Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

சிவபுராணம்..!பகுதி 197

அக்னி தேவவீரர்கள் அனுப்பிய அனைத்து அக்னி ஜுவாலைகளையும் ஒருசேர சேர்த்து அவர்கள் அனுப்பிய அக்னியை கொண்டே அக்னி வீரர்கள் மற்றும் அவர்களின் ஆயுதத்தை அழிக்கத் அசுரர்கள் தொடங்கினர். 

அக்னி வீரர்கள் யாவரும் அழிய துவங்கியதும் அக்னி சாம்ராஜ்ஜியமான ஜோதிஷ் மதி பட்டணம் முழுவதும் அசுரர்களின் வசம் வரத் தொடங்கியது. 

ஜோதிஷ் மதி சாம்ராஜ்ஜியம் முழுவதையும் கைப்பற்றிய பின்பு அடுத்ததாக அனைவருக்கும் மரணத்தை அளிக்கக்கூடிய பதவியான எமபதவியையும், எமலோகத்தையும் அடைய வேண்டும் என்ற எண்ணம் ஜலந்திரனின் மனதில் உருவாகத் துவங்கியது. 

பின்பு அக்னி நகரத்திலிருந்து தனது படைகளை எமலோகத்தை கைப்பற்ற அழைத்துச் செல்லத் துவங்கினான்.

கடலென இருந்து வந்த தனது அசுர படை வீரர்களை கொண்டு எமலோகம் முழுவதையும் முற்றுகையிட்டான் ஜலந்திரன். கால தேவனான தன்னையே எதிர்க்கும் தைரியம் இவனுக்கு உள்ளதா என்று மிகுந்த சினத்துடன் எமதர்மராஜன் தனது எமகிங்கரர்களுடன் சென்று ஜலந்திரனை நேருக்கு நேராக எதிர்க்கத் தொடங்கினார். 

தேவேந்திரன் மற்றும் அக்னி தேவர்கள் ஆகியோரை வென்ற அசுரப்படைகள் எமகிங்கரர்களை சாதாரணமாக எண்ணினர்.

இருப்பினும் எமகிங்கரர்கள் சாதாரணமானவர்கள் அல்ல என்பது போல அசுரப் படைகளை தாக்கத் துவங்கினர். அசுர படைவீரர்களும் மற்ற படைகளிடம் போரிட்டு வெற்றி கொண்டதை எண்ணி மிகவும் பயங்கரமாக தாக்க துவங்கினர். 

மரணத்தை அளிக்கக்கூடிய அவர்களுக்கு மரண வழிகளைக் காட்டும் வகையில் தாக்கத் துவங்கினர். இரு படை வீரர்களுக்கும் இடையே மிகவும் கொடுமையாக போர் நடைபெற்றது. 

ஜலந்திரன் எமனை நோக்கி அட முட்டாளே... உன்னைவிட வலிமையிலும், சக்தியிலும், படையிலும் வலிமை கொண்டவரான இந்திரன் மற்றும் அக்னி தேவர்களே என்னிடம் போரிட்டு தோற்று ஓடிவிட்டனர். அவ்வாறு இருக்கையில் நீ ஏன் என்னிடம் தேவையில்லாமல் போர் புரிந்து கொண்டு இருக்கின்றாய்.

என்னிடம் போர் புரிந்து சரணடைவதை காட்டிலும் உன்னிடம் இருக்கும் கால தண்டத்தை அமைதியாக கொடுத்துவிடு என்று கர்ஜித்தான். ஜலந்திரனின் கூற்றுக்கள் எமதர்மராஜனுக்கு சினத்தை அதிகப்படுத்தின. 

சினம் கொண்ட எமதர்மராஜனும் ஜலந்திரனை நோக்கி அட அற்பப் பதரே... வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கின்றாய்... நீ யாரிடம் போர் புரிய வந்துள்ளாய் என்பதை மறந்துவிட்டாயா? இப்போதே நான் உன்னை வெற்றிகொண்டு என்ன செய்கின்றேன் என்று பார்... என்று உரைத்துவிட்டு தனது கதாயுதத்தை ஜலந்திரனின் மீது ஏவினார்.

தன்னை நோக்கி வருகின்ற எமதர்மராஜனின் ஆயுதமான கதாயுதத்தை ஜலந்திரன் நொடியில் பொடியாக்கினார். இருவரும் தங்களிடையே இருக்கின்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். 

போரை மென்மேலும் கடுமையாக்கினர். எமனுடைய ஆயுதங்களால் ஜலந்திரனின் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு இருப்பினும் சற்றும் சளைக்காமல் ஜலந்திரன் போரிட்டுக் கொண்டே இருந்தான். 

இறுதியில் ஜலந்திரன் எமனை நோக்கி தனது கரங்களில் ஈட்டியை ஏந்திக் கொண்டு போர்க்களம் நடைபெறும் இடத்தில் இருந்து மறைந்து சென்றார்.

அவ்விடத்தில் ஜலந்திரன் தன்னை கண்டு பயந்துவிட்டான் என்ற நினைவில் எமன் பின்வாங்க சற்றும் எதிர்பாராமல் ஜலந்திரன் அவ்விடத்தில் தோன்றி தனது கரங்களில் உள்ள ஈட்டியால் எமனை தாக்கி, எமனை கீழே தள்ளி அவர் மார்பை நோக்கி கடுமையாக தாக்கினான். 

எதிர்பாராத இந்த தாக்குதல் மூலம் எமதர்மராஜன் செயலற்று போனார். மற்றவர்களுக்கு மரணம் அளித்து கொண்டிருந்த எமதர்மராஜன் முதன்முதலில் மரண வேதனை அனுபவித்தார். 

எமன் தன்னுடைய வாழ்நாளின் இறுதி நாளாக என்னும் அளவிற்கு ஜலந்திரனின் தாக்குதல் இருந்தது. தன்னுடைய வாழ்நாளில் இறுதி நொடிகளை என்னும் தருவாயில் ஜலந்திரன் எமனை தாக்கி கொண்டிருந்த ஈட்டியைத் தூர எறிந்துவிட்டு, மனதில் அச்சம் கொண்டிருக்கும் உன்னை கொல்ல மாட்டேன்.

நான் முன்னர் கூறியது போல் உனது கால தண்டத்தை என்னிடம் கொடுத்துவிட்டு சரணடைந்து விடு என்று கூறினான். இனியும் ஏதும் செய்ய இயலாத நிலையில் இருந்த எமதர்மராஜனும் தன்னுடைய கால தண்டத்தை ஜலந்திரனிடம் ஒப்படைத்து விட்டு அவனிடம் சரணடைந்தார். 

எமதர்மராஜனிடம் இருந்து கால தண்டத்தை வாங்கியதும் அதை பார்த்துவிட்டு எமதர்மராஜாவிடம் இனி நீ என்னுடைய பிரதிநிதியாக இருந்து உலகில் வாழும் மக்களுக்கான மரணத்தை அழிக்கும் தொழிலை நடத்தி வருவாயாக என்று கூறி கால தண்டத்தை அவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டான் ஜலந்திரன்.

சிவபுராணம் நாளையும் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக