Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 199

வைகுண்டம் முழுவதும் தன்னுடைய ஆட்சிக்குள் கொண்டு வந்ததும் பிரம்மதேவர் வீற்றிருக்கும் சத்திய லோகத்தை அடைந்து தனது படைகளுடன் சத்தியலோகம் சென்றான். 

அவனுடைய வீரத்தையும் தன்னுடைய வரத்தின் மகிமையையும் அறிந்த பிரம்மதேவர் ஜலந்திரனை வரவேற்று உபசரித்தார். இதனால் மணமுருகிய ஜலந்திரன் சிருஷ்டீ கர்த்தாவே உமது வரத்தால்தானே நான் மூவுலகங்களையும் வெல்லத்தக்க பேறு பெற்றேன் என்று கூறி அவரை வணங்கிவிட்டு தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பிவிட்டான். 

இவ்விதமாக எல்லா தெய்வங்களையும் போருக்கு அழைத்து வெற்றி வாகை பெற்ற ஜலந்திரன் அடுத்தபடியாகக் கையிலாயத்தை முற்றுகை இடுவான். ஆனால் சிவபெருமானால் வதைக்கப்படுவான் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டினர் தேவர்கள்.

ஆனால், ஜலந்திரன் அவ்விதமாக செய்யவில்லை. தனது ராஜ்ஜியத்திற்கு திரும்பி சகல ஐஸ்வர்யங்களுடன் ராஜ்ஜிய பரிபாலனம் செய்து வருவதைக் கண்ட தேவர்கள் தங்களுக்கு விமோச்சனம் எப்போது கிடைக்குமோ என்று பலவாறு கவலைப்பட்டுப் பின்னர் சிவலிங்க பூஜை செய்ய துவங்கினர். 

தேவர்கள் அடையும் துன்பத்தைக் கண்ட நாரதர், எப்படியாவது ஜலந்திரனை சிவபெருமானுடன் மோதச் செய்ய வேண்டி ஒரு யுக்தியை கண்டுபிடித்துக்கொண்டு ஜலந்திரன் இருக்கும் இடத்திற்கு சென்றார். தன்னை காண நாரதர் வருவதைக் கண்டதும் அவரை உபசரித்த ஜலந்திரனை பார்த்து நாரதர், ஜலந்திரன் உன்னிடம் எல்லா ஐஸ்வர்யங்களும் உள்ளன. உன்னை கண்டதும் அண்ட சராசரங்களும் அச்சம் கொள்கிறது. இவைகள் யாவும் உன்னிடமிருந்தாலும் ஒரு குறையை காண்கிறான் என்று கூறினார்.

அதைக் கேட்டதும் ஜலந்திரனுக்கு முகம் வாடியது. என்ன சொல்கிறீர் நாரதரே! எனக்கென்ன குறை? சகல சம்பத்துகளும் என்னிடம் உள்ளன. உலக சுகங்கள் அனைத்தையும் நான் அனுபவிக்கிறேன். திருமால் முதலான தேவர்கள் என அனைவரையும் வெற்றி கொண்டேன். அஷ்டதிக் பாலகர்களும் எனக்கு அடிமையானவர்கள். 

அவ்வாறு இருக்கையில் எனக்கு என்ன குறை இருக்கின்றது என்று கேட்டார். குறைகள் இருக்கின்றன ஜலந்திரா... என்று எப்போதும் போல பொடி போட்டு பேசத்துவங்கினார் நாரதர். அதாவது உன்னிடம் இருக்கின்ற அனைத்து தேவ கன்னிகளையும், ரதி தேவிகளையும் விட அழகில் இப்பிரபஞ்சமே கண்டு மயங்கும் வண்ணம் கொண்ட அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய பேரழகை கொண்ட உமாதேவி என்பவள் உன் அருகில் இல்லையே.

அது தானே உன்னிடம் இருக்கின்ற மிகப் பெரிய குறையாகும். ஆனால் நீ போரில் வெற்றி கொண்டு பல அழகான பெண்களை கவர்ந்து அவர்களை அடைந்திருந்தாலும் அவர்கள் யாவரும் உமாதேவியின் அழகிற்கு ஈடு இணை ஆகாதவர்கள் என்று நாரதர் கூற ஜலந்திரன் மனமானது சஞ்சலப்பட துவங்கியது. 

நாரதருடைய பேச்சுக்களின் மூலம் தன்னிடம் இருக்கின்ற அழகில் சிறந்த ரதிகளைக் காட்டிலும் அவள் அழகில் சிறந்தவள் என்று அறிந்ததும் அவளை யாம் அடையவேண்டும்... அவள் எவ்விதம் இருப்பாள்... என்று ஜலந்திரனின் மனமானது எண்ணிடத் துவங்கியது. அந்த பேரழகி எவரிடம் இருந்தாலும் சரி அவளை எப்படியாவது கவர்ந்து கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் ஜலந்திரனுக்கு மேலோங்கத் துவங்கியது.

ஜலந்திரன் மனதில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை கண்டதும் நாரதரும் தனது கலகத்தை செய்யத் துவங்கினார். அதாவது ஜலந்திரனின் மனதில் மோக எண்ணங்களையும் மேம்படுத்த துவங்கினார். பெண் மோகத்தினால் முழுவதுமாக அகப்பட்ட ஜலந்திரனும் அந்த பேரழகி எங்கு இருக்கிறாள்? எவரிடத்தில் இருக்கின்றாள்? என்று நாரதரிடம் கேட்கத் துவங்கினான். நாரதர் ஜலந்திரனிடம் அந்தப் பேரழகியை உன்னால் அடைவது என்பது முடியாத காரியமாகும். அவள் எவரும் அடையாத இடத்தில் இருக்கின்றார் என்று கூறினார்.

இதைக் கேட்டதும் என்னால் அடைய முடியாத இடம் என்று இந்த பிரபஞ்சத்தில் ஏதாவது இருக்கின்றதா? எவராக இருப்பினும் அவரை நேருக்கு நேராக போரிட்டு என்னால் வெற்றி கொள்ள இயலும். என்னுடைய வீரத்திற்கு முன்னால் எவரும் சில நொடிகள் கூட நிற்க இயலாது என்று ஜலந்திரன் உரைக்கத் தொடங்கினான். பின்பு நாரதரிடம் நாரதரே! நீங்கள் அந்தப் பேரழகி எவ்விடத்தில் இருக்கின்றாள் என்று உரைத்தால் மட்டுமே போதுமானதாகும். மற்றதை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினான்.

பின்பு நாரதரோ புன்னகையை உதிர்த்து அந்தப் பேரழகி என்பவள் கைலாய நாயகனின் மனைவியாவாள். அவள் கைலாயத்தில் வீற்றிருக்கின்றாள் என்று கூறினார். நாரதர் பேரழகி இருக்கும் இடத்தை கூறி முடித்தவுடனே தனது படைகளுடன் கைலாயம் நோக்கி செல்லத் துவங்கினான் ஜலந்திரன். நாரதரோ தனது கலக வேலையானது முடிந்ததும் நாராயணனை எண்ணி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார்.

தனது அழிவு எவ்விடத்தில் இருக்கின்றது என்பதை அறிந்தும் மோகத்தினால் தனது அழிவிற்கான இடத்தை நோக்கி செல்லத் துவங்கினான் ஜலந்திரன். எவருக்கும் அரிய காட்சி அளிக்கக்கூடிய எம்பெருமானை கைலாயத்தில் தனது படைகளுடன் சென்று பார்த்தான் ஜலந்திரன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக