Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்கு தயாராகுதல் !

கிருஷ்ணர் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றிருந்தபோது அங்கு நடந்தவற்றை வந்திருந்த மன்னர்கள் எல்லோரும் கிருஷ்ணரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டனர். தர்மர், அனைவரிடமும் தர்ம யுத்தமாக நடக்க இருக்கின்ற இந்தப் போரில் படைப் பலத்தைவிட ஆத்மாவின் பலத்தையே நான் பெரிதாகக் கருதுகிறேன் என்று கூறினான். 

உங்கள் எல்லோருடைய நல்ல மனதாலும் உதவியாலும் தான், என் ஆன்ம பலம் வெற்றி அடைய முடியும். எனது இந்த நம்பிக்கையை நிறைவேற்றி வைப்பது உங்கள் பொறுப்பு! என்று தர்மர் வந்திருந்த அரசர்களை நோக்கி மனமுருக வேண்டிக் கொண்டான். 

தர்மரின் வேண்டுகோளுக்கு மனமிறங்கிய மன்னர்கள், பாண்டவர்களுக்கு உதவுவதில் பெருமைப்பட வேண்டியவர்கள் நாங்கள், இந்த உயிரும் இந்தப் பிறவியும் பாண்டவர்களுக்கு உதவுவதற்காக அழியுமானால் அது எங்கள் பேறு ஆகும் என்றனர்.

தர்மர், இப்போதே வெற்றியை அடைந்து விட்டது போல பெருமிதத்தோடு அனைவருக்கும் நன்றி கூறினான். 

பின்பு அனைவரும் கூடிப் படைகளைத் தலைமை தாங்கி நடத்துவதற்கு ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தனர். வலிமையும், ஆற்றலும் கொண்ட படைகளை நன்கு ஆளும் திறமை உடைய சுவேதன் தலைவனாக நியமிக்கப்பட்டான். 

சுவேதன் தலைவனாக வந்ததால் அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். தலைவனான மகிழ்ச்சியில் சுவேதன் எழுந்து சபதம் செய்தான். துரியோதனன் படையில் பெரும் பகுதியை அழிப்பதற்கு நான் ஒருவனே போதும். போரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆவேசத்துடன் கூறினான். 

அனைவரும் மகிழ்ச்சியோடு கேட்டு கைதட்டி வரவேற்றனர். பாண்டவர்கள் போருக்கு தயாராகுவது போல கௌரவர்களும் படை ஏற்பாடுகளை விரைவாகச் செய்து கொண்டு இருந்தனர்.

கிருஷ்ணர் தூதராக வந்து குழப்பம் செய்து விட்டு சென்ற போதே போர் நெருங்கி விட்டது என்று துரியோதனன் புரிந்து கொண்டான். இனிமேலும், படை வலிமையையும், துணைவலிமையையும் பெருக்காமல் இருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்து உடனே தனக்குப் பழக்கமுள்ள அரசர்களுக்கெல்லாம் படை உதவி கோரி கடிதம் அனுப்பினான். ஆனால் அவன் அனுப்பிய கடிதத்தில் பெரிய தவறை செய்துவிட்டான். மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் பிறரிடம் உதவி கேட்கும் போது பணிவாக கேட்க வேண்டும். ஆனால் துரியோதனன் அனுப்பிய கடிதத்தில் வேலைக்காரனை மிரட்டிக் கட்டளையிடுவது போல ஆணவத்தோடும், அதிகாரத்தோடும் அவனுடைய கடித வாசகங்கள் இருந்தன.

அவனுடைய கடிதத்தை படித்த மன்னர்களுக்கு அவற்றில் இருக்கும் ஆணவத்தைக் கண்டு ஆத்திரம் உண்டானதே தவிர உதவி புரிய வேண்டும் என்ற விருப்பம் உண்டாகவில்லை. ஆனால் துரியோதனன் போல் ஆணவம் கொண்ட அரசர்கள் அவன் கட்டளையை ஏற்றுக்கொண்டு உதவிப் படைகளோடு புறப்பட்டு சென்றனர். துரியோதனனுடைய ஆணவத்தை எதிர்த்துப் போராட ஆற்றலில்லாத சிற்றரசர்களும் படையை திரட்டிக் கொண்டு வந்தனர். வலிமையும், ஒழுக்கமும், தன்மானமும் உள்ள பேரரசர்கள் அவனுக்கு ஆதரவாக வரவில்லை. அதனால் வழக்கம் போல துரியோதனன் சூழ்ச்சியில் இறங்கினான். பாண்டவர்களுக்கு மாமன் முறையுள்ள மத்திரபதி மன்னன் ருதாயனன் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரியவேண்டும் என்ற நோக்கத்தோடு தன் படைகளுடன் புறப்பட்டிருந்தான்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் வரும் வழி துரியோதனன் நாட்டைக் கடந்துதான் பாண்டவர்களை சந்திக்க நேரிடும் நிலைமை அமைந்திருந்தது. அதனால் துரியோதனன் அவர்களை நடுவழியிலேயே மறித்துத் தன்பக்கம் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று திட்டமிட்டான். அதற்காக ஒரு சதியும் செய்தான். மத்திரபதியின் படைகள் வருகிற வழியில் அப்படைகளுக்குச் உண்ண உணவும், நீரும் கொடுத்து உதவும் அறச்சாலைகள் பலவற்றை ஏற்படுத்தினான். துரியோதனன் தன்னுடைய ஏற்பாடுகளைப் பாண்டவர்கள் செய்திருப்பதைப் போலத் தோன்றும்படிச் செய்திருந்ததால் மத்திரபதி படைகள் ஏமாந்தனர். தர்மர் தான் இத்தகைய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக எண்ணிக் கொண்டு துரியோதனன் விரித்து வைத்திருந்த சூழ்ச்சி வலையில் விழுந்து விட்டார்கள்.

 மத்திரபதி, உண்ண உணவும் நீரும் கொடுத்து உபசரித்தவர்கள் தர்மருடைய ஆட்கள் என்று எண்ணிக்கொண்டு, என்னுடைய இந்தப் பெரிய படைகளும், நானும் உங்களுக்குத் துணையாகவே வந்திருக்கிறோம். இது சத்தியம் என்று அவர்களுக்கு உறுதிமொழி கூறிவிட்டான். துரியோதனன், மத்திரபதியிடம் சென்று மத்திரபதி மன்னா! நீ என்னுடைய உபசாரத்தை ஏற்றுக் கொண்டது மட்டும் அல்லாமல் எனக்கு உதவுவதாகச் சத்தியமும் செய்து விட்டாய்! இனிமேல் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மறந்துவிடு. போரில் எனக்கு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று துரியோதனன் கூறிய போதுதான் தான் அறியாமையால் ஏமாந்து விட்டதை நினைத்து மனம் வருந்தி வாடினான். பாண்டவர்களுக்கு படைத் துணையாக வந்தவர் விதிவசத்தால் கௌரவர்களுக்குப் போரில் துணையாக இருக்க நேர்ந்தது.

ஏற்கனவே துரியோதனன் வசமிருந்த துரோணர், சல்லியன், அசுவத்தாமன், கர்ணன், சகுனி முதலியவர்களின் படைகளையும் சேர்த்தால் பதினொரு அக்குரோணிப் (படைகளின் வகுப்பைக் குறிக்கும் ஒரு பிரிவு) படைகளை சேனாதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். பிரதம தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார். இறுதியில் இரண்டு பக்கமும் படை ஏற்பாடுகள், படைத்தலைமை ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்தது. அக்காலத்தில் போர் தொடங்குவதற்கு முன்பு களப்பலி கொடுப்பது வழக்கமாக இருந்தது. களப்பலி என்பது போர்க்களத்தில் வெற்றி வேண்டி ஒரு நபரையோ அல்லது மிருகத்தையோ பலி கொடுப்பது ஆகும். களப்பலி என்பது போருக்கு செல்பவர்களின் இதயத்தின் உறுதிக்கும் ஊக்கத்திற்கும் ஒரு பெரும் சோதனை ஆகும். களப்பலி விஷயமாகத் துரியோதனன் பீஷ்மரைக் கலந்து ஆலோசனை நடத்தினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக