Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 15 ஏப்ரல், 2020

துரியோதனனின் சூழ்ச்சி....!

துரியோதனனிடம் கர்ணன் இருப்பது முறையல்ல பாண்டவர்களோடு சேர்ந்துவிடு என்று அழைத்துப் பார் எனக் கூறிய கிருஷ்ணர் அநேகமாகக் கர்ணன் அதற்கு இணங்க மாட்டான் என்றும் கூறினான்.

காண்டவ வனத்தின் போது அர்ஜுனனைப் பகைத்துக் கொண்டு சென்ற பாம்பு ஒன்று கர்ணனிடம் வளர்ந்து வருகிறது. அந்தப் பாம்பை அஸ்திரமாக்கிக் கர்ணன், அர்ஜுனனைக் கொல்ல எண்ணியிருக்கிறான். 

நீ, கர்ணனிடம் நாகாஸ்திரத்தை ஒரு முறைக்குமேல் அர்ஜுனனை நோக்கி எய்தக் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து விடு! என்றார். குந்தி, கிருஷ்ணா! பல நாட்களுக்கு முன்னால் நீங்கள் இந்த உண்மையை கூறி இருந்தாள் அப்போதே கர்ணனை பாண்டவர்கள் பக்கம் சேர்த்திருப்பேனே.

இப்போது போர் நடக்க இருக்கும் நிலையில் திடீரென்று கர்ணனைத் துரியோதனனிடம் இருந்து வரச் சொன்னால் கர்ணன் நன்றி மறந்துவிட்டு வருவானா என்று வருத்தத்துடன் கேட்டாள். 

இத்தனை நாட்களுக்கு பிறகு என் மகன், கர்ணனை கண்டுள்ளேன். ஆனால் நீங்கள் அவன் இறப்பதற்கு காரணமான செயலை என்னை செய்ய சொல்கிறீர்கள் என்று குந்தி கேட்டாள். இதைத் தவிர வேறு வழி இல்லை என்று கிருஷ்ணர் கூறினார். 

கர்ணனின் உயிர் போகாவிட்டால் உன் புதல்வர்கள் பாண்டவர்களின் ஐந்து பேரின் உயிரை அவன் மாய்த்து விடுவான் என்று கிருஷ்ணர் கூறினார். பாண்டவர்களின் உயிர் உன்னிடம் தான் உள்ளது, அவர்கள் வெற்றிபெற வேண்டுமானால் நீ கர்ணனிடம் இந்த வரத்தைக் கேட்டுத்தான் ஆக வேண்டும். இது உன் கடமை என்று கிருஷ்ணர் கூறிவிட்டு விதுரர் மாளிகைக்குச் சென்றார்.

கிருஷ்ணரின் வேண்டுகோளை மறுக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்று குந்தி நினைத்தாள். ஆனால் துரியோதனன், தூதராக வந்திருக்கும் கிருஷ்ணரை திரும்பிப் போகவிடாமல் தடுத்து அவரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். 

அதற்காக மந்திர ஆலோசனை சபையைக் கூட்டினான். திருதிராட்டிரன், கர்ணன், துரியோதனனுடைய சகோதரர்கள் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் மந்திர ஆலோசனைக் கூட்டத்தில் அங்கம் வகித்தனர். பாண்டவர்கள் இத்தனை காலம் வனவாசம் இருந்து வந்த பிறகு திடீரென்று நாட்டை கேட்பதற்கு காரணம் கிருஷ்ணர் தான். 

அவர் தான் அவர்களை தூண்டிவிட்டிருக்கிறார். தந்தை திருதராட்டிரனும் துரியோதனனுக்கு ஆதரவாக பேசினான்.

ஆனால் நற்பண்புகளை உடைய விகர்ணன், தூதராக வந்த கிருஷ்ணரை கொல்வது பாவம் என்று கூறினான். நீங்கள் அனைவரும் ஒன்று கூடி கிருஷ்ணரை வளைத்தாலும் அவரை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. 

பின்பு நீங்கள் தான் துன்பப்படுவீர்கள். விகர்ணன் கூறியதைக் கேட்ட துச்சாதனன் உன் ஆலோசனை எங்களுக்கு தேவையில்லை என்று கோபமாக கூறினான். 

வாருங்கள் இப்பொழுதே விதுரன் மாளிகைக்குச் சென்று கிருஷ்ணரை வளைத்து மாளிகையை சுற்றி தீ வைத்து கிருஷ்ணரை கொன்று விடுவோம் என்று ஆத்திரத்தோடு கூறினான்.

சகுனி, அனைவரும் பேசிய பின்பு சாமார்த்தியமாக ஒரு யோசனைக் கூறினான். கிருஷ்ணரைக் கொல்ல வேண்டியது அவசியம் தான். கிருஷ்ணரைத் தப்பவிட்டுவிட்டால், பின்பு நாம் பாண்டவர்களிடம் தோற்றுவிடுவோம். 

அதனால் கிருஷ்ணர் இங்கிருந்து உயிருடன் செல்ல விடக்கூடாது. ஆனால் தூதராக வந்தவரை வெளிப்படையாகக் கொன்றால் மக்களின் பழி பாவத்திற்கு நாம் ஆளாகி விடுவோம். அதனால் நாம் கிருஷ்ணரை விருந்தினராக அழைத்து வருவோம். பின்பு அவர் அமர்வதற்கு சிறப்பான ஆசனத்தையும் அமைக்க வேண்டும். அந்த ஆசனத்தின் அடியில் மேலே தெரியாத அளவிற்கு மறைவாக ஒரு பள்ளத்தை வெட்டுங்கள்.

அந்த வெட்டிய பள்ளத்தில் வீரர்கள் மறைந்திருக்க வேண்டும். பின்பு கிருஷ்ணர் அந்த ஆசனத்தில் அமரும் போது பள்ளத்தில் விழுந்து விடுவார். அப்போது யாருக்கும் தெரியாமல் பள்ளத்தில் உள்ள வீரர்கள் கிருஷ்ணரை வளைத்து இரும்புச் சங்கிலியால் பிணித்து அவரைச் சிறையில் அடைக்க வேண்டும் என்று சகுனி கூறிய யோசனையை அனைவரும் ஒப்புக்கொண்டனர்.

பின்பு, மறுநாளே வீரர்கள் அனைவரும் பள்ளத்தை தோண்ட ஆரம்பித்தனர். பள்ளம் தோன்றிய பின்பு அதன் மேல் ஆசனம் கட்டினார்கள். பள்ளத்தின் அடியில் வீரர்களும், மல்லர்களும் ஆயுதங்களுடன் மறைந்து இருந்தனர். கிருஷ்ணரும் அனைத்து நன்மைகள், தீமைகள் அறிந்தும் ஒன்றுமே தெரியாதவரைப் போல விருந்துக்கு வரச் சம்மதித்தார்.

கிருஷ்ணரும், தன் பரிவாரங்களுடனும் தன்னைச் சேர்ந்த சிற்றரசர்களுடனும் வந்தார். துரியோதனன், வாயிற் காவலர்களிடம் கிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று கட்டளையிட்டிருந்தான். அதனால் கிருஷ்ணரை மட்டும் வாயிற்காவலன் உள்ளே அனுமதித்தான். 

கிருஷ்ணரும் சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார். கிருஷ்ணரை விருந்தினராக ஏற்று அவையில் அனைவரும் வரவேற்றனர். கிருஷ்ணரின் மேல் பேரன்பு கொண்டது போல் நடித்து துரியோதனன் அவரை வரவேற்றான். கிருஷ்ணரிடம் தங்களுக்கென்றே அமைக்கப்பட்ட ஆசனத்தின் மேல் அமர்ந்து எங்களை கௌரவிக்க வேண்டும் என்று வஞ்சகத்தோடு அமைத்த ஆசனத்தின் மேல் அமரக் கூறினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக