Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 25 ஏப்ரல், 2020

அனுமன் கணையாழியை கொடுத்தல்!

இராமர், அவரின் அடையாளமாக என்னிடம் இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்குமாறு கூறினார். அனுமன் தன் மடியில் வைத்திருந்த கணையாழியை சீதையிடம் கொடுத்தான். கணையாழியை பார்த்த சீதை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கணையாழியை பார்த்த சீதை, இராமரின் நினைவால் மிகவும் வருந்தினாள். அனுமன் சீதையிடம், அன்னையே! தாங்கள் என் தோள்மீது ஏறிக் கொள்ளுங்கள். நான் தங்களை இராமரிடம் ஒப்படைத்து விடுகிறேன். போகும் வழியில் அரக்கர்கள் யாரேனும் தடுத்தால் அவர்களை கொன்று விடுகிறேன். நான் தங்களை பார்த்த பிறகு, எப்படி தங்களை இத்துயரத்தில் விட்டுச்செல்வேன். அதுமட்டுமில்லை நான் இராமரிடம் சென்று தாங்கள் படும் துயரத்தை எவ்வாறு கூறுவேன் என்றான்.

💍 அனுமன் சொன்னதை கேட்ட சீதை, ஆற்றல் மிகுந்த மாருதியே! உன் ஆற்றலுக்கு இச்செயல் ஏற்றது. ஆனால் ஒரு பெண்ணாகிய நான் இச்செயலை செய்யக்கூடாது என எண்ணுகிறேன். நீ என்னை தோளில் சுமந்து போகும் வழியில் அரக்கர்கள் யாரெனும் தடுக்கும்போது நான் கீழே விழவும் வாய்ப்பு உள்ளது. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் உன்னுடன் வந்தால் இராமனின் வில்லுக்கும், வீரத்திற்கும் வீண் பழி உண்டாகும். இராவணன் என்னை பிறர் அறியா வண்ணம் கவர்ந்து வந்தது போல் நீயும் என்னை பிறர் அறியா வண்ணம் அழைத்து செல்கிறேன் என்கிறாய். இதை மற்றவர்கள் நியாயம் என்று சொல்வார்களா? நான் என் இராமனை தவிர வேறு எந்த ஆண்மகனையும் தீண்ட மாட்டேன். இராமன் இங்கே வந்து அரக்கர்களை அழித்து இராவணனை வென்று என்னை அழைத்துச் செல்வது தான் சிறப்பு என்றாள்.

💍 இராவணனாலும் என்னை தீண்ட முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவன் தீண்டினால் அவனுடைய பத்து தலைகளும் வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். இராவணன் பெற்ற சாபத்தால் தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். பிறகு சீதை, மாருதியே! இராவணன் எனக்கு கொடுத்த கால அவகாசம் ஒரு வருடம். அதில் இன்னும் ஒரு மாதம் காலம் தான் உள்ளது. அதற்குள் இராமர் வந்து என்னை மீட்டு செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன். இதை நீ மனதில் வைத்துக் கொள் என்றாள். சீதை இப்படி பேசியதைக் கேட்ட அனுமன், தாங்கள் இறந்தால் இராமர் மட்டும் எவ்வாறு உயிர் வாழ்வார் எனக் கூறி சீதைக்கு ஆறுதல் கூறினான்.

💍 சீதை, தன் ஒளிமிக்க சூடாமணியை கையில் எடுத்து அனுமனிடம் கொடுத்தாள். அனுமன், இது என்ன? எனக் கேட்டான். நான் கொடுத்த அடையாளமாக இராமரிடன் இந்த சூடாமணியை கொடு. இந்த ஆபரணத்தை பார்த்தால் இராமருக்கு என் நினைவு மட்டுமின்றி, என் தாய் மற்றும் இராமரின் தந்தை தசரதனின் ஞாபகமும் வரும் என்றாள் சீதை. அனுமன், சீதையை வணங்கி சூடாமணியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான். பிறகு அனுமன் தாங்கள் நிச்சயம் இத்துன்பத்தில் இருந்து மீள்வீர்கள். இராமர் தங்களை காப்பாற்ற பெரும்படையுடன் வருவார் என ஆறுதல் கூறினான். பிறகு அனுமன் சீதையிடம் ஆசியை பெற்றுக் கொண்டு அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக