Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஏப்ரல், 2020

அனுமன் இராவணனின் அவைக்கு அழைத்து வருதல்!

இந்திரஜித்தின் அரக்கர் படைகள் அனுமனை சூழ்ந்துக் கொண்டன. அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான். அனுமன் தன் பக்கத்தில் இருந்த ஆச்சா மரத்தை பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். 

அரக்கர் படைகள் அனைத்தையும் கொன்றான். பிறகு அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். 

இதைக்கேட்ட இந்திரஜித், உன் எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக் கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். அனுமன் மீது பாய்ந்த அம்புகளால் இரத்தம் வலிந்தது. 

அனுமன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன், இந்திரஜித்தின் தேரில் ஏறி அவனுடைய வில்லை பிடுங்கி ஒடித்து எறிந்தான்.

அனுமன் ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. 

இதனால் கோபங்கொண்ட இந்திரஜித் அனுமன் மீது ஆயிரம் பாணங்களை ஏவினான். அனுமன், இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். 

தரையில் விழுந்த இந்திரஜித் எழுந்து வானில் சென்றான். என்ன செய்வதென்று தெரியாத நிலையில் இந்திரஜித், அனுமன் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவ நினைத்தான். அதனால் இந்திரஜித் பிரம்மாஸ்திரத்திற்கு அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், செய்து சகல தெய்வங்களை வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான். 

பிறகு இந்திரஜித், ஒரு பெரிய வில்லை பிரம்மாஸ்திரத்தில் பொருத்தி அனுமன் மீது எய்தினான். பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழே விழுந்தான்.

பிறகு அனுமன் தன்னை கீழே சாய்த்தது பிரம்மாஸ்த்திரம் என்பதை உணர்ந்து கொண்டான். பிரம்மாஸ்திரத்திற்கு மதித்து கட்டுப்படுவது தான் சிறந்தது என நினைத்து கட்டுப்பட்டான். 

இதைப் பார்த்த இந்திரஜித், அனுமனின் அருகில் வந்து இவனுடைய வலிமையை ஒடிக்கி விட்டேன் என்றான். அதுவரையிலும் அனுமனை பார்த்து பயந்த அரக்கர்கள், ஓடி வந்து அனுமனை சூழ்ந்துக் கொண்டனர்.

 அனுமன் கட்டுண்டதை பார்த்து அரக்கர்கள் மகிழ்ந்தார்கள். பிறகு அரக்கர்கள் அனுமனை கயிற்றோடு கட்டி அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அனுமன் பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட செய்தியை அறிந்து சீதை மிகவும் வருந்தினாள். 

போகும் வழியில் சில அரக்கர்கள் அனுமனை பார்க்க பயந்தனர். சிலர் நீ கொன்ற என் மகனை திரும்பக் கொடு என்றனர். இன்னும் சிலர் நீ கொன்ற என் கணவரை திரும்ப கொடு என்றனர். இன்னும் சில அரக்கர்கள் அனுமனிடம் பணிந்து எங்களை மன்னித்து விடு என்றனர்.

சிலர் நீ கொன்ற என் தந்தையை திரும்ப கொடு என்றனர். அனுமன், அரக்கர்கள் பின் சென்றால் இராவணனை காண முடியும் என நினைத்து அமைதியாக வந்தான். 

அனுமனுடன் இந்திரஜித் தலைமையில் அரக்கர்கள் அரண்மனையை அடைந்தனர். இராவணனுக்கு அனுமன் கட்டுண்ட செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டது. உடனே இராவணன், அரக்கர்களிடம் அவனை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என ஆணையிட்டான். 

அனுமனை இராவணன் முன்பு நேருக்குநேர் நிறுத்தி வைத்தனர். இராவணனை பார்த்த அனுமனுக்கு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிந்து இவனை இப்பொழுதே கொல்கிறேன் என எண்ணினான். 

பிறகு பிரம்மாஸ்திரத்தை அறுத்தெறிவது தவறு என்பதை நினைத்து அமைதியானான். இவனோடு நான் போரிட்டால் சீதையின் நிலைமையை நான் எப்படி இராமனிடம் சொல்வேன் என நினைத்தான். ஆதலால் இராவணன் முன்பு ஒரு தூதனாக சந்திப்பது தான் சிறந்தது என நினைத்தான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக