ஒரு கிராமத்தில் மாலை வேளையில் உழவர்கள் வயல்களில் வேலை செய்து முடித்து, அவரவர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சுட்டிப் பையன் ஒருவன், தன் அம்மாவுடன் நடந்து சென்றபோது, அழகிய பட்டாம்பூச்சிகளைக் கண்டு, அவற்றைப் பிடிக்க எண்ணி, அவற்றின் பின்னால் ஓடினான். பட்டாம்பூச்சியைப் பிடிக்கும் ஆர்வத்தில் அந்த சுட்டிப் பையன், தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சுட்டிப் பையனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
அம்மா... அம்மா... எங்க அம்மாவிடம் யாரேனும் கூட்டிச் சென்று விடுங்களேன்! என கதறி அழுதுக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த ஒரு உழவர், சுட்டிப் பையனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
அவனிடம், நீ யாருப்பா? ஏன் இங்கே தனியாக நின்று அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு, அந்த சுட்டிப் பையன், நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவைத் தொலைத்து விட்டேன். அம்மா வயலில் வேலை செய்து முடித்து விட்டு, வீட்டிற்கு போய்க் கொண்டிருக்கிறார். எனக்கு இங்கிருந்து திரும்பிப் போக வழி தெரியவில்லை என்று கூறினான். அவனை சமாதானப்படுத்திய உழவர், சரி, பயப்படாதே! நான் உன் அம்மாவிடம் கூட்டிச் செல்கிறேன். சரி, உன் அம்மா எப்படி இருப்பாங்கன்னு சொல் எனக் கேட்டார்.
அதற்கு எங்கம்மா மிகவும் அழகாக இருப்பாங்க. இந்த ஊரிலேயே அவர்கள் தான் அழகு! என பெருமையுடன் பதிலளித்தான் சுட்டிப் பையன்.
உழவர், அந்த சுட்டிப் பையனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரில் மிகவும் அழகான ஒரு பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே தம்பி, இவங்க மிகவும் அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சுட்டிப் பையன் பதிலளித்தான்.
பிறகு வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் பார்த்தார். கண்டிப்பாக இவர்கள் இரண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று எண்ணிய உழவர், சுட்டிப் பையனிடம் கேட்டார். இல்லை, எங்க அம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க! என்று உறுதியாகக் கூறினான்.
அப்போது எதிரில் ஒரு பெண் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்! என சந்தோஷமாக உரக்கச் சொன்னான்.
அச்சுட்டிப் பையனின் அம்மா, கருப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் இருப்பதைப் பார்த்த உழவர், அந்த ஊரே அதிரும் படி சிரித்தார். இதுவா உங்க அம்மா? இவங்களையா அழகுன்னு சொன்னாய்? என்று சுட்டிப் பையனை கேட்டார்.
அதற்கு சுட்டிப் பையன் மிகவும் பெருமையாக, ஆமாம். எங்க அம்மா என்னை மிகவும் பாசமா பாத்துக்குவாங்க. எல்லோரிடமும் அன்பா நடந்துக்குவாங்க. அதனால் எங்க அம்மா தான் உலகத்திலேயே மிகவும் அழகானவங்க! என்று பதில் சொல்லி விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான்.
தத்துவம் :
அழகு என்பது முகத்தில் தெரிவது அல்ல. அன்பால், பாசத்தால் உணர்வது தான் அழகு. இந்த ஈடு இணையற்ற அழகை நம் தாயின் மூலம் காணலாம். இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது தாய் மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக