வியாழன், 2 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 183

போரானது இரு உலகங்களான தேவலோகம் மற்றும் அசுரலோகத்திற்கும் இடையே நடைபெறும் போரை விட மிகக் கடுமையாக இருந்தது. பிராட்டியாரின் படைகளுக்கு முன்னர் தேவர்கள் மற்றும் பாலகர்களின் படைகள் யாவும் தோல்வியைத் தழுவ துவங்கியது. அதாவது, நந்திதேவர் அனுப்பிய பூதக்கணங்கள் எறிந்த, அனைத்து ஆயுதங்களையும் தடாதகை பிராட்டியார் தன்னிடமுள்ள வஜ்ஜிராயுதத்தை கொண்டு அனைத்து ஆயுதங்களையும், அதனால் உண்டாகும் அபாயங்களை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விளைவுகளையும் தகர்த்து எறிந்தார்.

சிவகணங்கள் யாவும் நிகழ்வது என்னவென்று புரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தன. இதுவரை தங்களின் முன்னால் எந்தப் படையும் இவ்வளவு வலிமையுடன் இருந்ததில்லை. ஆனால், இந்த படைகள் மிகுந்த வலிமையுடன் இருப்பதைக் கண்டு அவர்கள் திகைப்புடன் நின்று கொண்டிருந்தன. படையை வழி நடத்திக் கொண்டிருப்பவர் சாதாரணமானவர் அல்ல என்பதை மட்டும் அவர்கள் அனைவரும் உணர்ந்திருந்தனர். எனவே மேற்கொண்டு இப்போரை நாம் தொடர்ந்தோமேயானால் விளைவுகள் அதிகமாக ஏற்படும் என்பதை உணர்ந்த சிவகணங்கள் பின்வாங்க துவங்கின.

ஏனெனில், இவர்களுக்கு முன்னால் படைகளை வலிமையுடன் நடத்திக் கொண்டிருப்பவர் அனைத்து சக்திகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் ஆதிபராசக்தி ஆவார். அவர்களின் சக்தியை ஒருவரை தவிர்த்து எவராலும் கட்டுப்படுத்தவோ அல்லது அழிக்கவோ இயலாது. தம்முடைய சிவகணங்களின் வலிமையும், ஆற்றலும் குறைந்து கொண்டே வருவதை கண்ட நந்திதேவரும் இனி இவ்விதமே சென்றால் நாம் தோற்பது என்பது உறுதியாகிவிடும் என்பதை அறிந்தவுடன் மிகுந்த கவலை அடைந்தார்.

பின்பு, தனது தலைவரான கைலாசபதியான சிவபெருமானைக் கண்டு அவரைப் பணிந்து வணங்கி அவரிடம் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்தையும் எடுத்துரைத்து இதற்கும் ஏதாவது மார்க்கம் உண்டா தேவா? என வினவி நின்று கொண்டிருந்தார். நந்தியின் கூற்றைக் கேட்ட சிவபெருமான் அழகிய புன்முறுவலுடன் நிகழ்ந்தவற்றை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தார்.

தேவியை காணுதல் :

சிவபெருமான் புன்னகையுடன் கரங்களில் தனது சூலாயுதத்துடன் ரிஷப வாகனத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு காட்சியளித்தார். அங்கு தடாதகைப் பிராட்டியார் சிவகணங்களை வெற்றி கொண்டு அவர்களை ஓட விரட்டி கொண்டிருப்பதையும், என்னை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்களை வென்றே தீருவேன் என்று மிகுந்த வீரத்துடனும், அழகுடனும் கூறிக்கொண்டிருப்பதை கண்டார் சிவபெருமான். தனது சக்தியின் சரிபாதியான தேவியின் உருவத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் நேரில் கண்டு புன்னகை பூத்த வண்ணம் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்தார் எம்பெருமான்.

போர்க்களத்தில் கரங்களில் ஆயுதம் ஏந்தி நின்றுகொண்டிருந்த எம்பெருமானை தடாதகைப் பிராட்டியார் நேருக்கு நேராக கண்டார். காண்போரை கவரும் தோற்றம் கொண்ட எம்பெருமானை கண்டதும் அவர்களின் உள்ளத்தில் ஒருவிதமான மாற்றம் தோன்றத் துவங்கியது. மதி சூடிய ஜடாமுடியைக் கொண்ட எம்பெருமானை கண்ட நொடிப்பொழுதில் தேவியின் கண் இமைகள் கூட மூடாத வகையில் எம்பெருமானின் தோற்றமானது தேவியின் மனதில் பதியத் துவங்கியது.

தேவியின் மனமாற்றம் :

பொன்னார் மேனியான சிவபெருமானின் கடைக்கண் பார்வையானது தேவியின் மீது பட்டதும் தேவியின் மனமானது மாறத் துவங்கியது. சிவபெருமானின் அருள் பார்வையானது தேவியின் மீது பட துவங்கியது. தேவியின் பிறப்பின்போது தோன்றிய அசரீரி கூறியது போன்றே தேவியின் உடல் பாவகம் மற்றும் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.

அதாவது பிறப்பின்போது மூன்று தனங்களுடன் காட்சியளித்த தேவி, எம்பெருமானின் அருட்பார்வையினால் அவரிடமிருந்து வந்த மூன்றாவது தனமானது மறையத் துவங்கியது. தனமானது மறையத் தொடங்கியதும் பிராட்டியாரின் மனதில் பெண்ணிற்கே உரிய அச்சம், மடம், நாணம் ஆகிய எண்ணங்கள் தோன்றத் துவங்கின.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்