சனி, 4 ஏப்ரல், 2020

துரியோதனனை எதிர்கொள்ளும் அர்ஜூனன்...!

பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம் முடியும் நேரம் நெருங்கி கொண்டு இருந்தது. உத்திர குமாரன் சாரதியாக இருக்க, அர்ஜூனன்(பிருகன்னளை) தேரில் நின்றுக் கொண்டு போர்க்களத்திற்கு வந்தான். 

இதை கவனித்த துரோணர், போரைக் கண்டு பயந்து திரும்பிய இவர்கள் மறுபடியும் திரும்பி வருகிறார்கள். இதற்கு முன் அந்த திருநங்கை பெண் தான் தேர் சாரதியாக இருந்தாள். இப்பொழுது உத்திர குமாரன் தேர் சாரதியாக இருக்கின்றான். 

திருநங்கை பெண் தேரில் நின்று கொண்டு வருகிறாள். இவள் வீரமும், கம்பீரமும் நிறைந்தவளாக இருக்கின்றாள். இவள் வைத்திருக்கும் காண்டீபம் அர்ஜூனனுடையது போல் இருக்கிறதே. அப்படியென்றால் வருகிறவர் அர்ஜூனன் தான் என உறுதிப்படுத்திக் கொண்டான்.

அஞ்ஞாத வாச நேரம் முடிய இன்னும் சில நாழிகை மட்டுமே இருந்தது. உத்திர சேனன் வேகமாக தேரை செலுத்திக் கொண்டு வந்து போர்க்களத்தில் நிறுத்தினான். 

அஞ்ஞாத வாசத்திற்கான காலநேரம் முடிந்துவிட்டதால் அர்ஜூனன்(பிருகன்னளை) ஊர்வசியை நினைத்துக் கொண்டு தனது அரவாணி வேடத்தை கலைத்தான். 

இதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். கர்ணன், அர்ஜூனனை இன்றே வீழ்த்துவேன் என முழக்கமிட்டான். துரியோதனன், படை வீரர்களே! யார் வந்தாலும் சரி அவர்களை எதிர்த்து போரிடுங்கள் என்றான். 

அர்ஜுனன், பல அம்புகளை எதிரி படையை நோக்கி ஏவினான். இதனால் பல வீரர்கள் மாண்டனர். அர்ஜூனனிடம் போரிட்டு மீள முடியாது என்பதை அறிந்த சில வீரர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

கர்ணன், அர்ஜுனனை நோக்கி அம்புகளை ஏவினான். அர்ஜுனனும் பல அம்புகளை கர்ணனை நோக்கி ஏவினான். இருவரின் அம்புகளும் நேராக மோதி பெரும் சப்தத்தை எழுப்பின. 

அர்ஜூனன், கர்ணனின் தேர்சாரதியை நோக்கி அம்பை எய்தினான். கர்ணனின் தேர் சாரதி அவ்விடத்திலேயே கீழே விழுந்தான். அதற்கு மேல் போர்புரிய முடியாததால் கர்ணன் போர்க்களத்தை விட்டு வெளியேறினான். 

துரியோதனன், அர்ஜூனனுடன் போர் புரிந்தான். அர்ஜூனன் பல அம்புகளை துரியோதனனை நோக்கி ஏவினான். அர்ஜூனனின் பலத்தை கண்ட துரியோதனன். இதற்கு மேல் போர்க்களத்தில் இருந்தால் தோற்று விடுவோம் என நினைத்து போர்க்களத்தை விட்டு அகன்று சென்றான்.

அதன் பின் துரோணரை நோக்கி அம்பை செலுத்தினான் அர்ஜூனன். அந்த அம்பு துரோணரை மரியாதை செய்யும் விதமாக இருந்தது. துரோணர், அர்ஜூனனிடம் போர் புரிய நெருங்கி வந்தார்.

தன் குருவான துரோணருக்கு மரியாதை செய்யும் விதமாக அர்ஜூனன் தேரை விட்டு இறங்கி தன் மரியாதையை செலுத்தினான். இதைக் கண்டு துரோணர் மகிழ்ச்சி அடைந்தார். குருவே! என்னால் தங்களிடமோ அல்லது தங்கள் மகனிடமோ போரிட இயலாது எனக் கூறி போர் புரிய மறுத்தான். 

துரோணர், அர்ஜூனா! நீ உன் குருவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து விட்டாய். இதை கண்டு நான் பெருமிதம் அடைகிறேன். ஆனால் நான் துரியோதனனின் அரண்மனையில் இருக்கின்றேன். அவனை காக்க வேண்டியது எனது கடமை. அதனால் நான் போர்புரிந்தாக வேண்டும் என்றார்.

அர்ஜூனன். குருவே! தங்களை எதிர்த்து என்னால் எவ்வாறு போரிட முடியும் என்றான். துரோணர், அர்ஜூனா! நீ விராட நாட்டை காப்பாற்ற வேண்டும். நான் அஸ்தினாபுரத்தை காப்பாற்ற வேண்டும். அதனால் நாம் இருவரும் போரிட்டுத்தான் ஆக வேண்டும். 

நீ என்னுடன் எதிர்த்து போரிட வேண்டும். அதற்கான அனுமதியை தருகிறேன் என்றார். அதன்பின் அர்ஜூனனும், துரோணரும் போரிட்டனர். இருவரும் சமமாக போரிட்டனர். 

அர்ஜூனனின் போர்திறன் துரோணருக்கு ஒருபடி மேல் இருந்தது. அர்ஜூனன், துரோணரின் தேர் சாரதியை வீழ்த்தினான். அதன் பின் தேரை உடைத்தெறிந்தான். இதற்கு மேல் போரிட முடியாத துரோணர் அங்கிருந்து அகன்று சென்றார்.

தன் தந்தை தோல்வியுற்று செல்வதை கண்ட அஸ்வத்தாமன், அர்ஜூனுடன் போரிட்டான். இருவரும் கடுமையாக போரிட்டனர். அர்ஜூனனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், அவ்விடத்தை விட்டுச் சென்றான். 

இவ்வாறே பீஷ்மர், கிருபாச்சாரியாரும் திரும்பிச் சென்றனர். அர்ஜூனன் அனைவரையும் புறம் தள்ளிய பின் உத்திர குமாரனுடன் விராட நாட்டுக்கு திரும்பிச் சென்றான். தென் திசைக்கு பசுக்களை காக்க சென்றிருந்த விராட நாட்டு மன்னன் அரண்மனைக்கு திரும்பி வந்தான். அங்கு இளவரசியிடம், நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்னும் செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.

அதன் பின் தனது மகன் உத்திர குமாரனை அழைத்தான். அப்பொழுது அரசகுமாரி, வடதிசையில் இருந்து துரியோதனன் நம் நாட்டை எதிர்த்து படையெடுத்து வந்ததால் உத்திர குமாரன் அவர்களுடன் போர் புரிய சென்றிருப்பதாக கூறினாள். 

அவள் சொல்லி முடிப்பதற்குள்ளேயே உத்திர குமாரனும், அர்ஜூனனும்(பிருகன்னளை) வெற்றிச் செய்தியுடன் அங்கு வந்தனர். அப்பொழுது தர்மர், விராட மன்னரிடம், போரின் வெற்றிக்கு காரணம் உத்திர குமாரனுக்கு உதவியாக சென்ற பிருகன்னளை தான் என்றான். 

இதைக் கேட்டு கோபம் கொண்ட விராட மன்னன், மாறுவேடத்தில் இருந்த தர்மரை, ஒரு அரவாணி என் மகனின் வெற்றிக்கு காரணமாக இருக்க முடியாது. உனக்கு போர் நுணுக்கங்கள் பற்றி தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்கவும் எனக் கூறி தன்னருகில் இருந்த பகடைக்காயை தூக்கி தர்மர் மீது எறிந்தான்.

இதனால் தர்மரின் நெற்றியில் இரத்தம் வலிந்தது. தர்மரும் ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தார். இதைப் பார்த்த திரௌபதி ஓடி வந்து தர்மருக்கு மருந்திட்டாள். இதைப் பார்த்த உத்திர குமாரன், தன் தந்தையை கண்டித்தான். தந்தையே! தாங்கள் இவர்களிடம் இவ்வாறு பேசுதல் கூடாது. 

இவர்கள் இல்லையென்றால் இன்று நம்மால் போரில் வென்று இருக்க முடியாது. தாங்கள் இவரிடம் மன்னிப்பு கேளுங்கள். இவர்கள் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? இவர்கள் பாண்டவர்கள். நமக்கு துணையாக இருந்தவர்கள் என்றான். இதைக் கேட்டப் பின் விராட மன்னன் மிகவும் மனம் வருந்தி தர்மரிடம் மன்னிப்பு கேட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்