Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 29 ஏப்ரல், 2020

இந்திரஜித்தின் கோபம்!

அட்சய குமாரன் அனுமனிடம், இலங்கை நகரை நீ அழித்ததன் காரணமாக உன் இனத்தவர் இவ்வுலகில் எங்கு இருந்தாலும் அவர்களை நான் அழிப்பேன் என்றான். பிறகு அரக்கர் கூட்டம் அனுமனை சூழ்ந்துக் கொண்டது. பின் அவர்கள் அனுமன் மீது ஆயுதங்களையும், அம்புகளையும் எய்தினர். 

அனுமன் அவ்வரக்கர் படையுடன் தனியாக போர் புரிந்தான். அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். பின் அட்சய குமாரன் அனுமன் எதிரில் நின்றான். இருவரும் போர் புரிய தொடங்கினர். அட்சய குமாரன் தன் வாளை எடுத்து அனுமனை குத்த முற்பட்டான். அப்போது அனுமன் அந்த வாளை அட்சய குமாரனிடம் இருந்து பிடுங்கி உடைத்து எறிந்தான். 

பிறகு தன் இருக்கரங்களாலும் அவனை அடித்து உதைத்தான். வலி தாங்க முடியாத அட்சய குமாரன் அவ்விடத்திலேயே மாண்டு போனான். அரக்கர்கள் அலறிக் கொண்டு அரண்மனையை நோக்கி ஓடினர்.

அட்சய குமாரன் மாண்ட செய்தி மண்டோதரிக்கும், இராவணனுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த மண்டோதரி செய்வதறியாது இராவணனின் காலில் விழுந்து அழுதாள். அப்பொழுது இந்திரஜித் தன் மனைவிமார்களுடன் மகிழ்ச்சியாக இருந்தான். அவன் காதில் அரக்கர்கள் அழும் குரல் கேட்டது. 

உடனே அவன் தன் பக்கத்தில் இருந்த ஏவலர்களை பார்த்து இவ்வழுகை ஒலி எங்கிருந்து வருகிறது எனக் கேட்டான். அதற்கு ஏவலர்கள், ஒரு வானரம் அசோக வனத்தையும் அழித்து, கிங்கரர், ஜம்புமாலி, ஐந்து சேனைத் தலைவர்களையும் அழித்து விட்டது. கடைசியாக சென்ற இளவரசர் அட்சய குமாரனையும் கொன்று விட்டது. 

இதனால் அரக்கர்கள் மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றனர். தன் தம்பி அனுமனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டான்.

தன் தம்பியை நினைத்து இந்திரஜித் மிகவும் வருந்தினான். இந்திரஜித் தன் வில்லை பார்த்து, ஒரு வானரம் என் தம்பியை கொன்றதா? இல்லை இராவணனின் புகழை அல்லவா கொன்று உள்ளது என்றான். 

உடனே இந்திரஜித் இராவணனின் மாளிகைக்கு சென்று இராவணனின் திருவடியில் விழுந்து வணங்கினான். இராவணன் இந்திரஜித்தை கட்டி தழுவிக் கொண்டான். அரசே! அந்த குரங்கின் வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை அக்குரங்கிடம் அனுப்பி எமலோகத்திற்கு அனுப்புகிறீர்கள். 

அப்படி தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில் பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான் இந்திரஜித்.

இதைக்கேட்ட இராவணன், இந்திரஜித்துக்கு தன் ஆசியை கூறி விடை கொடுத்தான். பிறகு இந்திரஜித் அனுமனை நோக்கி வந்தான். போகும்போது இந்திரஜித் அனுமனின் ஆற்றலை எண்ணி பார்த்தான். பிறகு இந்திரஜித் தன் தம்பி இறந்த இடத்திற்கு சென்று பார்த்தான். 

அந்த இடத்தை பார்த்த இந்திரஜித்திக்கு அனுமனின் மேல் பெருங்கோபம் வந்தது. அனுமன், தொலைவில் மிகவும் கோபமுடனும், தன் தம்பியை இழந்த சோகத்துடன் வருவது இந்திரஜித் என்பதை கண்டுகொண்டான். பிறகு அனுமன், இதற்கு முன் என்னிடம் வந்து போரிட்ட அனைத்து அரக்கர்களையும் கொன்றுவிட்டேன். 

இப்போது வரும் இந்திரஜித் மிகவும் பலம் பொருந்தியவன். நான் அவனை கொன்றால் இராவணனை கொன்றதற்கு சமமாகும். அது மட்டுமில்லாமல் தேவர்களும் துன்பத்திலிருந்து மீள்வார்கள் என நினைத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக