Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

கீசகனை வதம் செய்யும் பீமன்...!

கீசகன், மத்சய நாட்டு அரசன் விராடனின் பட்டத்து ராணி சுதேட்சணையின் தம்பி. இவன் பயங்கர பலசாலி. அந்நாட்டின் தலைமைப் படைத்தலைவனும் ஆவான். ஒரு நாள் கீசகன், சுதேட்சணையை காண அவளது அந்தப்புர மாளிகைக்கு வந்தான். அங்கு பணிப்பெண்ணாக இருந்த திரௌபதியை(சைரந்தரி) கண்டான்.

ஆகா! இவ்வளவு அழகா! நான் இதுபோன்ற அழகை வேறு எங்கும் கண்டதில்லையே என நினைத்தான். திரௌபதியின் மேல் காதல் கொண்டான். திரௌபதியிடம் தன் காதலை தெரிவித்தான். திரௌபதி, நான் திருமணமான பெண் எனக் கூறி மறுத்துவிட்டாள். ஆனால கீசகன் திரௌபதியை விடாமல் துரத்திக் கொண்டே இருந்தான்.

திரௌபதி, தாங்கள் இவ்வாறு என்னிடம் தகாத முறையில் நடக்கக்கூடாது என எச்சரித்தாள். உடனே கீசகன் சுதேட்சணையிடம் சென்று தான் சைரந்தரியை(திரௌபதி) விரும்புகிறேன். 

அவள் என் ஆசைக்கு இணங்க மறுக்கிறாள். அவளை எனக்கு அடிப்பணியச் சொல் எனக் கூறினான். சுதேட்சணை கீசகனிடம், தம்பி! நீ அவளை தீண்டினால் அவளது கணவன்மார்கள் உன்னை கொன்று விடுவார்கள் என எச்சரித்தாள். 

இதற்கு கீசகன் அஞ்சுவதாக தெரியவில்லை. சைரந்தரியை(திரௌபதி) என்னுடைய மாளிகைக்கு மதுவை கொண்டு வரச் சொல் எனக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். சுதேட்சணையால் இதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை.

சைரந்தரியை(திரௌபதி) அழைத்து கீசகன் மாளிகைக்கு மதுவை எடுத்துச் செல் எனக் கூறினாள். சைரந்தரி(திரௌபதி) கீசகன் தவறாக நடக்க முயல்வதாக சுதேட்சணையிடம் தெரிவித்தாள். ஆனால் சுதேட்சணை, நீ கீசகன் மாளிகைக்கு மதுவை எடுத்துச் செல் இது எனது கட்டளை எனக் கூறினாள். 

சுதேட்சணையின் கட்டளைக்கு இணங்க திரௌபதி கீசகன் மாளிகைக்கு மதுவை எடுத்துச் சென்றாள். திரௌபதியை கண்ட கீசகன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான். திரௌபதி அவனிடம் இருந்து தப்பிக்க எவ்வளவோ முயற்சி செய்தாள். கீசகன் அவளை விடாமல் துரத்தினான். கீசகனிடம் இருந்து தப்பிச்சென்ற திரௌபதி அரண்மனை சபைக்கு சென்றாள்.

அங்கு தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறினாள். ஆனால் கீசகனை கண்டு பயந்த விராட அரசர், எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். பாண்டவர்களும் மாறுவேடத்தில் இருந்ததால் தங்களின் கோபங்களை வெளிக்காட்டி கொள்ளாமல் இருந்தனர். 

தன்னை காப்பாற்றிக் கொள்ள நினைத்த திரௌபதி, இதற்கான வழியை தேடி யாருக்கும் தெரியாமல் பீமனை சந்தித்தாள். பீமன் திரௌபதியிடம், அதற்கான யோசனை ஒன்றை கூறினான். திரௌபதியும் அதை இன்றிரவே செயல்படுத்த நினைத்தாள். உடனே கீசனிடம் சென்று தான் தங்களின் காதலை ஏற்று கொள்வதாகவும், இன்றிரவு என் அறைக்கு வருமாறு கூறிவிட்டு சென்றாள்.

இதைக்கேட்டு கீசகன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். ஆனால் திரௌபதியின் அறையில், கீசகனுக்காக பெண்ணை போல் பீமன் காத்துக் கொண்டிருந்தான். இரவு நெருங்கியது. கீசகன் திரௌபதி அறைக்கு சென்றான். அங்கு பீமன் பெண்ணை போல் மெத்தையில் படுத்திருப்பதை திரௌபதி என நினைத்தான். 

உள்ளே மங்கிய வெளிச்சம். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்வு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான்.

அந்த உருவம் அசைந்தது. அதிலிருந்து எழுந்த பீமன், கீசகனுடன் போரிட்டான். வெகு நேரம் இருவரும் சண்டையிட்டனர். கடைசியில் பீமன், கீசகனை தரையோடு தரையாக தேய்த்துக் கொன்றான். பீமனை தடுக்க பல காவாலாட்கள் வந்தனர். 

பீமன் அவர்களையும் கொன்று வீழ்த்தினான். பொழுது விடிந்தது. கீசகன், மாண்டு விழுந்திருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். திரௌபதியிடம் தவறாக நடந்துக் கொண்டதால், திரௌபதியின் கந்தர்வர்களான கணவர்கள் தான் கொன்று இருப்பார்கள் என நினைத்தனர். 

இதை கண்டு விராட நாட்டு அரசன் கவலைக் கொண்டான். மேலும் திரௌபதி இங்கு இருந்தால் ஆபத்து நேரிடுமோ என நினைத்து அரசக்குமாரிடம் சென்று சைரந்தரியை(திரௌபதி) வேலைவிட்டு அனுப்புமாறு கூறினான்.

திரௌபதி சுதேட்சணையிடம், சில மாத காலம் மட்டுமே நான் இங்கு தங்குவேன். அதன் பின் நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன். நான் இருக்கும் வரை உங்களுக்கு தீங்கு ஏதும் ஏற்படாது. எல்லாம் நன்மையாகவே நடக்கும். 

கந்தர்வர்களால் இனி யாருக்கும் தீங்கு நேராது என்றாள். அதன் பின் சுதேட்சணையும் அங்கு தங்குவதற்கு சம்மதம் தெரிவித்தாள். பதின்மூன்று காலம் வனவாசம் முடியும் நேரம் நெருங்கிவிட்டது. இதனால் துரியோதனன் கலக்கம் கொண்டான். 

அஞ்ஞாத வானம் இருக்கும் பாண்டவர்களை எப்படியேனும் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறு பாண்டவர்களை கண்டுபிடித்து விட்டால் அவர்கள் நிபந்தனையை நிறைவேற்றவில்லை எனக் கூறி மறுபடியும் வனவாசம் அனுப்ப முடியும் என நினைத்தான். 

உடனே ஒற்றர்களை அழைத்து, பாண்டவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து வருமாறு கூறி அனுப்பினான். ஒற்றர்களால் பாண்டவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் பீஷ்மர் துரியோதனனிடம், இப்பொழுது வேண்டுமானால் பாண்டவர்கள் ஒளிந்து கொண்டிருக்கலாம், அவர்கள் நிச்சயம் ஒரு நாள் சூரியனை போல் வெளி வருவார்கள் எனக் கூறினார். 

இதைக் கேட்டு துரியோதனன் கோபம் கொண்டான். அப்பொழுது ஒற்றன் ஒருவன் துரியோதனனிடம், விராட நாட்டின் படைத்தளபதி கீசகன் கந்தர்வர்களின் மனைவியிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டதால் கொல்லப்பட்டான் என்னும் செய்தியை கூறினர். 

கீகசன் மிகவும் பலம் பொருந்திவன். அவனை பீமனால் மட்டுமே கொல்ல முடியும். அப்படியென்றால் திரௌபதியால் கீசகன் மாண்டுள்ளான் என்பதை அறிந்தான். இப்பொழுது பாண்டவர்கள் விராட நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தெளிவுப்படுத்திக் கொண்டான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக