Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 2 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 185

ராஜ்ஜியத்தை அடைதல் :

வெற்றி வாகை சூடி வரும் தனது மகளைக் காண பிராட்டியாரின் தாயார் ராஜ்ஜியத்திலும், அரண்மனையிலும் பல ஏற்பாடுகளை செய்த வண்ணம் அவர்களின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார். பின்னர் தனது ராஜ்ஜியத்தை வந்தடைந்தார் பிராட்டியார். தேவியை கண்ட அவரது தாயும் தேவியின் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை நன்கு அறிந்து கொண்டார். தேவியிடம் காணப்பட்ட இந்த மாற்றத்திற்கு அங்கு நிகழ்ந்தவற்றை முதல் மந்திரியான சுமதி, தேவியின் தாயிடம் எடுத்துரைத்தார்.

தனது மகளை மணக்க இருப்பவரை தானும் காண வேண்டும் என்ற ஆவல் அவர்களிடமும் அதிகரிக்கத் துவங்கியது. சுமதியோ...!! தேவியின் தாயிடம் எல்லாம் வல்ல சர்வலோக சஞ்சாரியான எம்பெருமானே தங்களின் மகளை மணக்க கூடியவராவார் என்று எடுத்துரைக்க, தனது மகளை மணக்க இருப்பவர் இவர்தான் என்பதை அறிந்ததும் தேவியின் தாய் அடைந்த மகிழ்ச்சி என்பது எவ்வகையிலும் எடுத்துரைக்க இயலாத, விண்ணுலகத்தையும் கடந்து சென்ற ஒரு பேரானந்தமாக அவர்களுக்கு இருந்து வந்தது.

மங்கள ஏற்பாடுகள் நடைபெறுதல் :

வேதம் பயின்ற அந்தணர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடுகளையும், அதற்கான சுபமுகூர்த்த நாட்களும் குறிப்பிடப்பட்டன. தேவியின் திருமண நாள் குறிக்கப்பட்டதும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ராஜ்ஜியத்தின் அனைத்து பகுதிகளிலும் செய்ய துவங்கப்பட்டன.

தேவியின் திருமணம் பற்றிய தகவல்கள் அனைத்து நாடுகளுக்கும் ஓலைகளின் மூலம் தெரிவிக்கப்பட்டு, அனைத்து அரசர்களும் திருமணம் நடைபெறும் நாளில் வருகை தருமாறு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டன.

மதுரை மாநகரம் எங்கும் தேவியின் திருமணம் பொருட்டு வீதி எங்கும் எழில் வண்ண பூக்களாலும், அழகிய கோலங்களாலும் நிரம்பி காணப்பட்டன. மதுரை மாநகரம் முழுவதும் புத்துயிர் பெற்று எழுந்திருப்பது போல மகிழ்ச்சியானது அனைத்து இடங்களிலும் நிரம்பி காணப்பட்டிருந்தன. தேவியின் திருமணம் குறித்து நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் தனது தேவியை கரம் பிடிப்பவரைக் காண அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்.

தேவியின் தாயாரோ தனது மகளின் திருமண விழாவானது மணிமுடி விழாவை காட்டிலும் மிகுந்த பிரம்மாண்டத்துடனும், பன்மடங்கு சிறப்பானதாகவும் திகழ வேண்டும் என்று ஆணைப் பிறப்பித்தார். நாட்டின் மக்கள் யாவரும் இவ்விழாவை எந்நாளும் மறக்க இயலாத வகையில் இருக்க வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் மிக சிறப்பான முறைகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதாவது, மதுரை மாநகரத்தின் தெருவெங்கும் அழகிய மலர்களையும், பன்னீரையும் கலந்து நறுமணம் வெளிவரும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் வாசனைப் பொடிகளும், மகிழ்ச்சியும் நிரம்பி காணப்பட்டிருந்தன. ஓலைகளால் செய்யப்பட்ட பந்தல்கள் ராஜ்ஜியம் எங்கும் போடப்பட்டு பந்தல்களில் அழகிய மலர்களை கொண்டு பல ஏற்பாடுகளும், பல அழகிய மலர்களும் தொங்கவிடப்பட்டிருந்தன.

கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு இருந்தன. தேவியின் திருமணத்தினால் மதுரை மாநகரம் எங்கும் மங்கள கோலமானது நிரம்பி காணப்பட்டது. திருமணம் நடைபெறும் இடமானது பல வேலைப்பாடுகளுடன், அழகிய வடிவத்துடன் காட்சி அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.

திருமண மேடையில் நவரத்தின கற்களால் செய்யப்பட்ட மாலைகள் யாவும் தொங்கவிடப்பட்டிருந்தன. வாசனையுடன் கூடிய எழில் மிகுந்த மலர்களால் செய்யப்பட்ட மாலைகளால் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்தின் இரு புறத்திலும் நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த பளிங்கு கற்களால் செய்யப்பட்ட யானைகள் நிற்கப்பட்டு இருந்தன.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக