Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

பாண்டவர்களுக்காக கிருஷ்ணரின் தூது !

கிருஷ்ணர், சகாதேவா! உன் சொற்படியே நீ என்னைக் கட்டிவிட்டாய். வெற்றி உனக்குத்தான். இப்போது என்னை விட்டுவிடு என்றார். ஆனால் சகாதேவன் பாரதப் போரில் எங்களுக்கு முழு உதவியும் புரிந்தால் மட்டுமே தங்களை விடுவிப்பேன் என்று கூறினான். 

சகாதேவா! கட்டாயம் உங்களுக்கு உதவுகிறேன் என்று கிருஷ்ணர் வாக்களித்தார். ஆனால் இங்கு நடந்த உரையாடலையும், நிகழ்ச்சியையும் யாரிடமும் கூறக்கூடாது என்று கிருஷ்ணர் கேட்டுக் கொண்டார். சகாதேவனும் அதனை ஒப்புக்கொண்டு தன்னுடைய பக்திச் சிறையிலிருந்து கிருஷ்ணரை விடுவித்தான். 

பிறகு அனைவரும் இருக்கும் இடத்திற்கு சகாதேவனும், கிருஷ்ணரும் சென்றனர்.

பின்பு பாண்டவர்களின் சார்பாக கிருஷ்ணர் தூதராக செல்வதற்கு சம்மதித்தார். கிருஷ்ணரின் முடிவைக் கேட்ட திரௌபதி கண்ணீருடன் முன் வந்து என்னை அவமானப்படுத்திய துரியோதனனை தோற்கடித்து நம் நாட்டை மீட்க வேண்டும். 

அவ்வாறு இல்லாமல் சமாதானமாக நம் நாட்டை பெற்றுக் கொண்டால் என் சபதத்தை நான் எவ்வாறு நிறைவேற்றுவேன். முடியாமல் இருக்கும் என் கூந்தலை துரியோதனன், துச்சாதனனின் இரத்தத்தைப் பூசி முடிவேன் என்று கூறிய என் சபதம் எப்பொழுது நிறைவேறும் என்று கிருஷ்ணரிடம் அழுது புலம்பினாள். 

கிருஷ்ணா! நீதான் என் சபதம் வீணாகாமல் நிறைவேறுவதற்கு உதவி புரியவேண்டும், என்னைக் கைவிட்டு விடாதே என்று கிருஷ்ணரை வேண்டிக் கொண்டாள்.

பாண்டவர்கள் சார்பாக கிருஷ்ணர் சமாதானமாக தூதராக செல்ல புறப்பட்டார். பலவகை மரியாதைகளோடு கிருஷ்ணரை பாண்டவர்கள் தூது அனுப்பினார்கள். கிருஷ்ணரும் அஸ்தினாபுரம் சென்றார். அஸ்தினாபுரத்தை அடைந்த பின்பு, துரியோதனனுக்கு தன்னுடைய வரவை சொல்லி அனுப்பினார். 

துரியோதனனும் கிருஷ்ணரின் வரவை எதிர்ப்பார்த்து சிறப்பு ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். ஆனால் அங்கிருந்த சகுனி துரியோதனனிடம் நீ உயர்குலத்தில் பிறந்த பேரரசன். கிருஷ்ணன் இடைக்குலத்தில் பிறந்த சிற்றரசன். நீ சென்று கிருஷ்ணரை அழைத்து வந்து உன் பெருமைக்கு இழுக்கை ஏற்படுத்திக் கொள்ளாதே என்று தடுத்து விட்டான்.

இதை அறிந்து கொண்ட திருதிராட்டினன் கிருஷ்ணரின் வரவை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டது போல நடித்தான். விதுரரை அழைத்து தேர், யானை, குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் கிருஷ்ணருக்கு பரிசுப் பொருளாக வழங்க வேண்டும் என்றும் வரவேற்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினான். 

இதைக் கேட்ட விதுரர் கிருஷ்ணர் இத்தகைய ஆடம்பரங்களை விரும்ப மாட்டார் என்று கூறினான். அதன் பின் விதுரர், துரோணர் முதலிய பெரியோர்கள் கிருஷ்ணரை சிறப்புடன் வரவேற்று அழைத்து வந்தனர். துரியோதனன் தன்னை அவமதிக்கிறான் என்பதை புரிந்து கொண்ட கிருஷ்ணர், அவன் அரண்மனைக்கு செல்லாமல் விதுரனுடைய அரண்மனைக்கு சென்று விருந்தினராக தங்கினார். குந்தி கிருஷ்ணரை வரவேற்று வேண்டிய உபசரிப்பை செய்தாள்.

பின்பு, துரியோதனன் கிருஷ்ணரை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான். ஆனால் கிருஷ்ணன் அதனை ஏற்கவில்லை. நான் வந்த காரியம் முடிவடையாமல் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார். 

கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நடுநாயகனாக இருக்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராக எண்ணுகிறீர்கள் என்று துரியோதனன் கேட்டான். அதற்கு கிருஷ்ணன் பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடப்பவர்கள். ஆனால் நீங்களோ! தர்மத்தை நிலைநாட்டும் அவர்களை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். 

நான் எப்போதும் தர்மத்தின் பக்கம் தான் இருப்பேன். தர்மத்திற்கு எதிரியாக இருப்பவர்கள், எனக்கும் எதிரிகள் தான்.

அதனால் நீங்களும் எனக்கு பகைவர்கள். ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன் என்று கூறிவிட்டார். துரியோதனனின் விருந்தை ஏற்க மறுத்த கிருஷ்ணர் அவர்களின் அவைக்கு தூதுவராய் சென்றார். திருதிராஷ்டிரனை பார்த்து துரியோதனனுக்கு அறிவுரைக் கூறுமாறு கேட்டார். 

அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் திருதிராஷ்டிரன் தன் இயலாமையைக் கூறினான். பின்பு கிருஷ்ணர் துரியோதனனைப் பார்த்து பேசத் தொடங்கினார். 

உனது தந்தையும் மற்றும் உன்னுடன் இருக்கும் அனைவரும் நீங்கள் பாண்டவர்களுடன் போர் புரியாமல் சேருவதையே விரும்புகின்றனர். ஆனால் நீயோ அதைக் கேட்காமல் போர் புரிவேன் என்று நினைத்தால் பெரும் துன்பத்தை அனுபவிப்பாய் என்று கிருஷ்ணர் கூறினார்.

பீமனையும், அர்ஜுனனையும் வென்றால் மட்டுமே உனக்கு உண்மையான வெற்றி கிடைக்கும். ஆனால் அவர்களை வெல்ல உனக்கு பக்கபலமாக யாரும் இல்லை. உன்னுடைய குலத்தை அழித்து பழிபாவத்திற்கு ஆளாகி விடாதே!. 

பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு அவர்களுடன் சமாதானமாக இணைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ஆனால் துரியோதனன் கிருஷ்ணர் கூறியதை ஏற்கவில்லை. ஏற்கனவே கூறியது போலவே ஊசி அளவு நிலம் கூட தர முடியாது என்று உறுதியாக கூறிவிட்டான். மீண்டும் விதுரர், பீஷ்மர், துரோணர் அனைவரும் போர் மேற்கொள்ளும் எண்ணத்தை கைவிட்டுவிடு என்று துரியோதனனிடம் கூறினார்கள். ஆனால் எதையும் கேட்காத துரியோதனன் நான் பாண்டவர்களுக்கு அப்படி என்ன தீது செய்தேன் என்று கேள்வி எழுப்பினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக