வியாழன், 2 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 182

படை வீரர்களின் மத்தியில் மீன் கொடி, புலிக்கொடி, விற்கொடி மற்றும் மயிர்ப் பீலிக் குடைகள் எல்லாம் சூழ பிராட்டியார் அணிவகுத்து சென்று கொண்டிருந்தார். முதலமைச்சர் சுமதி என்பவர் தடாதகை பிராட்டியாரின் எண்ண ஓட்டங்களை அறிந்து அதற்கு தகுந்தவாறு நால்வகைப் படைகளையும் அணிவகுத்து படைகளுக்குத் தேவையான உதவிகளையும் செய்து வந்து கொண்டிருந்தார்.

தங்களிடம் இருக்கும் படைகளைக் கொண்டு பூலோகத்திலுள்ள ராஜ்ஜியங்களை மட்டுமல்லாது தேவலோகம் முதலிய உலகங்களையும் நாம் வெற்றிகொள்ள வேண்டும் என்று தடாதகை பிராட்டியாரிடம் பணிந்து எடுத்துரைத்தாள். பூலோகத்தில் உள்ள மன்னர்களின் செல்வங்களை எல்லாம் தனதாக்கி கொண்டது மட்டுமல்லாமல் வடதேசத்து மன்னர்களான கஜபதி, தர்கபதி, நரபதி போன்ற மன்னர்களையும் வென்று அவர்களுடைய படைகளையும் தனது படைகளுடன் இணைத்து திறமையாக செயல்பட வைத்தார் பிராட்டியார்.

தேவலோகத்தில் போர் தொடங்குதல் :

பின்பு பிராட்டியார் தேவலோகத்தின் அதிபதியான இந்திரன் மீது போர் தொடுக்க தொடங்கினார். இந்திரன் தனக்கு எதிரில் இருப்பவர் யார்? என்பதை நன்கு உணர்ந்து கொண்டார். இவர்களிடம் போர் தொடுத்து எவராலும் வெல்ல இயலாது என்பதை உணர்ந்த இந்திரனும் போர்க்களத்திலிருந்து ஓடி மறைந்துவிட்டார்.

இந்திரன் மறைந்ததும் பிராட்டியார் தேவ மாதர்களையும், ஐராவதம் என்னும் இந்திரனின் வெள்ளை யானையையும், வெள்ளை குதிரைகளையும், காமதேனுவையும், அனைத்தையும் தரவல்ல கற்பக விருட்சத்தையும், இதர தேவர்களின் தொடர்பான அனைத்துப் பொருட்களையும் கவர்ந்து கொண்டு மண்ணுலகம் திரும்பினர்.

இந்திரலோகத்தின் அதிபதியான இந்திரனை வெற்றி கொண்டது போல எட்டு திக்குகளுக்கும் அதிபதிகளாக விளங்கக்கூடிய அஷ்டதிக் பாலகர்களில் மற்றவர்களான அக்னி, இயமன், திருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசான்யன் என அனைவரையும் எதிர்த்து போர் புரிந்து அவர்களையும் தனது படைகளின் மூலம் வென்று வெற்றிக்கொடியை நாட்டினார். அவர்களிடமிருந்து வந்த பல பொருட்களையும் கவர்ந்து பெற்றுக் கொண்டார்.

கைலாயம் செல்லுதல் :

அனைத்து லோகங்களையும் வெற்றி பெற்று பிடித்துவிட்டோம். இனி இருப்பது என்னவோ கைலாயம் ஒன்றே ஒன்றுதான். அதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்று இதுவரை அடைந்த வெற்றியின் மூலம் கிடைத்த நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கையுடன் கைலாயம் நோக்கி தனது பயணத்தை தொடங்கினார்கள். தடாதகை பிராட்டியாரின் படைவீரர்கள் ஆரவாரம் செய்து கொண்டே கைலாய மலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கைலாய மலையில் வீரர்கள் அணிவகுத்து வருவதை கண்ட கைலாயமலை காவலர்கள் தங்களது தலைமை தலைவரான நந்திதேவரிடம் இதை எடுத்துத்துரைக்க வேண்டுமென்று செல்லத் துவங்கினர். பின்பு, அவர்களின் தலைமை தலைவரான நந்திதேவரை கண்டு, அவரை வணங்கி அவரிடம் கைலாயம் நோக்கி படைகள் வந்து கொண்டிருக்கின்றன என்று நிகழ்ந்தவற்றை எடுத்துரைத்தனர். இங்கே நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்த நந்திதேவர் சிவபெருமானின் உள்ளக் குறிப்பையும் உணர்ந்திருந்தார். அதாவது காரணமில்லாமல் எதுவும் இங்கு நடைபெறுவது இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தார்.

கைலாய நாயகி மீண்டும் கைலாயம் அடைவதற்கான காலம் கனிந்து கொண்டிருப்பதை காவலர்கள் கொண்டு வந்த செய்திகளில் இருந்து புரிந்து கொண்டார். பின்பு, நந்திதேவர் படைகளை எதிர்க்க அதற்கு தகுந்த மாதிரியான பூதக்கணங்களை தயார் நிலையில் இருக்க ஆணையைப் பிறப்பித்தார்.

போர் தொடங்குதல் :

பூதக்கணங்களுக்கும், பிராட்டியாரின் படைகளுக்கும் இடையே கடுமையான போரானது உருவாகியது. அதாவது, இரு பெரிய மலைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போலவும், மிகப்பெரிய மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வது போலவும் இரு தரப்பினருக்கும் இடையே வலிமையான போரானது நடைபெற்றுக் கொண்டிருந்தது. பூதக்கணங்களை கொண்ட படைகளுக்கு பிராட்டியாரின் படைகள் சளைத்தவர் அல்ல என்பது போல இரு படைகளும் தங்களது முழுத்திறமைகளுடன் போரிடத் துவங்கின.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்