Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

சிவபுராணம்‌..பகுதி 191

குண்டோதரன் எம்பெருமான் இட்ட ஆணையின் படி தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்து வெளிப்பட்டு வரும் தயிர் அன்னத்தை எடுத்து உண்ண துவங்கினார். அவர் கொண்ட பசிக்கு இணையாகவே தயிர் அன்னமானது தொடர்ந்து வெளிப்பட்டு கொண்டே இருந்தது. 

அன்னத்தை தொடர்ந்து உண்ட குண்டோதரனிடம் இருந்து வந்த பசியானது குறைய துவங்கியது. எம்பெருமானின் கருணையால் குண்டோதரனிடம் இருந்து வந்த பசியானது முற்றிலும் மறைய துவங்கியது.

அன்னக்குழியில் இருந்து வெளிப்பட்ட உணவினை உண்ட குண்டோதரனின் வயிரானது விரிந்து பெரிதாக துவங்கியது. அளவுக்கு அதிகமான உணவினை உண்ட மயக்கத்தால் என்ன செய்வது என்று அறியாமல் பூமியில் வீழ்ந்து புரண்டான். காலம் கடக்க அளவுக்கு அதிகமான உணவை உண்ட மயக்கத்தினால் நீர்வேட்கையும் ஏற்பட துவங்கியது.

குண்டோதரனுக்கு ஏற்பட்ட நீர்வேட்கையின் காரணமாக சத்திரத்தில் இருந்த அனைத்து நீரையும் குடிக்க துவங்கினார். சத்திரத்தில் இருந்த அனைத்து நீரையும் குடித்தும் குண்டோதரனின் நீர்வேட்கை குறையாது அதிகரித்த வண்ணமே இருந்து வந்தது. பின்பு, குண்டோதரன் மதுரையில் இருக்கும் அனைத்து நீர் தேக்கங்களையும் தேடி போய் அங்குள்ள அனைத்து நீரினையும் அருந்தினான்.

குண்டோதரனுக்கு ஏற்பட்ட நீர்வேட்கையின் காரணமாக மதுரையில் இருந்த அனைத்து நீர்நிலைகளும் நீரின்றி வற்ற துவங்கின. இவ்விதம் மாக்கள் அருந்த வேண்டிய அனைத்து நீரையும் பருகியும் குண்டோதரனுக்கு ஏற்பட்ட நீர்வேட்கை குறையாமல் மென்மேலும் அதிகரிக்க துவங்கின.

குண்டோதரன் பல இடங்களில் தேடியும் நீர் கிடைக்காமல் இறுதியில் சோமசுந்தரரிடம் சென்று ஐயனே...!! அடியானுக்கு பசிவேட்கையால் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி இப்போது நீர்வேட்கை அதிகரித்து உள்ளது. இந்நகரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள நீரினையும் பருகியும் என்னுள் ஏற்பட்ட நீர்வேட்கையானது குறையவே இல்லை. ஆகவே, என்னுள் ஏற்பட்டுள்ள நீர்வேட்கையை தணிக்க வேண்டும் என்று உரைத்து சரண் அடைந்தார்.

சோமசுந்தரரும் குண்டோதரன் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது ஜடா முடியில் குடிகொண்டிருக்கும் கங்கையை நோக்கி... கங்கையே!! மதுரை மாநகரின் அருகில் ஒரு பெரும் நதியாக விரைந்து ஓடி வருவாயாக என்று ஆணை பிறப்பித்தார்.

கங்கா தேவியும், எம்பெருமான் முன்பு தோன்றி வணங்கினார். முன்னொரு சமயத்தில் பகீரதன் பொருட்டு என்னைத் தீர்த்தமாக வெளியிட்டப்போது என்னுள் மூழ்கின்றவர்களின் பாவங்கள் யாவும் களையும் வரத்தை தாங்கள் அளித்தீர்கள். இப்போதும் நான் ஒரு ஆறாக பாய்ந்தால் என்னை கண்டவர்களுக்கும், என்னுள் மூழ்கியவர்களுக்கும் பக்தியும், அன்பும், கல்வியும், மெய்ஞானமும், வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும் என்று கங்கை வரம் வேண்டினாள். எம்பெருமானும் கங்கை தேவி வேண்டிய வரத்தை அருளினார்.

எம்பெருமானின் ஜடா முடியில் இருந்து வெளிப்பட்டு நதி உருவம் கொண்டு ஆகாயத்தில் இருந்து எவராலும் கட்டுப்படுத்த முடியாத வேகத்துடன் கூடிய ஒரு பெரும் நதியாக ஆரவாரத்துடன் பாயத் துவங்கினார். கங்கா தேவி சிறு ஆறாக மாறிப்பாய துவங்கிய வேகத்தில் பெரிய பெரிய மரங்களைப் பெயர்த்துக் கொண்டு வரத் துவங்கியது.

எவராலும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் பெருக்கெடுத்து பாய்ந்து கொண்டிருக்கும் நதியினை கண்டதும் எம்பெருமான் குண்டோதரனை நோக்கி இந்நதி நீரை பருகி உன் தாகத்தை போக்கி கொள்வாயாக என்று கூறினார்.

குண்டோதரன் நதியின் மத்தியில் சென்று இரு கைகளால் தண்ணீரை பருகினார். ஒரு வழியாக தாகம் தணிந்தார். நீர்வேட்கை தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினார். அவரது பாடல்களைக் கேட்ட சிவபெருமான், தனது பூதக்கணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவருக்கு அருளினார்.

சோமசுந்தரர், மதுரை நகரத்தை செங்கோல் செலுத்தி சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தார். குண்டோதரன் தாகம் தணித்த நதியானது வைகை நதி என வழங்கப் பெற்றது. சிவபெருமானுடைய திருமுடியில் இருந்து தோன்றிய நதியாகியதால் இது சிவகங்கை எனவும், சிவதீர்த்தம் எனவும், யாராலும் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் செல்வதால் இது வேகவதி எனவும், மதுரை மாநகரை மலை போல் சூழ்ந்து வருவதால் இது கிருதமலை எனவும் அழைக்கப்பெறுகின்றது.

சிவபுராணம் நாளையும் தொடரும்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக