தமிழக அரசு ஆர்டர் செய்திருந்த ரேபிட் டெஸ்ட் கிட்களில் 24,000 கருவிகள் இன்று சென்னை வந்தடைந்தது.
சீனாவில் இருந்து நேற்று டெல்லிக்கு கொரோனா தொற்றை கண்டறியும் 3,00,000 ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்கள் வந்தடைந்தன. இன்னும் ஒரு கப்பலில் அடுத்த வாரம் இந்தியாவுக்கு டெஸ்ட் கிட்கள் வரும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்த கருவிகள் பல்வேறு மாநிலங்களுக்கு பிரித்து அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தக் கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வரவில்லை. தமிழகம் ஆர்டர் செய்திருந்த 50,000 ரேபிட் டெஸ்ட் கிட்களில்தான், சென்னைக்கு நேரடியாக சீனாவில் இருந்து 24,000 கருவிகள் விமானம் மூலம் இன்று வந்து சேர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து பிரித்து அனுப்பப்படும். இன்று பிற்பகல் சுகாதாரத்துறை மூலம் பிரித்து அனுப்பப்பட உள்ளது.
முன்பு இந்த 24,000ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளும் மத்திய அரசு அனுப்பியது என்ற தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்தக் கருவிகள் அனைத்தும் தமிழக அரசு ஆர்டர் செய்திருந்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்து இல்லை. குணமாக்கும் மருந்துகளும் இல்லை. கொரோனாவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்று கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட் சீனா கண்டறிந்துள்ளது. இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அறிந்து அதன்பின்னர் பிசிஆர் டெஸ்ட் மூலம் துல்லியமாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முடியும்.
சீனாவில் இருந்து மேலும் 2-3 மில்லியன் கிட்கள் வரும் வாரங்களில் இந்தியாவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. சீனாவிடம் மத்திய அரசு மொத்தம் 7 லட்சம் கிட்களுக்கு ஆர்டர் கொடுத்து இருப்பதாக இருவேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை சரியான எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகாத குழப்ப நிலைதான் நீடித்து வருகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகியவை அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெஸ்ட் கிட் அவசியம் என்பதை இந்தியா உணர்ந்துள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் கிட்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் குஜராத்தில் இருக்கும் Voxtur Bio, டெல்லியில் இருக்கும் Vanguard Diagnostics, அரசின் ஹெச்எல்எல் ஆகியவற்றுக்கு கிட்கள் தயாரிக்க இந்திய மருத்துவக் ஆராய்ச்சிக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
இவை தவிர கொரியா, பிரான்ஸ், ஜெர்மன், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்தும் இந்த டெஸ்ட் கிட்களை வரவழைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் டெண்டர் கோரியுள்ளது.
இதற்கு முன்னதாக தமிழகத்திற்கு வந்த இந்த டெஸ்ட் கிட்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. இதில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இதற்கிடையே டாடா நிறுவனம் தமிழகத்துக்கு பிசிஆர் கருவிகளை கொடுத்து உதவியது.
எதற்கு ரேபிட் டெஸ்ட் கிட்?
இந்த டெஸ்ட்டுக்கு ரத்த மாதிரிகள் இருந்தால்போதும். சில மணி நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பது தெரிந்து விடும். இதையடுத்து செய்யப்படும் பிசிஆர் டெஸ்ட்டுக்கு தொண்டை, மூக்கில் இருந்து சளி எடுத்து சோதிக்கப்படும். இதில் வரும் ரிசல்ட் வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக