Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 184

சிவபெருமானை காணும் வரை பலரை எதிர்த்துப் போர் புரிந்து வந்த தேவியாரும் எம்பெருமானை நேருக்கு நேராக பார்ப்பதைத் தவிர்த்து அச்சம், மடம் போன்ற பார்வைகளுடன் எம்பெருமானைக் காண தொடங்கினார். 

அதாவது, பரந்து விரிந்திருக்கும் ஐம்பூதங்களில் ஒன்றான விண்ணில் அழகிய மேகக்கூட்டங்களுக்கு இடையில் சூரியன் உதயமாகும் பொழுது மண்ணுலகில் இருக்கின்ற சூரியகாந்தி மலர் எவ்விதம் மலர்ந்து சூரியனை கண்டு மகிழ்கின்றதோ அதைப் போன்று தேவியார் தனது மணாளனை கண்ட மாத்திரத்தில் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லை இல்லாத வகையில் இருந்தது.

அதை அவர்களின் உடல் பாவகமே அங்கிருப்பவர்களுக்கு அரங்கேற்றம் செய்தது. தன்னவனை கண்ட நொடியில் பூமியில் தனது பாதங்களை கொண்டு அழகிய ஓவியங்களை வரைந்தார். அவர்களிடம் நிகழ்ந்த மாற்றத்தை நன்கு அறிந்து கொண்டார் அவர்களின் முதல் மந்திரியான சுமதி. சுமதிக்கு அசரீரி கூறியது நினைவு வர அம்மையாரை நோக்கி அரசியாரே... கொன்றை மாலையை அணிந்து கொண்டிருந்த இந்த சுந்தரமூர்த்தியான எம்பெருமானே... உங்களின் கணவர் ஆவார் என்று கூறினார்.

சுமதியின் சொற்களைக் கேட்டதும் அம்மையார் அடைந்த மகிழ்ச்சி என்பது எந்தவகையிலும் மிகைப்படுத்த முடியாத வகையில் அமைந்த வண்ணம் இருந்தன. அவர் தனது மனதில் பேரானந்தமும், மகிழ்ச்சியும் அடைந்த கணப்பொழுதாகும். எவரிடமும் எடுத்துரைக்க இயலாமல் தன்னவனிடம் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என எண்ணத் தொடங்கி அந்த கணப்பொழுதானது தேவியிடம் கரையாத நிமிடங்களாக இருந்து வந்தது.

என்னவளும் என்னவரும் :

வெகு தொலைவிலிருந்து காட்சியளித்தாலும் என்னவளின் மனதில் ஏற்பட்ட எண்ணங்களை அறிந்த சுந்தரமூர்த்தியான எம்பெருமான் தேவியாரின் அருகில் வந்து, எப்பொழுது நீ ராஜ்ஜியத்தை விரிவு செய்யும் பொருட்டு உனது ராஜ்ஜியத்திலிருந்து வெளிவரத் துவங்கினாயோ அந்தப் பொழுதில் இருந்து யாமும் உன்னை தொடர்ந்து வரத் தொடங்கினோம் என்று கூறினார்.

எம்பெருமானின் வார்த்தைகளை தேவியர் கேட்டதும் நாணம் காரணமாக என்னவரின் கண்களை காண தயக்கம் கொண்டவளாக அவரின் பாதங்களை கண்டு மகிழ்ச்சி அடைந்தார். என்னவளின் கண்களை பார்க்க விரும்பிய சிவபெருமான் என்னவளின் முகத்தை தனது கண் பார்வை படுமாறு தனது கரங்களினால் ஏந்தி... இனி வருகின்ற வேத ஆகமங்களில் கூறியுள்ளபடி சோமவாரத்தில் சுபமுகூர்த்த தினத்தில் யாம் உன்னை கரம்பிடித்து கொள்வோமாக என்று கூறினார்.

இக்கணமே உனது ராஜ்ஜியமான மதுரைக்கு திரும்பி செல்வாயாக என்று கூறி அருள் புரிந்தார். என்னவளை விட்டு பிரிய மனமில்லாமல் அவளை விட்டு பிரிந்து, மறைந்து சென்றார். எம்பெருமான் மறைந்ததும் தனது ராஜ்ஜியத்தை அடைவதற்கான பயணத்தை மேற்கொண்டார்கள் தடாதகை பிராட்டியார். ராஜ்ஜிய பயணங்கள் முழுவதிலும் எம்பெருமானை பற்றிய சிந்தனைகளும், தான் நேரில் கண்ட அவரின் தோற்றத்தையும் தனது விழிகளில் இருந்து அகற்ற இயலாமல் தனது மனக் கண்களால் கண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தார்.

இதைக்கண்ட முதல் மந்திரியான சுமதி தனது தோழி அனுபவித்து வரும் இன்ப வேதனையை கண்டு மகிழ்ச்சி கொள்வதா? அல்லது மனம் வருந்துவதா? என்று புரியாமல் திகைத்து நின்றார். பிராட்டியார் ராஜ்ஜிய பயணத்தை முடித்து எப்பொழுது தம் மனம் விரும்பும் என்னவனை காண்பேன் என்று கணப்பொழுது முழுவதும் காத்துக் கொண்டிருந்தார்.

சிறிது தூர பயணம் கூட நெடுந்தூரம் செல்லக்கூடிய கொடிய பயணமாக இந்தப் பயணம் இருக்கின்றதே என்று அவரின் மனமும் வேதனை அடைந்தது. தலைவனை காணாத தலைவிக்கு எதிலும் மனம் லயித்துச் செல்லாமல் தனிமையிலேயே என்னவனை நினைத்து கவலை கொண்டிருந்தார். தலைவனும் பிராட்டியாரிடம் நிகழ்ந்த மாற்றங்கள் அனைத்தையும் அறிந்து தனது அங்கத்தின் சரிபாதியை காணும் கணப்பொழுதிற்காக பொறுமையுடன் காத்துக்கொண்டிருந்தார்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக