Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

கிருஷ்ணர் குந்தியிடம் கூறும் இரகசியம்...!

பீஷ்மர், அர்ஜுனனும் நீயும் நேருக்கு நேர் நின்று போர் செய்தால் நீ வில்லை இதற்கு முன் தொட்டிருக்கிறாய் என்று கூட காண்பவர்கள் நம்பமாட்டார்கள் என்றார். கர்ணன், விதுரரைப் போலவே நீங்களும் பாண்டவர்களை ஆதரிக்கின்றீர்கள்! அர்ஜுனனின் சிறந்த வில்லாளர்களை என்னுடன் போருக்கு அனுப்புங்கள் யார் வீரன் என்று தெரியும்? திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவனையே என் வில்லுக்குப் பயப்பட வைத்தவன் நான். 

பாண்டவர்களுடன் போரிட்டு நான் வெற்றி பெறுவேன் என்று கோபமாக கூறினான். ஆனால் இந்த முறை பீஷ்மர் மறுமொழி எதுவும் கூறவில்லை. கர்ணனின் இந்த பேச்சை கேட்ட துரியோதனன் மகிழ்ச்சி அடைந்தான். நீண்டநேரம் அமைதிக்குப் பின்பு கூடி இருந்த அவை கலைந்தது.

பின்பு கிருஷ்ணரும், விதுரனும் தனிமையில் சந்தித்து பேசினார்கள். கிருஷ்ணர், விதுரரிடம் அவையில் கோபம் கொண்டதற்கு என்ன காரணம் என்று விசாரித்தார். 

அதற்கு விதுரர், துரியோதனன் அமைச்சர்கள் சொற்களைக் கேட்காதவன், நாவடக்கம் இல்லாதவன், தனக்கு தோல்வியே வராது என்றும் பாண்டவர்கள் தோற்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான். 

உங்களையும் அவன் வரவேற்கவில்லை. ஆனால் உங்களை வரவேற்று விருந்தினராக உபசரித்த என்னையும் இழிவாக பேசிவிட்டான். என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இனிமேல் இவன் எனக்கு தேவையில்லை என்று கருதி வில்லை முறித்து விட்டு அவனுக்கு போரில் துணையாக இருக்கமாட்டேன் என்று கூறி வந்துவிட்டேன் என்றார் விதுரர்.

கிருஷ்ணர்! விதுரரிடம் நீங்கள் வந்ததும் ஒரு விதத்தில் நன்மைதான். நீங்கள் துரியோதனனின் பக்கம் இருந்து போரில் கலந்துக் கொள்ளவில்லை என்றால் பாண்டவர்கள் கௌரவர்களை சுலபமாக தோற்கடித்து விடுவார்கள். தீ எரிவதற்கு நெருப்பு, விறகு, நெய் எல்லாம் இருந்தாலும் காற்று இல்லாமல் நெருப்பு இல்லை. 

அதுபோல நீங்கள் இல்லாமல் கௌரவர்களால் எதுவும் செய்ய முடியாது. பாண்டவர்கள் அவர்களை போரில் தோற்கடித்து வெற்றி பெறுவார்கள் என்று மகிழ்ச்சி நிரம்பிய மனத்தோடு கிருஷ்ணர் கூறினார். கிருஷ்ணருக்கு தூதராக வந்த வேலை முடிந்து விட்டது. ஆனால் அவருக்கு தூது வேலையைத் தவிர வேறு சில வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.

அதனால் கிருஷ்ணர் விதுரரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அஸ்தினாபுரத்தில் தங்கியிருக்கும் குந்தி தேவியை சந்திக்க சென்றார். குந்தி தேவியும் கிருஷ்ணரை அன்புடன் வரவேற்றாள். கிருஷ்ணர், உன்னுடைய புதல்வர்கள் சூதாட்டத்தில் தோற்று, அதன் நிபந்தனையாக பதிமூன்று ஆண்டுகாலம் வனவாச காலத்தை வெற்றியுடன் முடித்துவிட்டனர். 

இப்பொழுது அவர்கள் இழந்த நாட்டை திரும்பி பெற போராடிக் கொண்டு இருக்கிறார்கள். இப்பொழுது நாட்டை துரியோதனனிடம் இருந்து மீட்டுக் கொள்ள போரிடவும் தயாராகவும் உள்ளனர். போர் இல்லாமல் நாட்டை திரும்பி கொடுக்க கூறி பாண்டவர்களுக்கு ஆதரவாக தூதுவாக இங்கு வந்தேன்.

ஆனால் என்னுடைய முயற்சி தோல்வியடைந்தது. துரியோதனன் போர்புரிய வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறான். தூதராக வந்த முயற்சிதான் தோற்றுவிட்டது. உன்னிடம் முக்கியமான செய்தியை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் என்று கிருஷ்ணர் கூறினார்.

அந்த செய்தி என்னவென்று தாங்கள் கூறுங்கள் என்று குந்திதேவி கேட்டாள். அந்த செய்தியை கூறுவதற்கு முன்னால் அவசியமான சில பழைய நிகழ்ச்சிகளை உனக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்று கிருஷ்ணர் கூறினார். 

நான் கூறும் விஷயம் உன் மனதை புண்படுத்தினால் என்னை மன்னித்து விடு என்று கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். துர்வாச முனிவர், விரும்பிய கடவுளின் மூலம் குழந்தை பெறலாம் என்ற வரத்தை அருளினார். அப்போது நீ முதன் முதலாக சூரியனை நினைத்து ஒரு குழந்தையை பெற்றாய். அந்த குழந்தையால் உன் திருமண வாழ்க்கைக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என பயந்து ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டுவிட்டாய்.

ஆற்றில் மிதந்து சென்ற அந்த குழந்தையை அஸ்தினாபுரத்தில் உள்ள தேர்ப்பாகன் அதிரதன் என்பவன் கண்டெடுத்து வளர்த்தான். அதே சமயத்தில் தான் திருதராட்டிரனுக்கும் துரியோதனன் மகனாகப் பிறந்தான். துரியோதனன் தன் தோழனாக இருந்த தேர்பாகனின் மகனான கர்ணனை அங்க நாட்டிற்கு அரசனாக முடிசூட்டி சிறப்புச் செய்தான். அன்றைய நாளில் இருந்து துரியோதனனின் வலது கைபோல விளங்கி வரும் அந்த தேர்பாகனின் மகன் கர்ணன் தான் உன்னால் ஆற்றில் விடப்பட்ட உனக்கும் சூரிய பகவானுக்கும் பிறந்த குழந்தை என்றார் கிருஷ்ணர்.

உனக்கும், உன் மகனான கர்ணனுக்கும் இருக்கும் உறவின் இரகசியத்தை நானே உன்னிடம் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இதனைக் கேட்ட உடன் குந்தியின் கண்கள் வியப்பில் ஆழ்ந்தது. கர்ணன் என் மகனா! என்று வியப்பில் கேட்டாள். கிருஷ்ணர் மீண்டும் குந்தியிடம் நான் இப்போது கூறியது அனைத்தும் நான் சொல்லும் விஷயத்தின் முன்னுரை மட்டுமே, இனிமேல் தான் நான் முக்கியமான விஷயம் ஒன்றை கூறப்போகிறேன். கவனமுடன் கேள் என்று கூறினார். கிருஷ்ணர், குந்தியிடம் இப்போது நீ கர்ணனிடம் சென்று அவனுக்கு நீ தான் தாய் என்ற இரகசியத்தை கூற வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக