Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 181

தடாதகை பிராட்டியார் ஆட்சியில் தர்மம், நியாயம், நீதி மற்றும் புண்ணியம் என அனைத்தும் தழைத்தோங்கின. பிராட்டியாரின் ஆட்சித் திறமை, நிர்வாக பொறுப்புகள் பற்றியும் வடமொழி புலவர்கள், அறிஞர்கள் என அனைவரும் சிறப்பித்திருந்தனர்.

பாண்டிய நாட்டில் அதிக திருத்தலங்களும், தர்மசாலைகளும் பெருகிக்கொண்டே இருந்தன. அறச் செயல்களையும், வேள்விகளையும் விருத்தி செய்யும் பொருட்டு அதற்கு தேவையான திரவியங்களை பெரும் அளவில் அளித்திருந்தார் தடாதகை பிராட்டியார்.

நாட்டு மக்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று அளவுக்கதிகமான கல்விச் சாலைகளையும் திறந்து நாட்டு மக்களின் அறியாமையைப் போக்க பல வியூகங்களை அமைத்து கொண்டிருந்தார். மக்களுக்கு இடையே உண்டான பிரச்சனைகளை தீர்க்கவும், அதற்கு உண்டான ஏற்பாடுகள் மற்றும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு என அனைத்து நடவடிக்கைகளும் தடாதகை பிராட்டியாரின் ஆட்சியில் சிறந்து விளங்கியது.

தடாதகை பிராட்டியாரின் ஆட்சியைப் பற்றி கூற எத்தனை கல்வெட்டுக்கள் என்பதனை எவராலும் அறிய இயலாத வகையில் இருந்து வந்தது.

மக்களின் துன்பங்களை போக்குதல் :

தடாதகை பிராட்டியாரின் ஆட்சி காலத்தில் மக்களின் துன்பங்கள் யாவும் விலகி, இன்பங்கள் யாவும் மலர துவங்கின. அதாவது கதிரவன் உதித்து இருளைப் போக்குவது போல உலகை ஈன்றெடுத்த அன்னையான பரமேஸ்வரியே கன்னிப் பெண்ணாக இருந்து ஆட்சிப்புரிந்து வருகின்றமையால் மக்களின் துன்பங்கள் யாவும் விலக துவங்கின.

தாயின் கவலை :

பிராட்டியார் செய்த காரியங்கள் தனக்கு மகிழ்ச்சி அளித்தாலும், தன் மகள் இன்னும் திருமண வயதை அடைந்தும் திருமணம் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றாரே என்ற கவலையுடன் காணப்பட்டார் காஞ்சனமாலை.

தன் தாயின் கவலையை உணர்ந்த பிராட்டியார் தாயிடம் கவலைக்கொள்ள வேண்டாம். திருமணத்திற்கான காலம் வரும் பொழுது நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறினார். நான் இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் என் ஆட்சிக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்றும், எட்டுத்திக்கிலும் என் கொடிகள் யாவும் பறக்க வேண்டும் என்றும், அதை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறி, அதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வெற்றி பெற்றே தீருவேன் என்றும் கூறி அவ்விடத்தைவிட்டு விரைந்து புறப்பட்டுச் சென்றார்.

போருக்கு புறப்படுதல் :

தடாதகை பிராட்டியாரின் எண்ணங்கள் மற்றும் கனவுகள் யாவும் அவர்களுடைய அமைச்சர்கள் மற்றும் படைத்தளபதிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டன. பின்பு, தனது ராஜ்ஜியத்தை விரிவடையச் செய்யும் பொருட்டு போர் புரிவதற்கான படை வீரர்களை தயார் நிலையில் இருக்குமாறு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. போருக்கு உதவியாக பல அரசர்களும், மந்திரி குமாரர்களும் பிராட்டியாரின் படைகளில் இணைந்து கொண்டனர்.

போருக்கான சங்குகள் ஒலிக்க, பல வாத்தியங்கள் முழங்க, படையில் இருந்த வீரர்கள் ஆரோகணிக்க, படையானது புறப்படத் துவங்கியது. மலைக் கூட்டங்களை போன்ற யானைப்படையும், கடல்களில் சீறி எழும் அலைகளைப் போன்ற குதிரைப்படை வீரர்களும், எதிரிகளை நடுங்க வைக்கக்கூடிய வகையிலும், பூலோகம் அதிரும் வகையிலும் கொண்ட காலாட்படை வீரர்களும், நுட்பமான முறையில் தாக்கக்கூடிய வீரர்கள் கொண்ட தேர்ப்படை வீரர்களும் பல்வேறு ஆயுதங்களை தாங்கிச் சென்றனர்.

இவ்விதமாக நான்கு படைகளும் அணிவகுத்து மதுரை மாநகரத்தில் இருந்து தடாதகைப் பிராட்டியாருடன் பல ராஜ்ஜியங்கள் மற்றும் எட்டு திக்குகளையும் வெற்றி கொள்வதற்காக புறப்படத் துவங்கின. ராஜ்ஜியத்திலிருந்து படையானது புறப்படுவதைப் பார்த்த பலரும் சமுத்திரமே நிலத்தின் மீது நடந்து செல்வது போல கண்டு வியந்தனர். எல்லையில்லா இந்த வானத்தையும், பிரபஞ்சத்தையும் வெற்றி கொள்ள சமுத்திரமே சினம் கொண்டு செல்வது போல படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் ஆரோகணம் இருந்தது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக