Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

கிருஷ்ணர் விராட நாட்டிற்கு வருதல்...!

விராட நாட்டு மன்னன், தர்மரிடம் மன்னிப்பு கேட்டான். எங்களை வெற்றியடையச் செய்த தங்களுக்கு விராட நாட்டையே தருகிறேன் என்றான். என் மகளை அர்ஜூனனுக்கு மணமுடித்து தருவதாக கூறினான். 

அப்பொழுது அர்ஜூனன், அரசே! தாங்கள் இவ்வாறு கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. நான் அரசக்குமாரிக்கு இசையும், நடனத்தையும் கற்றுக் கொடுத்துள்ளேன். 

தங்கள் மகளை நான் என் மகளாக பாவித்தேன். அதனால் தங்கள் மகளை என்னால் மணமுடிக்க முடியாது. எனது மகன் அபிமன்யுவிற்கு தங்கள் மகளை மணமுடிப்பதற்கு சம்மதம் தெரிவிக்கிறேன் என்றான். இதைக் கேட்டு விராட அரசர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

திரௌபதி, பீமன், சகாதேவன், நகுலன் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டனர். அப்பொழுது துரியோதனனின் ஒற்றன் ஒருவன் அங்கு வந்தான். 

அரசே! தங்களின் 13 ஆண்டு காலம் வனவாசம் முடிவடையாத நிலையில் தங்களை கண்டுவிட்டதால் தாங்கள் மறுபடியும் வனம் செல்ல வேண்டும் என துரியோதனன் கூறி அனுப்பியுள்ளார் எனக் கூறினான். 

தருமர், ஒற்றனே! நாங்கள் எங்களது பதிமூன்று ஆண்டு காலம் வனவாசம் முடிந்த பின்பு தான் அனைவரின் முன்னிலையிலும் வெளிப்பட்டோம். அதனால் நாங்கள் மறுபடியும் வனம் செல்ல அவசியம் இல்லை என பதில் கூறி அனுப்பினான். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடித்துவிட்ட செய்தி கிருஷ்ணருக்கு தெரிய வந்தது.

உடனே, கிருஷ்ணர் தனது தங்கை சுபத்திரை, அவளின் மகன் அபிமன்யு, மற்றும் அவர்களுடன் மற்றொரு இளைஞனையும் அழைத்துக் கொண்டு விராட நாட்டிற்கு வந்தார். 

கிருஷ்ணரை கண்ட விராட நாட்டு மன்னன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். கிருஷ்ணருடன் வந்த இளைஞனை விராட நாட்டு மன்னன் பாசத்துடன் பார்த்தான். இதைக் கண்ட கிருஷ்ணர், அரசே! சுவேதன் உனது மகன் தான். இதை கேட்டதும் விராட நாட்டு மன்னனின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. 

சுவேதனை அன்பாக தழுவிக் கொண்டான். இவன் எங்களை பிரிந்து வெகு காலமாகிவிட்டது. தங்களுடன் எவ்வாறு வந்து சேர்ந்தான் என வினவினான்.

இவன் உலகை ஆள வேண்டும் என்று கடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இவனது முயற்சியால் ஒரு முறை எதிர்பாராத விதமாக தேவலோகத்திற்கு சென்று விட்டான். 

தேவலோகத்தில் ஒரு மனிதன் எதிர்பாராத விதமாக நுழைந்ததை கண்ட தேவர்கள் சுவேதனை மயிலாக மாறும்படி சபித்து விட்டனர். மயிலாக மாறிய பின்பு என்ன செய்வதென்று தெரியாத சுவேதன் உங்கள் அரண்மனைக்கு வந்துச் சேர்ந்தான். தாங்களோ வந்திருப்பது மயில் என நினைத்து துரத்திவிட்டீர்கள்.

அதன் பின் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றித்திரிந்த சுவேதன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். சிவபெருமானால், சுவேதன் பல அஸ்திரங்களை பெற்றான். அதன் பிறகு ஒரு நாள் எதிர்பாராத விதமாக சுவேதன் எனக்கு உதவி செய்தான். எனக்கு உதவி செய்த சுவேதனுக்கு வரம் அளிக்க விரும்பினேன்.

அவனிடம், உனக்கு என்ன வரம் வேண்டுமென்பதை கேள் என்றேன். சுவேதன், தன் சாபத்தை நீக்கும்படி வேண்டினான். நானும் சுவேதனுக்கு அவ்வரத்தை அளித்து சாபத்தை நீக்கினேன் என்றார்.

இதைக்கேட்டு விராட நாட்டு மன்னன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன் பிறகு தனது மகள் திருமணத்திற்கான ஏற்பாட்டை செய்தான். அபிமன்யு, விராட நாட்டு மன்னனின் மகள் உத்திரையின் திருமணம் அனைவர் முன்னிலையிலும் இனிதே நடைப்பெற்று முடிந்தது.

அதன் பிறகு பாண்டவர்கள், விராட மன்னரிடம் இருந்து விடைப்பெற்று சென்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக