாங்கள் கையில் ஆயுதங்களை ஏந்தக் கூடாது என்றான். கிருஷ்ணர், உனது வேண்டுகோளை ஏற்கிறேன். நான் மகாபாரத போரில் ஆயுதம் ஏந்தாமல் பாண்டவர்களுக்கு உதவி புரிவேன் என்றார்.

அதன் பின் கிருஷ்ணர், துரியோதனா! என்னால் உனக்கு உதவ முடியாமல் போயிற்று. நீ வேண்டுமென்றால் பலராமன் மற்றும் மற்ற யாதவர்களிடன் உதவியைக் கேட்கலாம் என்றார். உடனே துரியோதனன் கிருஷ்ணரிடம் இருந்து விடைப்பெற்று, பலராமனை பார்க்கச் சென்றான்.

அதன் பிறகு அர்ஜூனன் கிருஷ்ணரிடம், வாசுதேவா! தங்களால் ஆயுதம் இல்லாமல் எங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என வினவினான். கிருஷ்ணர், ஏன் முடியாது. போரில் உனது தேரின் தேரோட்டியாக இருந்து நான் உனக்கு உதவுவேன் எனக் கூறினார். 

துரியோதனன், பலராமரிடம் போரில் தாங்கள் எங்கள் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டான். பலராமரோ! என்னால் கிருஷ்ணனுக்கு எதிராக செயல்பட முடியாது. அதே சமயம் நான் பாண்டவர்களுடனும் சேர மாட்டேன். 

இருவருக்கும் நடுநிலைமையில்தான் இருப்பேன். மேலும் போர் நடக்கும்போது நான் தீர்த்தயாத்திரை செல்வேன் என்று கூறிவிட்டார். அதன் பிறகு துரியோதனன் ஏமாற்றத்துடன் அஸ்தினாபுரம் சென்றான்.

நகுலன், சகாதேவர்களின் தாய் மாமனான மத்ர தேச மன்னன் சல்லியன் தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று பாண்டவர்கள் வேண்டினர். மத்ர தேச மன்னன் சல்லியனும் பாண்டவர்கள் பக்கம் இருப்பதையே விரும்பினான். 

பெரும் படையுடன் பாண்டவர்கள் இருக்குமிடம் நோக்கிச் சென்றான். மத்ர தேச மன்னன் சல்லியனுக்கு, தன் படைகளுடன் வரும் வழியெல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அவனுடைய படைவீரர்களுக்கு சிறந்த உணவு அளிக்கப்பட்டது. 

சல்லியன் இந்த உபசரிப்பு எல்லாம் மடத்தில் மூலம் செய்யப்படும் உபசரிப்பு என நினைத்தான். ஆனால் இவையெல்லாம் துரியோதனன் செய்த ஏற்பாடாகும். இதை அறிந்திராத சல்லியன், இவையனைத்தையும் தர்மரால்தான் செய்யப்பட்டது என எண்ணினான். துரியோதனன், சல்லியனிடம் எங்கள் வரவேற்பை ஏற்றமைக்கு நன்றி என்றான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு கௌரவர் படைக்கு ஆதரவு கேட்டான்.

சல்லியன், பாண்டவர்களுக்கு உதவ நினைத்த தனக்கு இக்கட்டான நிலை வந்ததை நினைத்து வருந்தினான். என்ன செய்தவதென்று தெரியாமல் உனக்கு உதவி புரிகிறேன் எனக் கூறினான். அதன் பிறகு அங்கிருந்து பாண்டவர்களை காணச் சென்றான். அவர்களிடம் தனக்கு வழியில் ஏற்பட்ட நிலைமையை பற்றிக் கூறி வருந்தினான். தருமர், தாங்கள் மகாபாரத போரில் கர்ணனுக்கு தேரோட்டியாக இருக்க நேர்ந்தால் அவனுக்கு அர்ஜூனனின் பெருமை பற்றிக் கூறவும் என வேண்டிக் கொண்டான்.

அஸ்தினாபுரத்தில் துரியோதனன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததை திருதிராஷ்டிரிடம் கூறினான். அதன் பிறகு திருதிராஷ்டிரன், ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டினான். அக்கூட்டத்தில் சகுனி, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் முதலானோர் வந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்